நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில், ஜனாதிபதி, பிரதமருக்கும் அழைப்பு..?

தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி மைத்திரியையோ அல்லது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையோ நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் விசாரணைக்கு அழைப்பதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதாக தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்தகுமாரசிறி தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று இலங்கையின் பல இடங்களில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதன்போது 260இற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டதுடன் 500 இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர்.

இத் தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டும் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படாததன் விளைவாகவே இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதிகாரிகள் இதனை அலட்சியமாக எடுத்துக் கொண்டனர் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்நிலையில் இத் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தனக்கு அறிவித்தல்கள் எவையும் கிடைக்கவில்லை என்றும் பிரதமர் மறுத்திருந்தார்.

அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் இத் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை தொடர்பான எந்தத் தகவல்களையும் அறிந்திருக்கவில்லை என்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவே தான் அறிந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டில் இடம்பெற்ற இக்கோரச் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக் குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெறுகின்றன. அதேபோன்று ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழுவும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றது.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் போன்றவர்கள் வெளியிட்டுவரும் கருத்துக்களால் பெரும் சரச்சை ஏற்பட்டிருக்கிறது.

குறிப்பாக, ஹிஸ்புல்லாஹ்வின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக தற்கொலைத் தாக்குதல்தாரி சஹ்ரான் உதவியதாகவும், அவருடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்ததாகவும், கோத்தபாயவிற்கும், சஹ்ரான் ஹிஸ்புல்லாஹ் போன்றவர்கள் நெருங்கிய தொடர்பினை பேணியதாகவும் அசாத் சாலி குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து சாட்சியமளிக்க வந்த ஹிஸ்புல்லாஹ், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் வெற்றிக்காக சஹ்ரான் பாடுபட்டதாக குறிப்பிட்டார். அதாவது, நான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்தேன், அவரது அரசியல் வெற்றிக்காக செயற்பட்டேன். ஆனால் சஹ்ரான் ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டுக்கொண்டிருந்தார் என்றார்.

இக்கருத்தும் கொழும்பு அரசியலில் பெரும் தாக்கத்தை கொடுத்திருக்கிறது. அதேபோன்று, இது தொடர்பில் விசாரணைக்கு செல்ல வேண்டும் என்றும் தென்னிலங்கை அரசியல்வாதிகள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.

இந்நிலையில், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவரிடம் ஆங்கில ஊடகமானது, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக தற்கொலைதாரி சஹ்ரான் செயற்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக மைத்திரியை விசாரணைக்கு அழைப்பீர்களா என கேள்வி எழுப்பியது.

இது தொடர்பாக நான் தனிப்பட்டரீதியில் முடிவெடுக்கமுடியாது. தெரிவுக்குழுவில் உள்ள அனைவரும் கலந்து பேசியே முடிவெடுப்போம். எனினும், தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி மைத்திரியையோ அல்லது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையோ நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் விசாரணைக்கு அழைப்பதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கின்றன.


தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை மூன்றுமாத காலப்பகுதிக்குள் முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்கிறோம்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸாரால் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களை சாட்சி வழங்க அழைக்க எந்த தேவையும் இல்லை. அத்துடன் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவந்தவர்களை விசாரிப்பதற்கும் எந்த தேவையும் இருப்பதாக நான் கருதவில்லை என்றார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளதால் ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதமர் விக்ரமசிங்க ஆகியோரின் கருத்துக்களைப் பெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று தெரிவுக்குழுவினை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகின.

எவ்வாறாயினும், அவர்கள் விரும்பினால் காணொலி முன் தோன்றி சாட்சியமளிக்கவும் ஏற்பாடுகள் இருப்பதாகவும் அவ் வட்டாரங்கள் தெரிவித்தன.

எதுஎப்படியிருந்த போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இத் தெரிவுக்குழு தன்னை சிக்கலில் மாட்டிவிடுவதற்காகவே விசாரணைகளை நடத்துகின்றது என்றும், பாதுகாப்புத் தகவல்கள் வெளியே செல்வதனால் நாட்டுக்கு ஆபத்து என்றும் தெரிவித்திருந்ததுடன், இத் தெரிவுக்குழுவின் விசாரணைகள் நிறுத்தப்படும்வரை தான் அமைச்சரவைக் கூட்டத்திற்கு வரமாட்டேன் என்று கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில், ஜனாதிபதி, பிரதமருக்கும் அழைப்பு..? நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில், ஜனாதிபதி, பிரதமருக்கும் அழைப்பு..? Reviewed by NEWS on June 15, 2019 Rating: 5