சம்பந்தனின் சாணக்கியம் ரவூப் ஹக்கீமிடம் தோல்வியுற்றுள்ளது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் சாணக்கியம் ரவூப் ஹக்கீமிடம் தோல்வியுற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரி மேற்கொள்ளப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்டை நியமிக்கும் போது பேரம் பேசியிருக்கலாம், எதிர்காலத்தில் வடக்கு, கிழக்கு இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் கொள்கை ரீதியாக முடிவினை எடுத்திருக்கலாம்.

ஆனால் சம்பந்தனுக்கும், ரவூப் ஹக்கீமிற்கும் இடையிலே நீண்டகால உணர்வு ரீதியான, அரசியல் ரீதியான நல்ல உறவு இருந்தது. சம்பந்தனின் வயது, அனுபவம், இராஜதந்திரம் என அனைத்தும் ரவூப் ஹக்கீமிடம் தோற்றுவிட்டது.

இது கல்முனை விடயம் மாத்திரமல்ல கடந்த நான்கு வருட காலமாக அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கி தமிழர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஒன்றுமே இல்லாமல் செய்து, வெறுமனே கம்பரலிய, சமுர்த்தி நிவாரணத்திலும், பற்றாக்குறைக்கு பனை அபிவிருத்தி நிதியம் என்ற பெயரால் யாரெல்லாம் இணக்க அரசியல் செய்தார்களோ அவர்களை விட மிகவும் மோசமான கீழ் நிலைக்கு இறங்கி தேர்தல் அரசியலை நோக்கி போவதற்கு தான் தமிழரசு கட்சியும், கூட்டமைப்பும் விளைகிறது.

இளைஞர்கள் தீர்க்கதரிசனமாக முடிவெடுத்து சலுகை அரசியலுக்கு போவோமானால் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவோம். எட்டு கிராம சேவையாளர் பிரிவை கொண்ட வெலிஓயா பிரதேச செயலகத்தை தரமுயத்தி இருக்கிறார்கள். மாந்தை பிரதேச செயலகம் வெறும் ஆறாயிரம் மக்கள் தொகையை கொண்டது.

ஆகவே உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு சொல்லுகின்ற காரணங்களை ஏற்று கொள்ள முடியாது. இது ஒரு வார காலத்தினுள் தீர்க்கப்பட கூடிய விடயம் என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...