சமாதான நீதிவான்கள் கிழக்கு மாகாணத்திற்கான மாநாடு

(எம்.ஏ.றமீஸ்)

இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவை ஒழுங்கு செய்துள்ள கிழக்கு மாகாணத்திற்கான மாநாடு எதிர்வரும் 12ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு சக்கி கூட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட மற்றும் முழுத்தீவுக்குமான சமாதான நீதிவான்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள முடியும்.

பேரவையின் தேசிய பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ.மஜீத் தலைமையில் இடம்பெறவுள்ள இம்மாநாட்டின்போது துறைசார் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். இதன்போது நாட்டில் உள்ள நீதிவான்களின் நன்மை கருதி பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.

'சுபீட்சமான இலங்கை' எனும் தொனிப்பொருளின் கீழ் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் இம்மாநாடு எதிர்வரும் காலங்களில் நாட்டின் ஏனைய மாகாணங்களில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன ஐக்கியம், சமாதானம், நீதி, மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக கடந்த காலங்களில் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வரும் இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவை, கடந்த காலங்களில் சமாதானம் மற்றும் நீதியை நிலைநாட்ட பாடுபட்டவர்களுக்கு கிழக்கு மாகாண மாநாட்டின்போது விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது, இந்நிகழ்வில் பங்குபற்ற விரும்பும் சமாதான நீதிவான்கள் 0778614444 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.
சமாதான நீதிவான்கள் கிழக்கு மாகாணத்திற்கான மாநாடு சமாதான நீதிவான்கள் கிழக்கு மாகாணத்திற்கான மாநாடு Reviewed by NEWS on October 04, 2019 Rating: 5