தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Mar 6, 2019

பிடிக்கப்பட்ட சகல போதைப்பொருட்களும் ஏப்ரல் முதலாம் திகதி அழிக்க முடிவு!

நாட்டில் இதுவரை கைப்பற்றப்பட்ட சகல போதைப்பொருட்களையும் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி அழிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போது, ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

நீதிபதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் கட்டுநாயக்கவில் போதைப்பொருட்களை அழிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி ” சித்திரை வாக்குறுதி ” எனும் பெயரில் போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபடுவதற்காக முழு நாடும் இணையும் செயற்றிட்டமொன்று ஏற்பாடு செய்யப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அன்றைய தினம் காலை 8 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஒன்று கூடுமாறு அனைத்து அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத போதைப்பொருளை அடையாளங்காண்பதற்கு பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பத்துடனான உபகரணங்களை இலங்கைக்கு பெற்றுக்கொள்வதற்காக விலை மனு கோரப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் சில மாதங்களில் அந்த உபகரணங்களை நாட்டிற்கு கொண்டு வர இயலும் எனவும் ஜனாதிபதி ஊடக நிறுவன தலைவர்களுடனான சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படுமா என இதன்போது ஜனாதிபதியிடம் வினவப்பட்டுள்ளது.

குறித்த குற்றவாளிகளுக்கான மரண தண்டனை நிச்சயமாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலளித்துள்ளார். எவ்விதத் தடையுமின்றி போதைப்பொருளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு இலங்கைக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் வேண்டுகோள் விடுப்பதற்காக மூவரடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்றை ஜெனீவாவிற்கு அனுப்பவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதற்கமைய, கலாநிதி சரத் அமுனுகம, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் இந்த பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கவுள்ளனர்.

இந்த வருடம் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு இருந்தாலும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நோக்கும்போது முதலில் பொதுத்தேர்தல் நடத்தப்படலாம் எனவும் ஜனாதிபதி இந்த சந்திப்பில் கூறியுள்ளார்.

இது தேர்தல் வருடம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Post Top Ad

Your Ad Spot

Pages