கிழக்கில் கோமாளி வேடம் போடும் ஹக்கீம் - மயோன் முஸ்தபா

கிழக்கிற்கு கோமாளி வேடம் போட்டு திரிகிறார் ஹக்கீம் ஹிஸ்புல்லாஹ்வை துரோகி என கூற முடியாது என முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவை ஆதரித்து நேற்று (15) மாலை 6 மணி முதல் 9 மணிவரை முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் எம்.எம்.மயோன் முஸ்தபாவினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மக்கள் கலந்துரையாடல் கல்முனை வரவேற்பு மண்டபம் ஒன்றில் நடைபெற்றபோது மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தனது கருத்தில்

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தான் முஸ்லிம் மக்களுக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல இடம்பெற்றன.ஆனால் இன்று முஸ்லிம் மக்களது இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவினால் கொண்டுவரப்பட்ட மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கான அனுமதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால் இன்று அந்த பல்கலைக்கழகத்தை திறக்க முடியாத நிலை காணப்படுவதை அவதானிக்கலாம்.

2015ல் அளுத்கமவில் இடம்பெற்ற இனக்கலவரத்தை இரவோடு இரவாக அமைதிக்கு கொண்டுவந்ததும் எமது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தான். இவ்வாறான காலகட்டத்தில் முஸ்லிம் மக்களது பாதுகாப்பை இல்லாமல் செய்தவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தான். குறிப்பாக 18ம் திருத்தத்திற்கு ஆதரவாக கைகளை தூக்கியவர்களும் இவர்கள் தான்.ஆகவே 2015 வரை இடம்பெற்ற அனைத்து அசம்பாவிதங்களுக்கும் பொறுப்பு கூறவேண்டிய கடப்பாடு இவர்களுக்கு உண்டு.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாசாவிற்கு எதுவித ஒப்பந்தங்களும் இன்றி தமது ஆதரவை தெரிவித்துக்கொண்டு முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றிக் கொண்டு வருகின்ற நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவை பகிடி பண்ணிக்கொண்டு கோமாளியாக திரிகின்றார். போராட்டம் போராட்டம் என்று கூறும் இவர் முஸ்லிம் காங்கிரஸின் போராட்டத்தின் வெற்றி என்ன? எதற்காக இந்த போராட்டம்? வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கு இந்த போராட்டத்தின் மூலம் கிடைத்த நன்மை தான் என்ன? ஒன்றுமில்லை பழைய பாடல் பாடும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகள் எதுவித தகுதியுமற்றவர்கள் என்பதை கூற விரும்புகின்றேன் என குறிப்பிட்டார்.

மேலும் இக்கலந்துரையாடலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு பற்றியும் கடந்த ஆட்சியின் பாதக தன்மைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.(அ)
கிழக்கில் கோமாளி வேடம் போடும் ஹக்கீம் - மயோன் முஸ்தபா கிழக்கில் கோமாளி வேடம் போடும் ஹக்கீம் - மயோன் முஸ்தபா Reviewed by NEWS on October 16, 2019 Rating: 5