இண்ரர்போல் ஊடாகவே சஹ்ரானின் சகா, மில்ஹான் கைதானார்...!!

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய முக்கியமான ஒருவர், தங்களது சிவப்பு அறிவித்தலுக்கு அமையவே மத்திய கிழக்கு நாடு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார் என சர்வதேச காவல்துறையான இண்ரர்போல் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இண்ரர்போல் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

அஹமட் மில்ஹான் ஹயாது மொஹமட் என்ற 29 வயதுடைய இலங்கையர், பயங்கரவாதம் மற்றும் கொலைகள் என்பன தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளான நிலையில், தேடப்பட்டு வந்தவர் என இண்ரர்போல் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் சம்பவ பதிலளிப்பு குழு ஒன்று நிறுவப்பட்டதாகவும், அதற்கமைய சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்ததாகவும் இண்ரர்போல் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிந்த சந்தேகத்துக்குரியவர் உட்பட மேலும் நான்கு பேர் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வைத்து கைது செய்யபபட்டு, இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என்று இண்ரர்போல் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், முக்கியமான சந்தேகத்துக்குரிய ஒருவர் கைது செய்யப்பட்டமையானது, நடைபெற்றுவரும் விசாரணைகளின் முக்கியமான படிநிலை என்றும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் இண்ரர்போல பெருமிதம் கொள்வதாகவும் அதன் செயலாளர் நாயகம் ஜுகன் ஸ்டொக் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் தப்பித்துச் சென்றுள்ளவர்களைக் சட்டத்தின்முன் கொண்டுசெல்வதற்காக எல்லை கடந்த ஒத்துழைப்பை வழங்குவதற்கு சிவப்பு அறிவித்தல் ஒரு பலம்வாய்ந்த கருவியாகும் என்றும் இண்ரர்போல செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாஸிமுக்கு நெருக்கமானவரும், பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட குழுவின் முக்கியமானவருமான அஹமட் மில்ஹான் ஹயாது மொஹமட் உள்ளிட்ட 5 பேர், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் டுபாயில் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சந்தேகத்துக்குரியவர் புதிய காத்தான்குடி-02 ஐ சேர்ந்தவராவர் என காவல்துறை பேச்சாளரான காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேநேரம், 34 வயதுடை மொஹமட் மர்சூப் மொஹமட் ரில்லா, 47 வயதுடைய மொஹமட் மொஹிதீன் மொஹமட் சன்வா சப்ரி, 29 வயதுடைய மொஹமட் ஸ்மாயில் மொஹமட், இல்ஹாம் மற்றும் 34 வயதுடைய அபுதாலி அபூபக்கர் ஆகிய நால்வரும் கைதுசெய்யப்பட்ட ஏனைய சந்தேகத்துக்குரியவர்களாவர்.

இந்த நிலையில், இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள அவர்களிடம், கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...