தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Mar 7, 2019

பிரபாகரன் உருவான காரணத்தை நியாயப்படுத்தினார் மைத்திரி!

நல்லிணக்கம் தொடர்பாக பேசப்பட்டுவரும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரி, தான் பெற்ற அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். தான் சிறுவனாக இருந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களிடம் சிங்கள மக்கள் மோசமாக நடந்துகொண்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,

”ரயில் பயணம் தொடர்பில் எனக்கு அனுபவம் உண்டு. பொலனறுவையில் இருந்து கொழும்பிற்கு 7, 8 மணித்தியாலங்கள் பயணிக்கும் தபால் ரயில் சேவை உள்ளது. அந்த ரயில் அதிகாலை 3 அல்லது 4 மணிக்கு கொழும்பு கோட்டையை அடையும்.

எனது பெற்றோர், அப்போது சிறுவர்களாக இருந்த எம்மை அழைத்துக்கொண்டு பொலனறுவை ரயில்வே நிலையத்திற்கு செல்வார்கள். அப்போது கொழும்பிற்கு பயணிப்பதற்காக சுமார் 400, 500 பேர் ரயில் நிலையத்தில் குவிந்திருப்பார்கள். அந்த ரயில் மட்டக்களப்பிலிருந்து வரும்.

தேசிய நல்லிணக்கம் தொடர்பாக நாம் கதைக்கும் சந்தர்ப்பத்தில் நான் இந்த விடயத்தைக் கூறுகின்றேன். மட்டக்களிப்பிலிருந்து வரும் ரயிலில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் நிறைந்திருப்பார்கள். பொலனறுவையில் ரயிலில் ஏறும்போது எமக்கு ஆசனங்கள் இருக்காது. அப்போது சிங்கள மக்கள் என்ன செய்தார்கள்? ஆசனங்களில் சிறு குழந்தைகளுடன் உறக்கத்தில் இருக்கும் தமிழ் மக்களை அடித்து துரத்திவிட்டு அந்த இருக்கைகளில் சிங்கள மக்கள் அமர்ந்துகொள்வார்கள். இதனை நான் ஒருநாளோ, இரண்டு நாட்களோ பார்க்கவில்லை. பல தடவைகள் கண்டுள்ளேன்.

அப்போது பயத்தில் ‘ஐயோ சாமி’ என கத்திக்கொண்டு, அழுதுகொண்டு மலசலகூடங்களிலும் மறைவான இடங்களிலும் சிறு குழந்தைகளுடன் தமிழ் மக்கள் ஒளிந்துகொள்வார்கள். எமது மதிப்பிற்குரிய சிங்கள மக்கள் அந்த ஆசனங்களில் அமர்ந்துகொண்டு உறங்குவார்கள். இவ்வாறுதான் பிரபாகரன்கள் உருவானார்கள்” என்றார்.

Post Top Ad

Your Ad Spot

Pages