முதலைகள் வெளி வருவதனால் மக்கள் அச்சம்..!


- பாறுக் ஷிஹான் -

அம்பாறை- காரைதீவு பிரதான வீதி மாவடிப்பள்ளியை ஊடறுத்து செல்லும் ஆற்றில் அதிகளவிலான முதலைகள் காணப்படுவதால் மக்கள் குறித்த பாதையில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.

 அண்மையில் பெய்த மழை காரணமாக ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால்  வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமான  சுமார் 9, 5, 4அடி நீளமுடைய முதலைகள் வெளியேறுவதாக மக்கள் தெரிவிக்கினறனர்.
.
மேலும்  அம்பாறை மாவட்டத்தில் கிட்டங்கி அன்னமலை மாவடிப்பள்ளி இறக்காமம் சின்ன முகத்துவாரம் சாகாமக்குளம் கஞ்சி குடிச்சாறு தாமரைக்குளம் பொத்துவில் களப்புக்கள் போன்ற இடங்களிலும் முதலை அச்சறுத்தல் தொடர்ந்து வருகின்றன.
மேற்படி  பகுதிகளில் உள்ள  வாவிகள்  குளங்களிலும் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

எனினும் ஆறுகளிலும்  குளங்களிலும்  நீர்நிலைகளிலும் முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய இடங்களில் அறிவுறுத்துதல்கள்  எச்சரிக்கை பலகைகள் உரிய இடங்களில் இதுவரையும் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. முதலை அபாயம் தெரியாமல் மீனவர்களும் சுற்றுலாப்பயணிகளும் வாவிகளிலும்  குளங்களிலும் பயணிப்பதால் முதலையின் பிடிக்குள் அகப்படும் சாத்தியம் உள்ளது. இதை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

அண்மையில் இலங்கைக்கு வருகைதந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் பொத்துவில் ஆற்றில் இறங்கியபோது முதலைக் கடிக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இவர் உயிரிழப்புக்கு காரணம் குறித்த பகுதியில் முதலைகளின் நடமாட்டம் பற்றியதும் அனர்த்தம் பற்றிய அறிவுறுத்துதல் பலகை வைக்கப்பட்டிருக்கவில்லை  என்பது பிரதான காரணம்.இதனால் கிழக்கு இலங்கைக்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கையில் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டது. இதேபோன்று நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் முதலைக் கடிக்குள் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்கள்.

கடந்த வருடம் கைகழுவச் சென்றபோது பொத்துவில் பானமையில்  பிரித்தானிய ஊடகவியலாளர் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக  மீட்கப்பட்டிருந்தார்.

போல் ஸ்டுவாட் மக்லன் (வயது 24) என்ற பிரித்தானிய ஊடகவியலாளரே இவ்வாறு முதலையால் இழுத்துச் செல்லப்பட்டிருந்தார்.

 எனவே  இதனை கட்டுப்படுத்த வனஜீவராசிகள் திணைக்களம் அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் என்பன பொதுமக்கள்  மீனவர்கள்  சுற்றுலாப் பயணிகளின் நன்மைகருதி திட்டங்கள் வகுத்து செயற்படவேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...