நாட்டில் ஒரே சட்டமே தேவை : அவருக்கே எமது ஆதரவு - ஞானசார தேரர்ஒட்டு மொத்த நாட்டையும் ஒரே சட்டத்திட்டத்தின் கீழ் நிர்வகிக்ககூடிய ஒருவரே, நாட்டின் அடுத்த தலைவராக வரவேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைப்பிரிவில், நேற்றைய தினம் ஞானசார தேரர் முன்னிலையானதை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் கூறியுள்ளதாவது,

வாக்கு மூலமொன்றை வழங்கவே வந்தேன்.

கண்டியில் ரத்ன தேரர், உண்ணாவிரதமிருந்த போது, கிழக்கு மற்றும் மேல்மாகாண ஆளுநர்கள் மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால், நாட்டில் பாரிய பிரச்சினை ஏற்படும் என்று நான் கூறியிருந்தேன்.

இதுதொடர்பாக வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளவே நான் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவால் அழைக்கப்பட்டுள்ளேன் எனத் தெரிவித்தார்.

மேலும் நான் இங்கு ஒரு கேள்வி எழுப்புகிறேன். இந்த நாடு யாருடையது? இந்த நாட்டின் உத்தியோகபூர்வ மொழி எது? இந்த நாடு 2500 வருடங்களுக்கு முன்னரும் இருந்தது.

இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்கள் தோற்றம் பெறும் முன்னரே, இந்த நாடு இருந்தது. இந்த கலாசாரத்தை நாம்தான் தற்போதுவரை கொண்டுவந்துள்ளோம். ஆனால், எமக்கு இப்போது சிங்களம் பேச முடியாதுள்ளது.

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சிங்களம் தெரியாதமையால், எமக்கும், எமது மொழியை பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாம் மிகவும் கவலையடைகிறோம். இதனை தமிழர்களும், முஸ்லிம்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் வாழ வேண்டுமெனில், முதலில் சிங்கள மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் எனவும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த நாட்டின் தலைவராக வருபவர், தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் நபராக இருக்க வேண்டும் என்பதோடு, தெற்கிலுள்ள சட்டத்திட்டங்களை வடக்கு கிழக்கிலும் நடைமுறைப் படுத்தக்கூடிய ஒருவராகவும், வடக்கும் கிழக்கும் இலங்கையின் பகுதி என்பதை நிரூபிக்கும் ஒருவராகவும் இருத்தல் அவசியமாக இருக்கிறது.

இதன் ஊடாக மட்டுமே இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும். இந்த நாட்டில் அனைவருக்கும் ஒரு சட்டம் தான் இருக்க வேண்டும்.

இவ்வாறான ஒருவர் தான் நாட்டுக்கு தலைமையேற்க வேண்டும். நாம் அண்மையில் முல்லைத்தீவுக்கு சென்றிருந்த போது, எமக்கு தமிழ் நாட்டுக்கு சென்ற ஓர் உணர்வு ஏற்பட்டது.

வடக்கு ஒன்றும் தமிழ் நாட்டின் ஒரு பகுதி அல்ல. அங்கும் எமது நாட்டின் சட்டத்திட்டங்கள் செல்லுபடியாகும். அங்கு, அரசமைப்பு மதிக்கப்படவில்லை. இதனால், அங்கு எம்மால் நீதியை எதிர்ப்பார்க்க முடியாது.

இவற்றையெல்லாம் மாற்றியமைக்கும் ஒரு தலைவர் வரவேண்டும். இதனை நாம் இப்படியே விட்டுவிட்டால், எதிர்க்காலத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டியேற்படும்.

இது சிங்கள பௌத்த நாடாகும். இதனை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும் இந்த நாட்டில் இருக்கலாம். ஏற்காதவர்கள், தங்களது உடமைகளுடன் தாராளமாக வேறு நாடுகளுக்கு செல்லாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஒரே சட்டமே தேவை : அவருக்கே எமது ஆதரவு - ஞானசார தேரர் நாட்டில் ஒரே சட்டமே தேவை : அவருக்கே எமது ஆதரவு - ஞானசார தேரர் Reviewed by NEWS on September 27, 2019 Rating: 5