BREAKING NEWS

May 8, 2019

இனவாதம் கக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்- அதாவுல்லா சகி

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலுக்குதலினை கண்டித்தும், பாதுகாப்பு கவுன்சில் தொடர்பான விடயதானங்களை ஆராய்வதற்குமான கலந்துரையாடல்; கௌரவ கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் கடந்த 2019.05.04 (சனிக்கிழமை) நடைபெற்றது. 

இந்நிகழ்வில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், சர்வ மத குருமார்கள், ஆளுனர் காரியாலய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அக்கரைப்பற்று மாநகர முதல்வர் கௌரவ அதாஉல்லா அஹமட் சக்கி மக்களின் பாதுகாப்பு விடயங்கள் சம்பந்தமாகவும், கொடூரமான இத்தாக்குதலின் பின்னரான செயற்பாடுகள் சம்பந்தமாகவும் காத்திரமான உரை ஒன்றினை நிகழ்த்தினார். 

கௌரவ ஆளுனர் அவர்களே! 

"நாட்டில் ஏற்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலினை நாமெல்லோரும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இத்தாக்குதலின் பின்னரான முஸ்லிம்களின் வாழ்வியல் மிகுந்த நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. இக்கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு 241வது பிரிவினது ராணுவ பொறுப்பாளரிடம் மக்களின் பாதுகாப்பு சம்பந்தமாக பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருக்கிறேன். அவர் கிறிஸ்தவ மதத்தினை சேர்ந்தவர். தாக்குதல் நடாத்தப்பட்ட நீர்கொழும்பு கொட்டுவாபிட்டியில் அமைந்துள்ள கொச்சிக்கடை ஆலயத்திற்கும் அவரது வீட்டிற்கும் இடையில் குறைந்தளவான தூரமே இருப்பதாக கூறினார். அன்று அவர் கொழும்பிலிருந்தார். ஆனாலும் எமது மக்களின் பாதுகாப்பு கடமைகளுக்காக உடனே இங்கு வந்தார். இத்தாக்குதலினை இஸ்லாமிய பெயர் கொண்ட தீவிரவாதிகள் செய்தார்கள் என்பதினை முழுமையாக நம்புகின்றார். முழு முஸ்லிம் மக்களும் இதற்கு உடந்தையானவர்கள் அல்ல; ஒரு குழுவின் நாசகார செயற்பாடே இவை என்பதில் அவர் உறுதியாகவிருக்கிறார். இவ்விடத்தில் நான் அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். 

மேலும் ரமழான் மாதத்தில் முஸ்லிம் மக்களுடைய பாதுகாப்பு சம்பந்தமாக நாம் அதிக அக்கறை காட்ட வேண்டியுள்ளது. முஸ்லிம்கள் மிக அதிகமான பள்ளிவால்களிலில் தொழுகையிலும், நல் அமல்களிலும் ஈடுபடும் காலமாக ரமழான் உள்ளது. எனவே பள்ளிவாயல்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும் முஸ்லிம் மக்களினுடைய வியாபார விடயங்களுக்கு பாரிய அச்சுருத்தல் ஏற்பட்டிருப்பதினை அவதானிக்க முடிகிறது. தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களுக்கு முஸ்லிம் வியாபாரிகள் செல்கின்ற போது இனவாத சிந்தனை கொண்டவர்கள் வியாபாரத்தினை தடுத்து நிறுத்துகின்ற அவல நிலைக்கு முஸ்லிம்கள் அகப்பட்டிருக்கிறார்கள். இதற்கான மாற்று வழிகளை பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

மேலும் இக்கொடூரமான தாக்குதலினை சாட்டாக வைத்துக் கொண்டு இனவாதத்தினை கக்குகின்ற வங்குரோத்து அரசியல்வாதிகள் பலர் இந்த தேசத்தில் உலாவுகின்றனர். முஸ்லிம்களுடைய வர்த்தகங்களை தடைசெய்வதற்கு முற்படுகின்றனர். புர்கா விடயத்தில் கடும்போக்கு செயற்பாட்டினை அமுல்படுத்த முனைகின்றனர். இவ்வாறான செயல்கள் மனம் வருந்தக் கூடியதும், கண்டிக்கத்தக்க செயலுமாகும். கௌரவ ஆளுனர் அவர்களே! பாதுகாப்பு கவுன்சில் என்பது ஒரு உயரிய சபை. இவ்வாறு இனவாதத்தினை கக்குகின்ற சமூக விரோத அரசியல்வாதிகளை நீங்கள் அடையாளம் காண வேண்டும். அவர்களுக்கு எதிரான சட்ட நடிவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

இவை மாத்திரமன்றி இக்கொடூரமான தாக்குதலின் பின்னராக கௌரவ ஆளுனராகிய உங்கள் மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். நேற்று நடைபெற்ற எங்களது மாநகர சபை அமர்வில் ஒவ்வொரு உறுப்பினர்களும் உங்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுதலித்து பேசினார்கள். இதற்கான கண்ட அறிக்கை ஒன்றும் என்னால் வெளியிடப்பட்டது. முஸ்லிம் மக்கள் மிக நேர்மையாக வாழக்கூடியவர்கள். குறிப்பிட்ட ஒரு நாசகார குழு செய்த செயலுக்காக ஒட்டு மொத்த முஸ்லிம் மக்கள் மீதும் பழிசுமத்துவது அருவருக்கத்தக்க செயலாகும். 

எதிர்வரும் 06ம் திகதி ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள் மீதான பாதுகாப்பு செயற்பாடுகள் அவசியமாகும். முஸ்லிம் பிரதேசங்களில் ரமழான் விடுமுறை வழங்கப்பட்டிருக்கின்றன. மற்றைய பாடசாலைகள் மீது பாதுகாப்பினை உறுதி செய்தல் வேண்டும். மக்களின் ஆணையினைப் பெற்று மக்களின் பிரதிநிதிகளாக செயற்படும் நாம் மக்களின் பாதுகாப்பிற்கான செயற்பாடுகளுக்கு எமது முழு ஒத்துழைப்பினையும் வழங்க வேண்டும்" என மாநகர முதல்வர் கூறியமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this:

 
Copyright © 2014 Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA. Designed by | Distributed By