உ ண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல்நிலை பாதிப்பு

கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துமாறு கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் கண்காணித்து வருகின்றனர். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனையின் பிரகாரம், மருத்துவ உதவிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனினும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நீராகாரத்தையும் தவிர்த்துள்ளதால் அவர்கள் சிறுநீரக பாதிப்பையும் எதிர்நோக்க நேரிடும் என வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

இந்நிலையில், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் இரத்த அழுத்தம் குறைவடைந்து செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தக்கோரி ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம் இன்று (20ஆம் திகதி) நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த திங்கட்கிழமை முதல் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கல்முனை – சேனைக்குடியிருப்பு கணேசா வித்தியாலயத்தில் இருந்து நாவிதன்வெளி – கல்முனை பிரதான வீதியூடாக கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகம் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் போராட்டத்தற்கு ஆதரவு தெரிவித்து கல்முனையில் நேற்று மாலை மெழுகுவர்த்திப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  கல்முனை பிரதான வீதியின் இருமருங்கிலும் மெழுகுவர்த்தி ஏந்தி பொது மக்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த வேண்டாம் என கோரி கல்முனையில் இன்று சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் கல்முனை தனியார் பஸ் நிலைய முன்றலில் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...