மஹிந்த அமைச்சு பகிர்வில் நடந்தேறிய முஸ்லிம்கள் மீதான புறக்கணிப்பை பொய்யுரைத்து நியாயப்படுத்த முனைந்ததேன்..?


கடந்த அமைச்சரவை நியமனத்தின் போது முஸ்லிம்கள் யாருமே உள் வாங்கப்பட்டிருக்கவில்லை. இது பாரிய விமர்சனத்தை தோற்றுவித்திருந்தது. இதற்கு பதிலளித்தவர்கள், "பொதுஜன பெரமுனைவில் முஸ்லிம்கள் யாருமே நேரடியாக அங்கத்துவம் வகிக்கவில்லையென கூறியிருந்தனர்" . 

மஹிந்த ராஜபக்ஸ அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில், இவ் விடயத்திற்கு நியாயம் கற்பித்த அவர், " தாங்கள் பைசர் முஸ்தபாவை அமைச்சை ஏற்றுகுமாறு கூறியிருந்ததாகவும், அதனை அவர் ஏற்க மறுத்திருந்ததாகவும் கூறியிருந்தார். பைஸர் முஸ்தபாவிற்கு அமைச்சை வழங்கியிருந்தால் மறுத்திருப்பாரா..? இது பச்ச பொய்யாக தெரியவில்லையா...? இதனை நம்பும் யாராவது உள்ளனரா..? இது எவ்வளவு பொய்யானது என்பதை அறிய ஜனாதிபதி கோத்தாவின் கூற்று போதுமானதாகும். அவர் அண்மையில் குறிப்பிடும் போது " முஸ்லிம்களில் பொருத்தமான ஒருவர் இல்லாமையை " முஸ்லிம் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படாததன் காரணமாக குறிப்பிட்டிருந்தார். இது பத்திரிகைகளிலும் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரினதும் முரண்பட்ட கருத்தே இதிலுள்ள பொய்யை தோலுரிக்க போதுமானதாகும்.

இது தொடர்பில் பைஸர் முஸ்தபா குறிப்பிடும் போது " இராஜாங்க அமைச்சர்கள் பட்டியலில் தனது பெயர் இருந்ததாகவும், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சில் இருந்த அவருக்கு இராஜாங்க அமைச்சை ஏற்பது தன்மானப் பிரச்சனையாக இருந்ததாகவும் " குறிப்பிட்டிருந்தார். இங்கு நாம் விளங்க வேண்டியது பைஸர் முஸ்தபாவுக்கு மஹிந்த அரசு வழங்க தயாராக இருந்தது இராஜாங்க அமைச்சே! அவ்வாறானால் முஸ்லிம் ஒருவருக்கு இராஜாங்க அமைச்சு போதுமானதென பிரதமர் மஹிந்த கூற வருகிறாரா? கெபினட்டில் எடுக்கப்படும் தீர்மானங்களில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டே, இவ்வரசு முஸ்லிம் ஒருவரை அமைச்சராக நியமிக்காமையை முஸ்லிம்கள் விமர்சித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இராஜாங்க அமைச்சரால் கெபினட்டில் தாக்கம் செலுத்த முடியாது.

" தான் அமைச்சுக்கு தகுதியில்லை என்றால், எனது பா.உறுப்புறுமையை அலி சப்றிக்கு வழங்குகிறேன். அவரை அமைச்சராக்குங்கள் " என்று கூட பைஸர் முஸ்தபா கூறியிருந்தார். அதாவது முஸ்லிம் ஒருவர் கட்டாயம் அமைச்சராக நியாமிக்கப்பட வேண்டும் என்பதை அவர் உணர்ந்ததன் வெளிப்பாடனெலாம். இவர் மஹிந்த அணியினர் அமைச்சை வழங்கியிருந்தால் தேவையில்லை என்றிருப்பாரா?

" தனது வழங்கப்படவிருந்த இராஜாங்க அமைச்சை பா.உ காதர் மஸ்தானுக்கு வழங்குமாறு " பா.உ பைஸர் முஸ்தபா அந் நேரத்தில் சு.கவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். எந்த அமைச்சை கொடுத்திருந்தாலும் காதர் மஸ்தான் மகிழ்வோடு ஏற்றிருப்பார். இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள முடியும். அவ்வாறானால், குறைந்தது காதர் மஸ்தானுக்கு பிரதி அமைச்சையோ அல்லது இராஜாங்க அமைச்சையோ வழங்கியிருக்கலாமே! இது தெளிவான புறக்கணிப்பன்றி வேறேதுமல்ல.

