BREAKING NEWS

Jul 22, 2019

அமைச்சை ஏற்க மாட்டோம் : எதிர் அணியுடன் இணைவோம்: மு.கா எச்சரிக்கை

அண்மைக் காலமாக முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் எமக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வரையில் எந்தவொரு முஸ்லிம் உறுப்பினரும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அத்துடன் கிழக்கில் முஸ்லிம் - தமிழ் தரப்பினருக்கும் எழுந்துள்ள பிரச்சினைகளில் எமக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கவேண்டும் என்றும் முஸ்லிம் உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து அறிவிக்க நாளை பிரதமருடன் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் பீடம் நேற்று பிற்பகல் கட்சி தலைமையகமான தாருஸமாலில் கூடியது. கட்சியில் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் அங்கத்தவர்கள் கூடி இன்று பல தீர்மானங்களை எடுத்திருந்தனர். இது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இன்று தேசிய பாதுகாப்பு உறுதிப்பட்டு இருந்தாலும் கூட அவ்வாறு இல்லை என கூறிக்கொண்டு நாட்டினை நாசமாக்க ஒரு சிலர் முயட்சித்து வருகின்றார். தேர்தலை இலக்கு வைத்து சில நாசகார செயல்களை செய்ய முயற்சிக்கின்றனர். இதற்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். 


பிரதமர் ரணிலின் கோரிக்கையான அமைச்சு பதவிகளை மீள பொறுப்பெடுப்பது தொடர்பில் அங்கு வாத பிரதிவாதங்கள் கடுமையாக இருந்துள்ளது. முஸ்லிங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் எந்த முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சு பதவிகளை ஏற்க கூடாது. முக்கியமாக கல்முனை பிரச்சினை அடங்கலாக இப்போது மிக முக்கிய பிரச்சினைகளாக மக்களுக்கு மாறியிருக்கும் பிரச்சினைகளை முடிக்காமல் யாரும் பதவிகளை ஏற்க கூடாது என அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான ஹரீஸும், பைசால் காசிமும் இன்னும் பலரும் வலியுறுத்தி பேசியுள்ளனர்.

இதனை அரசுக்கு நிபந்தனையாக வைத்து கல்முனை பிரச்சினை ஓரிரு வாரங்களில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும், சகல பிரதேசங்களிலும் தமிழ் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற இந்த அரசு எமது தலைமைக்கும் முஸ்லிம் எம்.பிக்களுக்கு வாக்குறுதியை வழங்கிவிட்டு மறுகணமே தமிழ் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற சில முன்னாயத்தங்களை செய்திருந்தது. இது முஸ்லிம் சமூகத்துக்கு அவமானமான செயல். இது முஸ்லிங்களின் முகத்தில் கரிபூசியதை போன்றது என ஹரீஸ் எம்.பி பேசியதை பெரும்பான்மை உறுப்பினர்களும் கட்சியின் தலைமைக்கு வலியுறுத்தி பேசியுள்ளனர்.

இங்கு பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் , எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை பிரதமர் அவர்கள் எதிர்கொண்டுள்ள இச்சுழ்நிலையில் கல்முனை விவகாரம் சம்பந்தமாக பிரதமர் தனக்கு முன்னிலையில் முஸ்லிம் எம்.பிக்களிடம் தந்த வாக்குறுதியை குறிப்பாக கல்முனை கணக்காளர் விவகாரம் தொடர்பிலான உறுதிமொழியை மீறிவிட்டார். எந்த காரணத்தை கொண்டும் இழுத்தடிப்பு செய்ய முடியாது. இந்த விடயங்களுக்கு ஓரிரு நாளில் அரசு நிரந்தர தீர்வை தரவேண்டும். அரசு எந்த தீர்வையும் தராமல் யாரும் அமைச்சை பெறப்போவதில்லை என காட்டமாக பதிலளித்துள்ளார்.

கணக்காளர் விவகாரத்தில் பிரதமர் ரணில் வாக்குறுதியை மீறியதனால் அவரது தீர்மானத்தை அவர் வாபஸ் பெற வேண்டும் அதை அவர் செய்யாமல் விட்டால் நாங்கள் எதிர்க்கட்சி ஆசங்களுக்கு சென்று அமரபோகும் செய்தியை நாளை முஸ்லிம் எம்பிக்களுடன் சென்று அவரை அவசரமாக சந்தித்து கூறப்போவதாக சபைக்கு அறிவித்த போது தக்பீர் முழக்கத்துடன் சபை அதை ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த அதிரடி முடிவு அரசுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஒரு அக்னி பரீட்சையாக இருக்கும் என முஸ்லிம் காங்கிரஸ் நம்புகிறது. என நம்பத்தந்த தாருஸலாம் வட்டாரம் தெரிவித்தது.

Share this:

Post a Comment

 
Copyright © 2014 Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA. Designed by | Distributed By