பிரதான செய்திகள்

சமூக பரப்புக்குள் ஊடுருவும் வெறுமை வியூகங்கள்

சுஐப் எம் காசிம் 

முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் அதிகளவு கட்சிகள் முளைவிடத் தொடங்கியது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரஃபின் மறைவுக்குப்பின்னர்தான்.அஷ்ரஃபின் ஆளுமையும் அன்றைய தேசிய அரசியலில் (1994 முதல் 2000 வரை) இவரது கட்சிக்கிருந்த பேரம்பேசும் பலமும் வேறு கட்சிகளின் தேவைப்பாடுகளை வௌிப்படுத்தவில்லை .வௌிப்படுவதற்கான, முயற்சிகள் வேரூன்றினாலும் அவ்வேர்களை அடியோடு பிடுங்கியது அஷ்ரஃபின் ஆளுமை. இதன் பின்னர் முஸ்லிம் கட்சிகளின் வரவுகள் அதிகரிக்கத் தொடங்கி நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் முஸ்லிம் அரசியல் தளத்தில் தனது முகத்தைக் காட்டத் தொடங்கியது.

2013 ,2015 ,2018 ஆம் ஆண்டுகளில் நடை பெற்ற வடமாகாண சபைத் தேர்தல்,ஜனாதிபதித் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தல்களில் இக்கட்சி வகுத்துக் கொண்ட வியூகங்கள் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இக்குழப்பங்கள் இம் முன்னணியின் தேவைகளை உணர்வதிலிருந்து முஸ்லிம்களின் விருப்புக்களைத் தூரப்படுத்தின.

எமது நாட்டில் 2015 இல் அறிமுகமான இந்த சொற்பதம் முஸ்லிம்களைப் பொறுத்தவரை இஸ்லாத்துடன் இயைந்து செல்லும் நேர்வழி ஆட்சியுடன் தொடர்புடைய ஒன்று. இறைதூதர் முஹம்மது நபியவர்களுக்குப் பின்னர் நிகழ்ந்த சுமார் 40 வருட ஆட்சியுடன் இப்பெயர் தொடர்புறுகிறது. குலபாஉர்ராஸிதீன்கள் ஆட்சி, (நேர்வழிபெற்ற கலீபாக்களின் ஆட்சி) இதன் தமிழ் வடிவமே நல்லாட்சி எனப்படுகிறது.இஸ்லாத்தைப் பொறுத்த வரை இறைவனுக்குப் பிடித்த ஆட்சி. இலங்கையைப் பொறுத்தவரை ஊழல்,அதிகார துஷ்பிரயோகம் கொலை, கொள்ளை, குடும்பஆதிக்கத்திலிருந்து விடுபட்ட ஆட்சி.முஸ்லிம்கள் மத்தியில் வெகுவாக ஊடுருவி ஏனைய முஸ்லிம் தலைமைகளை வீழ்த்தும் நோக்குடன் இஸ்லாத்தின் நேர்வழி ஆட்சியை ஞாபகப்படுத்தவே இப்பெயர் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சமூக வகிபாகங்கள் எவையும் முஸ்லிம் சமூகத்தின் அடிமட்ட உணர்வுகளுடன் இயைந்து செல்லவில்லை. சென்றிருந்தால் இக்கட்சி பிரகாசித்திருக்கும். நடை முறைக்குச் சாத்தியமில்லாத கோட்பாடுகள், யதார்த்தத்தை தகர்த்தெறியும் பேச்சுக்கள் மற்றும் சாதாரண மக்களுடன் நெருங்கிப்பழகும் பக்குவம், பொறுமை என்பவை இக்கட்சியின் முன்னோடித் தலைவர்களிடம் இல்லை. மேட்டுக்குடி உணர்விலும், கல்வித் தகைமைகளின் செருக்கிலும் பழகும் இவர்களால் அடிமட்ட, சாதாரண முஸ்லிம்களின் மனப்பரப்புக்குள் நுழைய முடியாமல் போயிற்று. இதன் ஸ்தாபகத் தலைவர் காத்தான்குடியைச் சேர்ந்த பொறியியலாளர். தற்போதைய தலைவர் அக்கரைப்பற்றைச்சேர்ந்த சிறந்தபட்டதாரி, படிப்பாளி. இவர்களின் பிரதேசங்கள் பிரபல முன்னாள் அமைச்சர்களின் பூரண கட்டுப்பாட்டிலுள்ளவை. வானைத் தொட்டு நிற்கும் கட்டிடங்கள், அரச அலுவலகங்கள், கண்களைப் பறிக்கும் அதிஉன்னத வீதிகள்,வைத்தியசாலைகள், பூங்காக்கள் இவ்விரு கிராமங்களிலும் வழங்கப்பட்ட தொழில்வாய்ப்புக்கள், இவைகளைக் கடந்து மக்கள் மனங்களில் நுழைய வேண்டிய சவால்கள் இத்தலைவர்களுக்கு தத்தமது சொந்த ஊர்களில் காத்துக்கிடந்தன. இச்சவால்களைத் தகர்க்க இவர்கள் எடுத்துக் கொண்ட பிரயத்தனங்கள், பிரச்சாரங்கள் அனைத்தும் கணப்பொழுதில் தவிடு பொடியாக்கப்பட்டதேன்?. கட்டிடங்கள் தேவையில்லை. கச்சிதமான திட்டங்கள் தேவையென்றனர். வைத்திய சாலைகள் வேண்டியதில்லை. விவேகமுள்ள வைத்திய நிபுணர்களே அவசியம் என்றனர். வீதிகள்,வடிகான்கள் முறையான பராமரிப்பில்லை, வழங்கப்பட்ட தொழில்கள் படித்தோருக்கு இல்லை  என்றெல்லாம் இத்தலைவர்கள் எடுத்த விமர்சனங்கள் நூற்றுக்கு நூறு வீதம் அபிவிருத்தி நோக்கிலானவையே.

