ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் - மட்டக்குளி பள்ளிவாசலில் இயங்கிய அலுவலகத்துக்கு சீல் - பல ஆவணங்கள் மீட்பு(எம்.எப்.எம்.பஸீர்)

நாட்டில் 8 இடங்களில் கடந்த வருடம், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21 ஆம் திகதி) இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுடன் புத்தளம் பிரதேசத்தின் அமைப்பொன்றும் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் சி.ஐ.டி. தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டிருந்த நிலையில் அதன் பொறுப்பாளராக செயற்பட்ட நபர் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், அவர் நடாத்தி வந்த அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் அலுவலகம் , கொழும்பு 15, மட்டக்குளி பகுதியில் பள்ளிவாசல் ஒன்றின் 2 ஆம் மாடியில் உள்ள அறையொன்றில் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று சி.ஐ.டி.யினரால் அந்த பள்ளிவாசல் அறை அதிரடியாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது அங்கிருந்து பல ஆவணங்கள், குறித்த அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் குறித்த பற்றுச் சீட்டுக்கள் உள்ளிட்டவை சி.ஐ.டியால் மீட்கப்பட்டதாகவும், தற்போது அவ்வறைக்கு சீல் வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன வீரகேசரியிடம் தெரிவித்தார்.

இதனைவிட குறித்த சந்தேக நபரின் அமைப்பின் பிரதான அலுவலகம் புத்தளம் , மதுரங்குளி, அசார் நகரை மையப்படுத்தி இயங்கியதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதுவும் சீல் வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

இந்நிலையில் இவ்விரு இடங்களில் இருந்தும் மீட்கப்பட்ட ஆவணங்கள், பற்றுச் சீட்டுக்கள், புத்தகங்கள், சஞ்சிகளை சிறப்பு குழு ஆராய்ந்து வருவதாகவும், அவ்வமைப்புக்கு நிதி அளித்தவர்கள் உள்ளிட்ட விடயங்களை கண்டறிய விஷேட விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று புத்தளம் - கற்பிட்டி, 4 ஆம் குறுக்குத் தெரு பகுதிக்கு சென்ற சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு நபர் ஒருவரை அவரது வதிவிடத்தில் வைத்து பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்தது. கைது செய்யப்ப்ட்ட நபர் சி.ஐ.டி. தலைமையகமான 4 ஆம் மாடிக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த நபர் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினை நடாத்தி வந்துள்ள நிலையில், அதன் நிதி ஊடாக அடிப்படைவாதத்தை போதனை செய்ய பயிற்சி நெறிகளை முன்னெடுத்துள்ளதாகவும், அதற்காக உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை நடாத்திய குண்டுதாரிகள் வளவாளர்களாக வந்து சென்றுள்ளமையும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

அவ்வாறு நடாத்தப்பட்ட பயிற்சி நெறிகளின் போது பயிற்சி நெறிகளுக்கு பொறுப்பாளராகவும் குறித்த நபரே செயற்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி. தெரிவித்தது.

இந்த அரச சார்பற்ற நிறுவனத்தின் பொறுப்பாளரால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள அடிப்படைவாத போதனை முகாம்களில், பயங்கரவாதி சஹ்ரான், சங்ரில்லா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரி மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட் மற்றும் சினமன் கிரான்ட் ஹோட்டல் தற்கொலைதாரி மொஹம்மட் இப்ராஹீம் இல்ஹாம் அஹமட் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகள் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவின் கீழ் இடம் பெற்று வருகின்றது.

இந்நிலையில் சி.ஐ.டி. எனும் குற்ற விசாரணைத் திணைக்கள சிறப்புக் குழுவின் விசாரணைகளின் கீழ் இருந்த இந்த அரச சார்பற்ற நிறுவன பொறுப்பாளரான சந்தேக நபர் குறித்த மேலதிக விசாரணைகள் சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கர்வாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவினால் இவ்விசாரணைகள் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மேலதிக விசாரணைகளை சி.ரி.ஐ.டி.யினர் ஆரம்பித்துள்ளனர்.

சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் 11 பொலிஸ் குழுவினரும், சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் 3 பொலிஸ் குழுக்களும் இந்த விசாரணைகளை முன்னெடுப்பதுடன், இதுவரை மொத்தமாக இந்த விவகாரத்தில் கைது செய்யப்ப்ட்ட சந்தேக நபர்கள் 198 என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார். அதில் 120 பேர் சி.ஐ.டி.யினராலும் 78 பேர் சி.ரி.ஐ.டி.யினராலும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்கடடினார்.
ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் - மட்டக்குளி பள்ளிவாசலில் இயங்கிய அலுவலகத்துக்கு சீல் - பல ஆவணங்கள் மீட்பு ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் - மட்டக்குளி பள்ளிவாசலில் இயங்கிய அலுவலகத்துக்கு சீல் - பல ஆவணங்கள் மீட்பு Reviewed by ADMIN on May 04, 2020 Rating: 5