புகைப்படம் எடுத்த காத்தான்குடி நபருக்கு பிணை : கல்முனை நீதிமன்றம்

கல்முனை ஆதார வைத்தியசாலையை வீடியோ பதிவு செய்த குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் 25,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்று (02) கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஜ.என்.றிஸ்வான் முன்னிலையில் சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்ட போதே அவர் இந்த பிணை உத்தரவை வழங்கினார்.

இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, வீடியோ பதிவு செய்யப்பட்ட குறித்த இடம் வீடியோவுக்கு தடை விதிக்கப்பட்ட பாதுகாப்பு வலயமா என பொலிஸாரிடம் நீதிவான் கேள்வி எழுப்பினார். அதற்கு, இல்லை என பொலிஸ் பரிசோதகர் பதிலளித்தார்.

அவ்வாறாயின் ஏன் இந்நபரை கைது செய்தீர்கள் என நீதிவான் கேள்வியெழுப்பியபோது, காத்தான்குடியை சேர்ந்த குறித்த நபர் வீடியோ எடுத்துக் கொண்டு சந்தேகத்துக்கிடமாக நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே கைது செய்ய வேண்டியேற்பட்டது என பொலிஸ் பரிசோதகர் பதிலளித்தார். இதன் பின்னர் நீதவான் மேற்படி பிணை உத்தரவை வழங்கி, இவ்வழக்கை ஒத்திவைத்தார்.


குரல் இயக்கத்தின் கருத்து

கல்முனை ஆதார வைத்தியசாலையின் முகப்பை நேற்று புகைப்படம் எடுத்து கைதான முஹம்மத் ராபிதீன் குரல்கள் இயக்க சட்டத்தரணிகளின் முயற்சியால் பிணையில் விடுதலை.
கல்முனை ஆதார வைத்தியசாலையின் முகப்பைப் படம் பிடித்தார் என்று சந்தேகத்தின் பெயரில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் முகம்மது ராபிதீன் (வயது 40) நேற்று கைது செய்யப்பட்டு இன்று கல்முனை நீதவான் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார்.  
ஒரு வருடங்களுக்கு முன்னர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் தான் ஒரு நிர்மாணப் பணியொன்றைச் செய்ததாகவும் அப்பணியில் தவறிருப்பதாக மூன்றாம் தரப்பொன்றினால் செய்யப்பட்ட முறைப்பாட்டினைத் தொடர்ந்து அதனைப் பரீட்சிப்பதற்காக தன்னால் பூர்த்தி செய்யப்பட்ட பணியினை புகைப்படம் எடுத்ததாகவும் அதனை அவதானித்த சிலர் சந்தேகம் கொண்டு தன்னை தாக்க வந்ததாகவும் ராபிதீன் குறிப்பிட்டார்
இவருக்காக இன்று கல்முனை நீதவான் நீதிமன்றில் குரல்கள் இயக்க சட்டத்தரணிகளான இயாஸ்தீன் இத்ரீஸ்,சுஹால்ஸ் பிர்தௌஸ், இன்னும் சில சட்டத்தரணிகளும் மன்றில் ஆஜரானார்கள்
இவர்கள் மன்றில் தோன்றி குறித்த சந்தேக நபர் தொடர்பான உண்மையான நிலமையை மன்றுக்கு எடுத்து இயம்பியதுடன் இந்த சந்தேக நபர் தொழில் நிமித்தமே புகைப்படம் எடுத்து இருந்தார் என்பது மாத்திரமல்லாது இலங்கையில் எங்கேயாவது படம் எடுப்பது பிழையாகக் கருதப்படாது என்பதையும் 
சட்டத்தரணிகள் மன்று விளக்கினர். 
மேலும் இந்த வாதத்தில் உள்ள நியாயமான தன்மையை கௌரவ நீதிவானுக்கு குரல்கள் இயக்க சட்டத்தரணிகள் எடுத்து கூறி குறித்த சந்தேக நபருக்கு பிணை வேண்டி நின்றனர். 
இந்த வாதத்தில் உள்ள நியாயமான தன்மையை அவதானித்த நீதவான் குறித்த சந்தேக நபருக்கு பிணை வழங்கி தீர்ப்பளித்தார். 
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படும் பல குரலற்ற அப்பாவிகளுக்கு சட்ட உதவிகளை குரல்கள் இயக்கம் தொடர்ந்து வழங்கி வருகிறது.

புகைப்படம் எடுத்த காத்தான்குடி நபருக்கு பிணை : கல்முனை நீதிமன்றம் புகைப்படம் எடுத்த காத்தான்குடி நபருக்கு பிணை : கல்முனை நீதிமன்றம் Reviewed by NEWS on July 02, 2019 Rating: 5