BREAKING NEWS

May 7, 2019

இந்த முஸ்லிம் பயங்கரவாத குழு பரவாது - அமைச்சர் ஹக்கீம்

மிகவும் பயங்கரமான படுமோசமான இந்தப் பயங்கரவாத செயல்பாட்டில் ஈடுபட்டவர்கள் மிகவும் சிறியதொரு குழுவினராகும். இந்தக் குழு பரவி, வியாபிப்பதற்கான வாய்ப்பு மிகவுமே அரிது. இதனைத் தடுத்து நிறுத்தி, முற்றாகவே ஒழித்து கட்ட வேண்டிய தேவைப்பாடு ஏனைய சமூகங்களை விட முஸ்லிம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளமை நன்கு புலப்படுகிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

கம்பளை பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (6) நடைபெற்ற உடபலாத்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

அமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, 

இவ்வாறான எந்தவொரு குழுவினரதும் இருப்பு தொடர வேண்டுமாக இருந்தால் சமூகத்தின் ஒத்துழைப்பும், வரவேற்பும் அதற்கு இன்றியமையாதது. அத்துடன் அத்தகைய குழுவினருக்கு ஏனையோரை தம் பக்கம் ஈர்த்துக் கொள்வதற்கான அதாவது தம் வசப்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பமும் அதற்கான வாய்ப்பும் இருக்க வேண்டும். ஆனால், முஸ்லிம் சமூகத்தினர் இந்த நாசகாரிகளை முற்றுமுழுதாகவே நிராகரிப்பது மட்டுமல்ல, அவர்களை வன்மையாக எதிர்க்கவும் செய்கின்றனர். 

இவ்வாறாக இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு முற்றிலும் புறம்பானவர்கள் அதாவது சமூக ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு சிறிய கும்பல் மேற்கொண்டுவரும் படுகொலைக் கலாசாரத்தையும் ஏனைய சமயங்களுக்கு முரணான செயற்பாட்டையும் முற்று முழுதாகவே எதிர்க்கின்றோம். 

ஏனைய சமூகங்களை விட முஸ்லிம் சமூகம் பொலிஸாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, அந்த சிறிய நாசகார கும்பலை பூண்டோடு ஒழிப்பதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளது. 

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது ஊடங்கள் மத்தியில் நிலவிவரும் போட்டா போட்டி காரணமாக அவை சில விடயங்களை மிகைப்படுத்திக் கூறிவருகின்றன. ஊடகங்களுக்கென்று ஊடக தர்மம் என்று ஒன்று இருக்கன்றது. ஆகையால் அவை மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடுடைவையாகும். 

ஒரு சில சம்பவங்களை தவிர பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் மிகவும் சிரத்தையுடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. படுகொலைகளுக்கு காரணமான சூத்திரதாரிகள் வெளியிலிருந்தும் இயக்கிகொண்டிருப்பதுடன், மக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் தொடர்ந்து நிலைபெறச் செய்ய வேண்டும் என்பதுவே அந்த தீய சக்திகளின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும். 

விழிப்புடனிருந்திருந்தால் இந்த கொடூரச் செயல்கள் இடம்பெறாமல் முன்கூட்டியே தடுத்திருக்கலாம் என்பதுடன் இதற்கு அரசியல் தலைமைத்துவங்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் மீது குற்றம் சுமத்தப்படும் அதேவேளை சகலரும் தத்தமது பதவி நிலைக்கும் அதிகாரத்திற்கும் தரத்திற்கும் ஏற்ப பொறுப்புக் கூற வேண்டும்.

Share this:

 
Copyright © 2014 Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA. Designed by | Distributed By