கூட்டத்தைக் கூட்டியது யார்? : ஜனாதிபதி – பிரதமர் இடையே கருத்து மோதல்..!


நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பிலான விசேட அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியது யார்? என்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கருத்துவாதங்கள் பகிரங்க மேடைகளில் இடம்பெற்று வருகின்றன.
இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தை கடந்த 19 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கூட்டியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பஸ்யாலை, கல்எளிய தன்சல்வத்தை டொன் ஸ்டீவன் வித்தியாலயத்தில் புதிய கட்டிடத்துக்கு நடுகல் இடும் நிகழ்வில் கடந்த 20 ஆம் திகதி கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர்  இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, மாத்தளை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுக் கூட்டத்தில் நேற்று (21) உரையாற்றிய ஜனாதிபதி, தான் இக்கூட்டத்தைக் கூட்டவில்லையெனவும், பிரதமரே இக்கூட்டத்துக்குப் பொறுப்பானவர் எனவும் கூறியிருந்தார்.
ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தான் ஒருபோதும் எதிரானவன் அல்லன் எனவும், இருப்பினும், இது அதற்கான தருணம் அல்லவெனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த நான்கரை வருடங்களாக ஜனாதிபதி முறைமையை மாற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத இந்த அரசாங்கம், ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை நீக்க முயற்சிப்பது தொடர்பில் அரசியல் மட்டத்தில் பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளன
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...