நாமல் - றிஷாத் அறிக்கையின் பின்னணி என்ன ..?


நாமல் - றிஷாத் அறிக்கையின் பின்னணி என்ன, தவறாக வழி நடாத்தப்பட்டாரா நாமல், அ.இ.ம.கா தலைவர் றிஷாதின் பலம்...?

இனவாதம் பேசுவதில் மொட்டு அணியினர் வல்லவர்கள். அவ்வாறு பேசியே கடந்த ஜனாதிபதி தேர்தலில் பாரிய வெற்றியும் பெற்றிருந்தனர். வெற்றி பெற்ற பின் உருப்படியாக ஏதாவது செய்து மக்கள் ஆதரவை பெற முடியாததனால் மீண்டும் இனவாதத்தையே கையில் எடுத்துள்ளனர். இதில் ஒரு அங்கமாக அ.இ.ம.காவின் தலைவர் பயன்படுத்தப்படுகிறார். தற்போது பா.உ ஹக்கீமையும் இனவாதத்தோடு தொடர்புபடுத்தி வாட்டி எடுக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. இதுவெல்லாம் நீண்ட காலம் நிலைக்கப் போவதில்லை.

" தங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால் காடழிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளோரிடம் கையேந்தும் நிலை ஏற்படும் " என பா.உ நாமல் ராஜபக்ஸ கூறியிருந்ததாக சில தமிழ், சிங்கள இணையங்களில் காணக்கிடைத்தது. இவ் விடயத்தை தமிழ் இணையமொன்று ( sonakar.com ), றிஷாதோடு இணையும் சூழ்நிலை ஏற்படுமென" நாமல் கூறியதாக தலைப்பிட்டு பதிவிட்டிருந்தது. இந்த சில்லறை ஊடக வியாபாரம் தமிழ் மொழி ஊடகங்களில் சாதாரணமாகவே நடந்தேறுவதே! அவ் ஊடகத்திற்கும் அ.இ.ம.காவின் தலைவருக்கும் எவ்வித சம்மந்தமுமில்லை. அரசியல் ஆய்வாளர்கள் எல்லாம் தலைப்பை பிடித்து பொருளெடுக்க மாட்டார்கள். தலைப்பை பார்த்து பொருளெடுக்கும் சிலர் இதனை இரு அணியினரும் இணையப்போவதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர். குறித்த பதிவுகளுக்கு பா.உ நாமல் ராஜபக்ஸவின் கருத்தை உரிய முறையில் விளங்காது இவ்வாறு பதிவிட்டுள்ளதாக எதிர்வாதங்கள் பலவும் முன்வைக்கப்பட்டுமிருந்தன.
இதுவெல்லாம் மொட்டு ஆதரவாளர்களின் கண்களுக்கு புலப்படவில்லை. அ.இ.ம.கா தலைவர் றிஷாதை சேர்ப்பதா என்ற வினாவே கண் முன் நின்றது. இது மொட்டுவின் ஆதரவாளர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை வழங்கியிருந்தது. அவர் வந்தால் இவர்களின் இருப்புகளுக்கு பிரச்சினையல்லவா? தட்டுத் தடுமாறி மேல் மட்டத்துக்கு எத்தி வைத்துள்ளார்கள். இதன் விளைவாகவே நேற்று பா.உ நாமல் ராஜபக்ஸ " தாங்கள் எதிரணியில் இணைய நேரிட்டாலும் றிஷாதை இணைக்க மாட்டோம் " என கூறிய விடயத்தை நோக்கலாம். இதற்காகவே இவ்வாறு பா.உ நாமல் கூறியதாக மொட்டு ஆதரவாளரொருவர் கொக்கரித்துமிருந்தார்.
குறித்த விடத்தை தலைப்போடு நிறுத்தாமல் சிறிய டேட்டா செலவு செய்து, இணையத்துக்குள் உட் சென்று, பூரணமாக வாசித்திருந்தாலே, அத் தகவல் எந் நோக்கோடு கூறப்பட்டது என்பதையும், அது அ.இ.ம.காவின் தலைவருக்கு எதிரானது என்பதையும் அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்திருக்கும். இது தொடர்பில் யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. நிலை இவ்வாறிருக்க இதனை உயர் மட்டத்துக்கு கொண்டு சென்று, பா.உ நாமல் ராஜபக்ஸவின் பெயரில் அறிக்கையும் வெளிவந்துள்ளது. பா.உ நாமல் ராஜபக்ஸவின் பெயரில் அறிக்கையொன்று வருவது சாதாரணமாக நோக்கக் கூடியதல்ல. பாரிய அரசியல் பின்புலம் கொண்ட ராஜபக்ஸ குடும்பத்தின் அரசியல் வாரிசு. இலங்கை அரசியலின் முக்கிய புள்ளி. இவரின் பெயரில் இவ்வாறானதொரு விடயத்துக்கு அறிக்கையொன்று வெளியாவவது இவரின் ஆளுமையை கேள்விக்குட்படுத்தும். இக் குறித்த விடயத்தில் பா.உ நாமல் ராஜபக்ஸவின் நாமம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிந்துகொள்ள முடியும்.
அந்த அறிக்கை பல தமிழ் ஊடகங்களில் வெளி வந்திருந்தது. அனைத்து ஊடகங்களும், ஒரு ஊடகத்திற்கு நாமல் ராஜபக்ஸ கருத்து தெரிவித்த போது என கூறுகிறதே தவிர, அது எந்த ஊடகம் என்று கூறியதா? இல்லையல்லவா? பா.உ நாமல் மு.அமைச்சர் றிஷாதை பற்றி ஒரு விடயம் கூறினால் அதற்கு சிங்கள மொழி ஊடகங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வழங்குமென்பதை நாடறியும். இதனை யாராவது சிங்கள மொழி ஊடகங்களில் பார்த்தீர்களா, இல்லையல்லவா? இது தான் அவ்வறிக்கையின் தரம்.