உண்மையில் உரிமைகள்,சமூக விடுதலைகள் பற்றி மிகக்குறைவாகப் பேசிய முஸ்லிம் கட்சியாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியே இருக்க முடியும்.இதன் தொடக்கமே வம்பில்தான் முடிந்தது. காத்தான்குடியில் ஹிஸ்புல்லாவையும், அக்கரைப்பற்றில் அதாஉல்லாவையும் எதிர்ப்பது இக்கட்சிகளின் தலைவர்களுக்கு முயற்கொம்பாகிப் போனது. முயற்சித்திருக்கலாம் வகுக்கப்பட்ட வியூகங்கள் விவேகமாகமுள்ளதாக இருக்கவில்லையே. கிழக்கு மாகாணத்தை பிரிக்க மஹிந்தரின் அரசுக்கு அதியுச்ச அழுத்தங்களை வழங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளும் இவ்விருவரும் தான்.இதனால் புலம்பெயர் டயஸ்பொராக்களின் தரகர்களாக இம் முன்னணி இறக்கப்பட்டதாகவும் அப்போது பேசப்பட்டது. இந்தப்பேச்சுக்களை புஷ்வாணமாக்கும் செயற்பாடுகளில் இறங்கியிருந்தால் முஸ்லிம் அரசியல் தளத்தில் இவர்களின் நிஜங்கள் இல்லாவிட்டாலும் நிழல்களாவது நின்றிருக்கும்.

வடமாகாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் உடன்படிக்கை, பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் உடன்படிக்கை, இவ்வாறு வந்து இன்று ஜேவிபியுடன் தேனிலவு. கம்யூனிஸத்துக்கும் இஸ்லாத்துக்கும் என்ன தொடர்பு.நேர்வழிக்கும் இறை நிராகரிப்புக்கும் என்ன நெருக்கம்.இதுதான் முஸ்லிம்களின் கேள்வி. இதனால்தான் இவர்களின் சின்னமான இரட்டைக் கொடியை இரட்டை நாக்குகளுடையோர் என்கின்றனர். உள்ளூராட்சி சபைகளில் 82 உறுப்பினர்களைப் பெற்றுள்ள இந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) உறுப்பினர்கள், அதிகாரங்களை சமமாகப் பங்கிடுவதாக சுழற்சி முறையில் உறுப்பினர்களாக்கப்படுகின்றனர். முப்பது, நாற்பது வருடங்களாகப் பாராளுமன்றத்திலுள்ள அரசில் தலைவர்களாலேயே சமூகத்தின் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வைக்காணும் வழிகளைக்காண முடியாதுள்ள நிலையில் வெறும் ஆறாறு மாதங்களுக்கு கதிரைகளைப் பகிர்வதால் எதைச் செய்யலாம்.? அதிகாரங்களுக்கான ஆசைகளே இவர்களின் ஆசனப் பங்கீடாகவுள்ளதோ தெரியாது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget