வில்பத்துவை வைத்து சிங்களவர்கள் இனவாதம் செய்யாதீர்கள் - வடக்கு தேரர்கள்

வில்பத்து வனப்பாதுகாப்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அரச அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தெற்கில் சில தரப்பினரால் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களால் மீளவும் இனவாதம் தலைதூக்கும் அவதானம் நிலவுவதாகவும், அவற்றினை உடனடியாக நிறுத்துமாறும் வடக்கின் தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா, ஸ்ரீ போதிதக்ஷினாராம இல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரதான தலைமைத் தேரர் வண. சியம்பலகஸ்வெவ விமலசர தேரர் தலைமையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த வண. சியம்பலகஸ்வெவ விமலசர தேரர்;

“..குறுகிய கால அரசியல் மற்றும் தனிப்பட்ட தேவைகள் ஆகியவற்றுக்காக தெற்கில் உள்ள சில தரப்பினரால் வில்பத்து காடு தொடர்பில் கடந்த காலம் பற்றிய அறியாமையினால் நிபந்தனையற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு நாட்டில் தேவையற்ற குழப்ப நிலையினை ஏற்படுத்த முயல்கின்றனர்.

வில்பத்து வனப்பகுதி அருகில் குடியிருந்த மக்கள் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் தமது குடியிருப்புக்களை விட்டும் விலகி சென்றது யுத்தம் காரணமாகவே.. யுத்தம் நிறைவுக்கு வந்ததும் தமது குடியிருப்புக்களுக்கு திரும்பும் போது காட்டினை சுத்தம் செய்ய வேண்டியது அவசியமே.. மற்றைய காரணம் தான், அன்று சென்ற மக்களை விட தற்போது இருக்கும் மக்கள் எண்ணிக்கையில் அதிகரிப்புதான்.. அது வழக்கத்திற்கு மாறானது அல்ல..

அவர்களது குழந்தைகள், பேரப்பிள்ளைகள் என பரம்பரை உள்ளது.. அவர்களை குடியமர்த்த வேண்டும். அதுவே அரசாங்கத்தின் உதவியின் கீழ் இடம்பெற்ற இந்த மீள்குடியேற்றமாகும்..

இவ்வாறு குடியேறிய மக்களது பொருளாதார நடவடிக்கைகளை கருத்திற் கொண்டுதான் அரசாங்கம் குறித்த பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.

இந்நடவடிக்கைகளை அனைவரும் மனிதாபிமானத்துடன் நோக்க வேண்டும். இப்பிரதேச மக்கள் படும் துன்பங்களை ஆராய்ந்த பின்னர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டும். அவ்வாறு இல்லாது, வேறு அணுகுமுறைகளில் நோக்கினால் அது இனவாதத்தில் தான் பயணிக்கும்.. இது தொடர்பில் நாட்டின் தலைமைகள் தங்களது அவதானத்தினை செலுத்த வேண்டும்..” என தெரிவித்திருந்தார்.

மேலும், குறித்த சந்திப்பில் வெலிஓய கிரிஇப்பன்வெவ விகாராதிபதி வண.பொலன்னறுவே விஜிதாலங்கார தேரர் உள்ளிட்ட தேரர்கள் குழுவும், வட.மாகாண சபையின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வி.ஜயதிலக உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில், வில்பத்து வனப்பாதுகாப்பு எனும் பெயரில் முன்னெடுக்கப்படும் இனவாத பிரச்சாரங்களை முழுமையாக நிறுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

– வன்னி. ரொமேஷ் மதுஷங்க
தமிழில் – R.Rishma
வில்பத்துவை வைத்து சிங்களவர்கள் இனவாதம் செய்யாதீர்கள் - வடக்கு தேரர்கள் வில்பத்துவை வைத்து சிங்களவர்கள் இனவாதம் செய்யாதீர்கள் - வடக்கு தேரர்கள் Reviewed by Ceylon Muslim on April 16, 2019 Rating: 5