அவ்வாறானால் இதனை எப்படிநோக்குவது?

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மொட்டு அணியினரால் சாதாரண பெரும்பான்மை கூட பெற முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவர்களது கற்பனைக்கு அப்பாற்பட்டது. மொட்டு அணியினருக்கு சிறு பான்மை கட்சிகளின் தேவை புறக்கணிக்க முடியாதது. எனினும், சிறுபான்மை கட்சிகளின் தேவை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் பின்னரே உணரப்படும். நிலை இவ்வாறிருக்கையில், இப்போது ஏன் தங்களது ஆதரவாளர்களின் உள்ளங்களை உடைக்க வேண்டும்.

தங்களது நேரடி ஆதரவாளர்களின் உள்ளங்களை சாந்தியுறச் செய்ய இவ்வாறு கூறியிருக்கலாம். அறிக்கையின் தரமும் அவ்வாறே உள்ளதல்லவா? அவரை இணைத்தால் இவர்களால் கேள்வியா கேட்க முடியும். இவர்கள் ஒன்றும் இணைக்க அழைக்காதவர்களுமல்ல. இன்று பா.உ நாமல் வில்பத்துவை அழித்ததாக கூறும் மு.அமைச்சர் றிஷாதை 52 நாள் ஆட்சி மாற்றத்தின் போது ஆட்சியமைக்க அழைக்கவில்லையா? அழைத்தார்கள் தானே! நிலை இவ்வாறிருக்க தற்போது கூறியுள்ளதை நம்புவதா? அன்றும் அப்படித் தான் கூறினார்கள். பிறகு அழைத்தார்கள் தானே!

எல்லாம் சரி, அ.இ.ம.காவின் தலைவர் றிஷாத், தான் மொட்டு அணியினரோடு இணையப் போவதாக எப்போது கூறினார். அவரோ சஜிதை பிரதமராக்கப் போகிறோம் என கூறுகிறார். சில மொட்டு ஆதரவாளர்களோ, இவரை இணைக்க மாட்டோமென கூறுகின்றனர். அ.இ.ம.கா தலைவரது எந்த செயற்பாடாவது மொட்டு அணியினரோடு இணைவதற்கான நகர்வாகவுள்ளதா? அவ்வாறானால், பா.உ நாமலும், மொட்டு போராளிகளும், ஏன் இணைக்க மாட்டோமென கூற வேண்டும். எது, எப்படியோ, இவ்விடயமானது மொட்டு அணியினருக்கு அ.இ.ம.கா தலைவர் பெரும் தலையிடியாக உள்ளதை துல்லியமாக்கின்றது.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,

சம்மாந்துறை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்