நெற் பயிர்செய்கையை நவீன மயமாக்கவுள்ளோம்...


வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை 30 இலட்சம் மெற்றிக்தொன் வரை நெல்
அறுவடையை உயர்த்த முடிந்துள்ளதாகவும் எதிர்காலத்தில் விவசாயத்தில் அதிக வருமானத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் முன்னேற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நீர்ப்பாசன மற்றும் விவசாயத் துறையை முன்னேற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அநுராதபுரம் ஸ்ரீமகாபோதியில் இடம்பெற்ற புத்தரிசி பெருவிழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் பிரதமர் மேலும் தெரிவித்ததாவது,

புத்தரிசி விழா 2000 அல்லது 3000 வருடங்களுக்கு மேல் நடத்தப்பட்டு வருகிறது. அது சிங்கள கலாசாரத்தின் ஒரு முக்கியமான அம்சமாகும். இலங்கை மக்கள் பிரதான உணவாக சோற்றைக் கொண்டுள்ளதால் இது வாழ்வாதாரத்தின் முக்கிய அடிப்படையாகவும் அமைந்துள்ளது.

தற்போதைய அரசாங்கத்தை வரி அறவிடும் அரசாங்கமென சிலர் கூறி வருகின்றனர். எனினும் வரலாற்றில் பராக்கிரமபாகு அரசர் உட்பட அரசர்கள் வரிகளை விதித்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கள அரசர்கள் காலத்தைப் போன்றே நாட்டில் நெல் உற்பத்தி அதிகரிப்பதற்கு டி. எஸ். சேனநாயக்க பாரிய திட்டங்களை மேற்கொண்டார். அவர் பழைய குளங்கள் பலவற்றை புனரமைத்தார்.

அதேபோன்று ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவும் மகாவலி திட்டத்தை ஆரம்பித்து விவசாயத்துறைக்கு பெரும் பங்களிப்பை செய்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரிய நீர்ப்பாசனத் திட்டமான மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டத்தை ஆரம்பித்துள்ளார். நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடர்பாக எமது அரசாங்கம் பெருமளவு நிதியை ஒதுக்கியுள்ளது.

2003 ஆம் ஆண்டு இலங்கையானது அரிசியில் தன்னிறைவு கண்ட நாடாக இருந்துள்ளது. எனினும் அதற்குப் பின்னர் நாட்டில் நிலவிய கடும் வரட்சி காரணமாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது.

தற்போது அந்நிலை மாற்றமடைந்து நமக்கு நீர்ப்பாசன வசதிகள் கிடைத்துள்ளன. கடந்த மூன்று வருடங்களாக நாம் வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் திட்டத்திற்கு முக்கிய கவனம் செலுத்தினோம். தற்போது வரட்சி குறைந்து காணப்படுகின்றது. மீண்டும் முன்னரைப் போன்று அதிகளவில் விவசாயத்தை மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
நெற் பயிர்செய்கையை நவீன மயமாக்கவுள்ளோம்... நெற் பயிர்செய்கையை நவீன மயமாக்கவுள்ளோம்... Reviewed by NEWS on April 08, 2019 Rating: 5