19 தொடர்பில் :மைத்திரி சரியாகவே சொன்னார் : உதய கம்பன்பில

அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தம் நாட்டில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை வரவேற்கக் கூடியது.

ஆனால் 18 ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை தோற்றுவித்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு ஊடகங்களுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

19 ஆம் திருத்தம் கொண்டு வரப்பட்ட போது முழு நாடும் அதற்கு சார்பாக இருந்த போதும், நாம் அப்போதே அதனை எதிர்த்தோம். 

நான்கு வருட காலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 19 ஆம் திருத்தத்துடன் வாழ்ந்துவிட்டு இப்போது எம்முடைய அதே நிலைப்பாட்டுக்கு அவரும் வந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. 

எனினும் 18 ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற ஜனாதிபதியினுடைய கருத்துக்கு எம்மால் இணங்க முடியாது. 19 ஆம் திருத்தத்தில் ஜனாதிபதிக்கு இரண்டு தடவைகள் மாத்திரமே போட்டியிட முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் படி மக்கள் தாம் விரும்பும் தலைவரை மூன்றாவது தடவையாகவும் தெரிவு செய்ய வேண்டும் என்று விரும்பினாலும் அரசியலமைப்பு அதற்கு இடமளிக்காது. 

ஆனால் 18 ஆம் திருத்தத்தில் மக்கள் விரும்பியவாறு நாட்டு தலைவரை தெரிவு செய்யக் கூடிய வாய்ப்பு காணப்பட்டது. 

எனவே 18 ஆம் திருத்தம் சர்வாதிகாரத்திற்கு வித்திட்டது என்று கூற முடியாது. காரணம் 18 ஆவது திருத்தம் ஜனநாயக ரீதியானதாகும். அரசியலமைப்பிற்கூடாக தாம் விரும்பும் தலைவரை வீட்டுக்கு அனுப்பும் முறைமைக்கு 18 இல் இடமில்லை. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதால் இதில் குறை கூற முடியாது என்றார். 

19 தொடர்பில் :மைத்திரி சரியாகவே சொன்னார் : உதய கம்பன்பில 19 தொடர்பில் :மைத்திரி சரியாகவே சொன்னார் : உதய கம்பன்பில Reviewed by NEWS on June 24, 2019 Rating: 5