தமிழர்கள் போல் முஸ்லிம்கள் செய்யவில்லை - ஹரீஸ் சபையில்உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலைத் தாக்குதலை மேற்கொன்ட பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய பெரும்பாலானவர்கள் குறுகிய காலத்தில் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பின் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதனை பாராளுமன்ற உறுப்பினர்கள் புரிந்துகொள்ள வேண்டும் அத்தோடு தமிழ், முஸ்லிம், சிங்கள பௌத்த மக்கள் எல்லோரும் ஒன்றினைந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப போராட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார். 


மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் புதன்கிழமை (8) பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 


இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அண்மையில் கிறிஸ்தவ மக்கள் மீது பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலினால் உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு காயமடைந்தவர்கள் மிக விரைவில் சுகமடைய பிரார்த்திக்கின்றேன். 


உண்மையில் தேசிய தௌஹீத் ஜமாஅத் என்னும் இந்த பயங்கரவாத குழு ஜனாதிபதி அவர்களுடைய கூற்றின்படி 150 அல்லது 200 பேருக்கு உட்பட்ட நபர்கள் இந்த பெரும் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள். இதனை இந்த நாட்டிலுள்ள எந்தவொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரோ, அல்லது முஸ்லிம் மக்களோ அங்கீகரிக்கவில்லை. அக்கொடூரத்தை மேற்கொண்ட அந்தக் குழுவை காட்டிக்கொடுப்பதற்கு இன்று முஸ்லிம் சமூகம் பாடுபடுகின்றது. 


கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் கடந்த வாரம் அந்த பயங்கரவாதிகள் ஒளிந்துகொண்டிருந்தபோது அவர்களை காட்டிக்கொடுத்தது அப்பகுதி முஸ்லிம் மக்களாகும். அந்த மக்களை கௌரவிப்பதற்காக அம்மண்ணிற்கு ஜனாதிபதி அவர்கள் சென்றுள்ளார்கள். 


இந்தளவுக்கு முஸ்லிம் சமூகம் விழித்துக்கொண்டிருப்பதை பாராளுமன்ற உறுப்பினர்கள் புரிந்துகொள்ள வேண்டும். விடுதலைப்புலிகள் போராடியபோது அவர்களை ஒழிப்பதற்கு இவ்வாறான ஒத்துழைப்பு தமிழ் மக்களிடமிருந்து கிடைக்கவில்லை. ஆனால் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பின் காரணமாக குறுகிய காலத்தில் இப்பயங்கரவாதிகளில் பெரும்பான்மையானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 


அப்பயங்கரவாதிகள் குழுவை ஒழிப்பதற்கு முஸ்லிம் இளைஞர்கள், முஸ்லிம் மௌலவிமார், முஸ்லிம் தலைமைகள் எல்லோரும் ஒரு அணியில் நின்று பாடுபடுவதனை கருத்திற்கொள்ளாது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தை தண்டிப்பதற்கு இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. 


சமயத்தை அடிப்படையாகக் கொண்டு 1988ஆம் ஆண்டு அஷ்ரப் அவர்கள் கட்சியை ஆரம்பித்தது பிழை என்று இன்று பேசுகின்றார்கள். அதற்கு முன்பே இந்த நாட்டில் சமயத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் காங்கிரஸ் என்றும், தமிழரசுக் கட்சி என்றும் எத்தனையோ கட்சிகள் இருந்தன அவற்றைப் பற்றி யாரும் பேசவில்லை. 


அஷ்ரஃப் அவர்கள் எதற்காக கட்சியை ஆரம்பித்தார் என்று புரிந்து கொள்ள வேண்டும். அன்று விடுதலைப்புலிகள் முஸ்லிம் சமூகத்தை தாக்கியபோது, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு முஸ்லிம்கள் அடிமையாக்கப்பட்டார்கள். இதற்கு எதிராக எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் அன்று போராடவில்லை. 


