ஜனாதிபதி கோத்தாபய அரசியலமைப்பிற்கு முரணாகவே தேர்தலில் போட்டியிட்டுள்ளார் - மங்கள குற்றச்சாட்டுஅமெரிக்கக் குடியுரிமையை நீக்கிக்கொண்டவர்களை உள்ளடக்கி நேற்று வெளியான பெயர்ப்பட்டியல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின் பெயர் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அரசியலமைப்பிற்கு முரணாகவே போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியிருக்கிறார்.


அமெரிக்கக் குடியுரிமையை நீக்கிக்கொள்வதற்கு விண்ணப்பிப்பவர்களில், குடியுரிமை நீக்கப்பட்டவர்களின் பெயர்கள் உள்ளடங்கிய பட்டியலை அமெரிக்கா ஒவ்வொரு காலாண்டும் வெளியிடுவது வழமை.


அவ்வாறு இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்கள் அடங்கிய காலாண்டுக்கான பெயர்ப்பட்டியல் அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவின் பெயரும் உள்ளடங்கியிருக்கிறது.


கோத்தாபய ராஜபக்‌ஷவின் இரட்டைக் குடியுரிமை விவகாரம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதாக அவர் அறிவித்த போது பாரிய சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்தது. இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் இரட்டைக் குடியுரிமையுள்ள ஒருவர் தேர்தல்களில் போட்டியிட முடியாது. ஆனால் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்த சந்தர்ப்பத்தில், கோத்தாபய ராஜபக்‌ஷ அமெரிக்கக் குடியுரிமையை நீக்கிக்கொண்டுவிட்டதாகவே அவரது தரப்பினர் கூறிவந்தனர்.


இந்நிலையில் நேற்று அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலில் கோத்தாபய ராஜபக்‌ஷவின் பெயர் உள்ளடங்கியிருப்பதால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேளையில் அவர் அமெரிக்கக் குடியுரிமைக்கு உரித்துடையவராக இருந்தாரா என்ற பாரிய சந்தேகத்தை இது ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது,


கோத்தாபய ராஜபக்‌ஷ இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருந்த போதிலும், அவர் அரசியலமைப்பிற்கு முரணாகவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவாகியிருக்கிறார் என்பது இப்போது உறுதியாகின்றது. இலங்கையின் அரசியலமைப்பை மீறும் வகையில் அடிக்கடி அவரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளுக்கு இப்போது அர்த்தம் புரிகிறது என்று பதிவிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய அரசியலமைப்பிற்கு முரணாகவே தேர்தலில் போட்டியிட்டுள்ளார் - மங்கள குற்றச்சாட்டு  ஜனாதிபதி கோத்தாபய அரசியலமைப்பிற்கு முரணாகவே தேர்தலில் போட்டியிட்டுள்ளார் - மங்கள குற்றச்சாட்டு Reviewed by ADMIN on May 09, 2020 Rating: 5