சஜித் வர முழுக்காரணம் ஹக்கீமே - ஆரிப் சம்சுடீன்

எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் முடிவை வைத்துக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும் என மொட்டுக் கட்சியினர் வெறும் பகல் கனவு காண்கின்றனர். ஒரு பிரதேச சபை தேர்தல் முடிவை வைத்து ஜனாதிபதித் தேர்தலை எவ்வாறு ஒப்பீடு செய்ய முடியும்? எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் முடிவானது எந்தவொரு வகையிலும் ஜனாதிபதித் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாகது என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பு கல்முனையில் அமைந்துள்ள அவரது மக்கள் பணிமனையில் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், ஆண்டாண்டு காலம் கொழும்பு நகரின் ஆட்சியை எவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி வசம் வைத்திருக்கின்றதோ அதேபோல் ஓர் விடயமே எல்பிட்டி பிரதேச சபை ஆட்சியுமாகும். இதற்காக நாம் ஒருவரும் தலையினைப் போட்டு உடைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

எமது சமூகத்தின் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை உள்ளிட்ட அரசியற் பிரமுகர்கள் ஜனாதிபதி வேட்பாளராக உள்ள அமைச்சர் சஜித் பிரேமதாசாவிடம் முன்வைத்தபோது எனது வெற்றியின் பின்னர் எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பதற்குஇணக்கம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருக்கின்றார்.

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்த வரையில் வட, கிழக்கு மாகாணங்களுக்கு வெளிவே வாழும் முஸ்லிம்கள் ஒவ்வொரு பொழுதும் எவ்வாறு விடியுமோ என்ற அச்ச உணர்வுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மொட்டு அணியினர் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுகின்ற சந்தர்ப்பத்தில் வட கிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களது நாளாந்த வாழ்க்கையில்கூட ஓர் அச்ச நிலை இடம்பெற வாய்ப்புண்டு.

முஸ்லிம் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது மிகுந்த சாதுர்யத்துடனும் சாணக்கியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். எமது பிரச்சினையைத் தீர்த்துத் தருவதாக சிலர் நமது மக்களை வேறு திசைக்கு திருப்புகின்ற நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.

தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டு தமது பிரச்சினைகளை பேசித் தீர்க்க வேண்டிய தருணமாக இக்கால கட்டம் உள்ளது. நமது முஸ்லிம் மக்கள் ஏனைய சமூகத்துடன் இன சௌஜன்யத்துடனும், சம உரிமையுடனும் நிம்மதியுடனும் வாழ்வதற்கு நமது அரசியல் பலத்தினை நாம் பாதுகாக்க வேண்டியுள்ளது.
ஒற்றுமையாக நாம் செயற்படும் போதுதான் எமது அரசியல் பலத்தினை பாதுகாக்க முடியும். எங்கு எமது வாக்குப் பலம் அதிகமாகவுள்ளதோ அங்குதான் எமக்குரிய மரியாதையும் எமக்குக் கிடைக்கும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச களம் இறக்கப்படுவதற்கு ஆரம்ப காலம் தொட்டு முழுக் காரண கர்த்தாவாக செயற்பட்டவர் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் என்பதனை எவராலும் மறுக்க முடியாத உண்மையாகவுள்ளது.
சஜித் வர முழுக்காரணம் ஹக்கீமே - ஆரிப் சம்சுடீன் சஜித் வர முழுக்காரணம் ஹக்கீமே - ஆரிப் சம்சுடீன் Reviewed by NEWS on October 14, 2019 Rating: 5