16ஆம் திகதி வரை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நிறுத்தியுள்ளனர்- மஹேஸ் சேனாநாயக்க

முஸ்லிம் விரோத அலையை உருவாக்கிய அணிகளின் தலைவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியதை அடுத்து, இலங்கை முஸ்லிம் மக்களுக்கு எதிராக சில காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த, விரோத மனப்பான்மையை ஏற்படுத்தும் பிரச்சாரங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் திடீரென காணாமல் போய் விட்டதாக தேசிய மக்கள் அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் கடந்த ஓகஸ்ட் மாதம் வரை சமூக வலைத்தளங்களில் தினமும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, 15 நிமிடத்திற்கு ஒரு முறை என முஸ்லிம் மக்களுக்கு எதிராக பகையை உருவாக்கும் பதிவுகளே காணப்பட்டன.

தம்பியா, ஹலால் என அனைத்து வார்த்தைகளையும் பயன்படுத்தி முஸ்லிம் மக்களுக்கு எதிராக பகையை ஏற்படுத்தும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

திடீரென ஓகஸ்ட் மாதம் முதல் அவை காணாமல்போய்விட்டன. தற்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வருவதில்லை. ஏன் வருவதில்லை.அதனை செய்த நபர் தேர்தலில் போட்டியிடுவதால், அவை வருவதில்லை. அந்த நபர், நான் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போகிறேன் என ஓகஸ்ட் மாதம் கூறினார்.

இதனையடுத்தே முஸ்லிம் மக்களுக்கு எதிரான பதிவுகள் நிறுத்தப்பட்டன. நவம்பர் 16 ஆம் திகதி வரை மாத்திரமே அவர்கள் அதனை நிறுத்தியுள்ளனர்.

அந்த வேட்பாளரும், அவரை சுற்றி இருப்பவர்களுமே இதனை செய்து வந்தனர். அப்படியில்லை என்றால், ஓகஸ்ட் மாதத்துடன் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பதிவுகளை நிறுத்த வாய்ப்பில்லை.

அவை தற்போதும் இருந்திருக்க வேண்டும். இதுதான் சேறு நிறைந்த, மோசமான குடும்ப அணிகளின் திருடர்கள் இணைந்துள்ள அரசியல்.

அதேவேளை நாட்டுக்குள் ஒரே சட்டத்தை ஸ்தாபிக்க வேண்டும். அதற்காக புதிய சட்டங்கள் கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...