இந்நிலையில் இந்த நாடு ஒற்றையாட்சியின் கீழ் இருக்க வேண்டும், வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட வேண்டும், விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் இலங்கை வெற்றிபெற வேண்டும், முஸ்லிம் இளைஞர்கள் விடுதலைப் புலி இயக்கத்திற்கு சென்று சரணடையாமல் ஜனநாயகத்திலிருந்து போராட வேண்டும் என்பதற்காக 88ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரசை ஆரம்பித்து முஸ்லிம் மக்களை ஜனநாயகப்படுத்தியது மட்டுமல்லாது 17 வருட காலமாக ஆட்சிக்கு வர முடியாமல் தவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளித்து முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை 94 ஆம் ஆண்டு ஆட்சிக்கு கொண்டுவந்தது அஷ்ரப் என்பதை மறந்துவிடக் கூடாது. 


இன்று வரலாற்றை மறந்துவிட்டு சந்தர்ப்பத்திற்கு ஏற்றால்போல் 'விரும்பினால் வாழுங்கள் இல்லாவிட்டால் போங்கள்' என்று துமிந்த திசாநாயக்க கூறுகின்றார். இவருக்கு என்ன உரிமை இருக்கின்றது. நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள் இந்த நாட்டிற்கு எதிராக துரோகம் செய்யாதவர்கள்.


இந்த நாட்டின் முஸ்லிம்களுடைய வரலாறு அதேபோன்று இந்த நாட்டினுடைய வரலாறு என்பவற்றை எடுத்துக் கொண்டால் முஸ்லிம் சமூகம் மிக ஐக்கியமாக வாழ்ந்து இந்த நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக மிகவும் போராடிய ஒரு சமூகமாக காணப்படுகிறது. 


இன்று சகோதரர் அமைச்சர் றிசாத் பதியுதீனை பார்த்து ஒரு தற்கொலைதாரி என்று விமல் வீரவன்ச கூறுகின்றார். இதனை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். அவர் முஸ்லிம்களின் ஒரு பிரதிநிதி, இந்த உயரிய சபையில் அவரை ஒரு குண்டுதாரி என்று கூறுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். 


முஸ்லிம் விவாகரத்துச் சட்டம் என்பது குறிப்பாக திருமண விவாகரத்து சம்பந்தமாக இருக்கின்ற ஒரு சிறிய சட்டம். இதனை பயங்கரவாதத்திற்கு துணைபோகின்ற ஒரு சட்டம் போன்று இன்று சித்தரிக்கப்படுகின்றது. 150 கோடி மக்களைக் கொண்ட அந்த இந்திய நாட்டில் கூட எத்தனையோ பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் புர்கா இருக்கின்றது, இந்த திருமண சட்டம் இருக்கின்றது, இன்னும் எத்தனையோ உரிமைகள் இருக்கின்றன. ஆனால் மோசமான ஒரு அரசியல் சூழ்நிலை, கலாசாரம் இந்த நாட்டில் இன்று உருவாக்கப்படுகின்றது. 


அன்புக்குரிய பாராளுமன்ற உறுப்பினர்களே தயவுசெய்து சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு ஒரு சின்ன குழு செய்த அட்டூளியத்திற்காக முஸ்லிம் சமூகத்தை தண்டிக்காதீர்கள். முஸ்லிம்கள் இந்த நாட்டிற்காக உயிர் நீத்தவர்கள், இந்த நாட்டை நேசிக்கின்றவர்கள், இந்த நாட்டில் வாழ்கின்றவர்கள். எனவே தமிழ், முஸ்லிம், சிங்கள, கிறிஸ்தவ மக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப போராட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கேட்டுக்கொண்டார். 
(அகமட் எஸ். முகைடீன்)
தமிழர்கள் போல் முஸ்லிம்கள் செய்யவில்லை - ஹரீஸ் சபையில்  தமிழர்கள் போல் முஸ்லிம்கள் செய்யவில்லை - ஹரீஸ் சபையில் Reviewed by NEWS on May 09, 2019 Rating: 5