ஏன் அன்று இதனை நியாயப்படுத்த முனையாத பிரதமர் மஹிந்த, இன்று நியாயப்படுத்த முனைகிறார். முஸ்லிம் நாடுகளின் ஆதரவை பெற முஸ்லிம் பா.உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அவசியம். உதாரணமாக, அண்மையில் ஜனாதிபதி கோத்தாபாய ஓமான் மன்னனின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்க தனது பிரதிநிதியாக பா.உ பைஸர் முஸ்தபாவை அனுப்பியிருந்தார். ஒரு நாட்டின் பிரதிநிதியாக செல்லும் நபருக்கு அவரது சொந்த நாட்டில் குறித்த அரசு வழங்கியுள்ள அதிகாரம், நாட்டு மக்களின் செல்வாக்கு, அவர் எந் நாட்டுக்கு செல்கிறாரோ, அந் நாட்டுக்கு பிரநிதியை அனுப்பிய நாடு வழங்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும். சாதாரண பா.உறுப்பினர் செல்லும் போது, சாதாரண பா.உறுப்பினரினூடாக அனுதாபம் தெரிவிக்குமளவு தாங்கள் தரம் குறைந்தவர்களா என சிந்திக்க தூண்டும். இது இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை பாதிக்கும்.

அது மாத்திரமன்றி, பா.உ பைஸர் முஸ்தபா சர்வதேச ரீதியில் அறியப்பட்ட ஒருவருமல்ல. இவ்வாறான சந்தர்ப்பங்களில் முஸ்லிம் ஒருவரை தங்களது பிரதிநிதியாக அனுப்புவதே பொருத்தமானது. குறைந்தது இவர் அமைச்சராக இருந்திருந்திருந்தால், அவர்களது நாட்டின் அமைச்சரைத் தான் பிரதிநிதியாக அனுப்பியுள்ளனர் என சிந்திப்பர். இவ்வளவு நாளும் யாராவது ஒரு முஸ்லிம் அமைச்சர் இவ்வாறன சந்தர்ப்பங்களில் சென்று வருவார். இப்போது சாதாரண பா.உ சென்றால், அது பல விடயங்களை சிந்திக்க காரணமாக அமையுமல்லவா? இதனை நான் உதாரணமாக கூறியுள்ளேன். இது போன்ற பல விடயங்களில் இவ்வரசு முஸ்லிம் அமைச்சர் ஒருவரை நியமிக்காததன் விளைவை அனுபவித்துகொண்டிருக்கின்றது.

ஏற்கனவே, சர்வதேச முஸ்லிம் நாடுகள் இலங்கை நாட்டு முஸ்லிம்கள் இனவாத ரீதியாக அல்லலுற்றிருப்பதை அறிந்து வைத்துள்ளன. கடந்த மஹிந்த ஆட்சி முஸ்லிம்கள் அனுபவித்த வேதனைகளையும் அறிந்து வைத்துள்ளன. இவ்வாறான புறக்கணிப்புக்கள் நடந்துள்ளதையும் அறிந்தால், அவற்றின் இலங்கை நாட்டின் மீதான பார்வை வேறுபடலாம். இதன் விளைவுதான், இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பொய்யுரைத்து இதனை நியாயப்படுத்த முனைந்துள்ளதாகவும். 

" இவ்வரசின் முஸ்லிம்கள் மீதான புறக்கணிப்பு, அவர்கள் பல இடங்களில் புறக்கணிக்கப்பட காரணமாக அமைந்துள்ளது. " இனியாவது இவ்வரசு சிந்தித்து செயற்பட வேண்டும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
மஹிந்த அமைச்சு பகிர்வில் நடந்தேறிய முஸ்லிம்கள் மீதான புறக்கணிப்பை பொய்யுரைத்து நியாயப்படுத்த முனைந்ததேன்..?  மஹிந்த அமைச்சு பகிர்வில் நடந்தேறிய முஸ்லிம்கள் மீதான புறக்கணிப்பை பொய்யுரைத்து நியாயப்படுத்த முனைந்ததேன்..? Reviewed by NEWS on January 16, 2020 Rating: 5