சிங்கள ஊடகங்கள், முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களை தூண்டுகிறது

நாட்டின் பிரதான தகவல் கடத்தியதாக ஊடகங்கள் மாறியுள்ளதாகவும் செய்திகளை வாசிக்கும் முன்னர் ஊடக நிறுவனங்கள் பற்றி வாசித்து அறிய வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் மக்கள் விடுதலை முன்னணி ஒழுங்கு செய்த அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் தற்போது பிரதான தகவல்கள் கடத்திகளாக சில ஊடக நிறுவனங்கள் மாறியுள்ளன. அனைத்து தொலைக்காட்சி ஊடகங்களுக்கு ஒரு அரசியல் இருக்கின்றது. இது எமக்கு நன்றாக தெரியும்.

இந்த ஊடகங்கள் வெளியிடும் செய்திகளையும் அறிக்கைகளையும் நடு நிலையான சுயாதீனமான செய்திகளாக கருத வேண்டாம். அனைத்து தொலைக்காட்சிகளும் ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படுகின்றன. இதனால், நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தலை வழங்க வேண்டும். செய்திகளை படிக்கும் முன்னர், அந்த செய்தி ஊடகம் பற்றி கற்றிந்து கொள்ளுங்கள். அனைத்து தொலைக்காட்சிகள் பற்றிய தகவல்கள் எம்மிடம் உள்ளன.

தற்போது மிகவும் மோசமான முறையில் செய்திகளை ஊடகங்கள் கையாள்கின்றன. மக்களை பெரியளவில் ஏமாற்றி வருகின்றன. கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் மே மாதம் 13 ஆம் திகதி வரை ஊடகங்கள் நாட்டில் மிகப் பெரிய பதற்றத்தை உருவகித்து காட்டின. வாள், கத்திகளை காட்டி முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களை படுகொலை செய்ய போகின்றனர் என்ற உணர்வை ஏற்படுத்தின. முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டும் வகையில் அவை காணப்பட்டன. இதனையடுத்து மினுவங்கொடை, நாத்தாண்டிய பகுதிகளில் கடைகள், வீடுகள் தீவைக்கப்பட்டதுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

மறுநாள் தீவைக்கப்பட்ட சம்பவங்களை காட்டி தொலைக்காட்சிகள் அழ ஆரம்பித்தன. ஏப்ரல் 21 ஆம் திகதி ஏற்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, நாட்டில் ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்கி அதனை தேர்தல் வரை கொண்டு செல்லும் தேவை பலருக்கு இருந்தது.

ஊடகங்கள் அனைத்து முக்கியமான சம்பவங்களிலும் தமது நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நடந்துக்கொண்டன. திட்டமிட்ட ஊடக நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. சமூகத்தை இந்த இருளில் இருந்து மீட்கும் பொறுப்பு எமக்குள்ளது” என அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...