எரித்தாலும், புதைத்தாலும் ஈமானுடன் இறையடி சேர்வோம்...மாஷித்தா என்ற பெண்ணைத் தெரியுமா? மாஷித்தாவின் கதை தெரியுமா? கவலை தோய்ந்து எம்மால் எதுவும் செய்ய முடியாமல் ஒவ்வொருவராக எரிக்கப்படுவதைத் தாங்கமுடியாமல் இன்று சோர்வுடன் இருக்கும் உங்களைச் சாந்திப்படுத்த அந்தக் கதையைச் சொல்லுகின்றேன், கேளுங்கள். இது நபிகளாருக்கு வானவர்கோன் சொன்ன கதை.


மிஹ்ராஜ் (விண்ணுலக யாத்திரை) சென்ற வேளையில் ஒரு இடத்தில் அண்ணலார் அவர்கள் ஒரு ரம்யமான நறுமணத்தை நுகர்கிறார்கள். விசேடமான மணமாக இருக்கவே அண்ணலார் அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் அந்த மணத்தைப் பற்றி வினவ "இது மாஷித்தாவினதும் அவருடைய குடும்பத்தினரினதும் நறுமணம்" என்று பதில் வருகிறது. எதற்காக இப்படி ஒரு விஷேடமான நறுமணம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிர&##3009;க்கின்றது என்று வினவ ஜிப்ரீல் (அலை) அவர்கள் மாஷித்தாவின் கதையினைக் கூறினார்கள்.


மாஷித்தா வேறு யாருமல்ல, பிர்அவுனின் அரண்மனையில் வேலை செய்த ஒரு சேவகி/அடிமை. நானே கடவுள் என்று முழங்கி அதிகார வெறியில் ஆண்டு கொண்டிருந்த பிர்அவுனுடைய பிள்ளைகளில் ஒன்றுக்கு ஒருநாள் தலைவாரி விடுகிறார் மாஷித்தா. அப்போது மாஷித்தாவின் கைகளில் இருந்த சீப்பு கீழே விழுந்து விடுகிறது. "பிஸ்மில்லாஹ்" என்று சொல்லி கீழே விழுந்த அந்த சீப்பினை மீண்டும் எடுத்தார் மாஷித்தா. அது பிர்அவுனுடைய பிள்ளையின் காதுகளில் விழுந்து விட அது பூதாகாரமாகின்றது. " எனது தந்தைதானே கடவுள். அது யார் நீ அழைக்கின்ற இன்னொரு இறைவன்?" என்று கேட்க மாஷித்தா சொல்கின்றார் "என்னையும், உன்னையும், உனது தந்தையும் படைத்த அல்லாஹ்வே நான் வணங்குகின்ற இறைவன்". அவ்வளவுதான் விடயம் பிர்அவுனுடைய சபைக்கு வருகிறது. கோபம் தலைக்கேற பிர்அவுன் கொதித்தெழுகின்றான். ஹாமான் உருக்கொடுத்து எழுப்புவிடுகிறான். மாஷித்தா பிர்அவுனின் முன்னிலையில் ஆஜர் படுத்தப் படுகின்றார்.


"நானே உன் இறைவன் என்பதனை நீ நம்பவில்லையா?", மாசித்தாவின் பதில் "இல்லை, எனதிறைவன் அல்லாஹ் மட்டுமே. அவனே என்னையும் உன்னையும் படைத்தான்". எகிப்து முழுமையும் என்னைக் கடவுள் என்று ஏற்றிருக்கிறது, ஆனால் இவள் யாரிந்த இந்த அடிமை என்னை கடவுள் இல்லை என்று மறுக்க யாரிவள் என்ற கோபத்தின் உச்சியில் குதிக்கின்றான். பல மிரட்டல்கள் அதட்டல்கள், எவ்வளவு அதட்டியும் ஆர்ப்பரித்தும் அச்சுறுத்தியும் கடைசிவரையிலும் மாஷித்தாவின் ஈமானில் மாற்றமில்லை. சரி, கிடங்கிலே நெருப்பை மூட்டுங்கள் என்று பிர்அவுன் உத்தரவிடுகிறான். கொழுந்துவிட்டு எரியும் தீங்கிடங்கு தயாராகிறது. மாஷித்தாவின் குடும்பத்தினர் இழுத்து வரப்படுகிறார்கள். "நீ என்னை உன்னுடைய இறைவன் என்று நம்பாவிடடால் உனது கணவன் குழந்தைகள் என ஒவ்வொருவராக இந்தத் தீக்கிடங்கில் வீசுவேன், கடைசியில் உன்னையும் இதற்குள் தள்ளி விடுவேன்" என்று பிர்அவுன் அச்சுறுத்துகிறான். மாஷித்தா மசியவில்லை. கணவனைக் கிடங்கில் வீசுகின்றான் பிர்அவுன். கண்முன்னேயே கணவன் எரிந்து இறந்து போகிறார். மாஷித்தா ஈமானை விட்டுக் கொடுக்கவில்லை. பின்னர் ஒவ்வொரு குழந்தையாக நெருப்பில் வீசப்படுகிறார்கள். எப்படி இருக்கும் அந்தத் தாய்க்கு. கண்முன்னேயே எரிந்து சாம்பலாகும் குழந்தைகளை எந்தத் தாய்க்காவது பார்த்துப் பொறுக்க முடியுமா? நெஞ்சம் வெடித்து விடுமே. அழுது வெம்புகிறது மாசித்தாவின் உடலும் உள்ளமும். தாயல்லவா?! இருந்தாலும் மாஷித்தா என்ன நடந்தாலும் பிர்அவுனைக் கடவுளாக ஏற்கவே இல்லை.


கோபத்தின் உச்சியில் நின்று பிர்அவுன் கத்துகிறான். "என்னைக் கடவுளாக ஏற்கமுடியாத உனக்கு எனது இராச்சியத்தில் இடமில்லை. நீயும் அந்தத் தீயில் குதித்துக் கருகிப் போ" என்று ஆணை இடுகின்றான். தீயில் குதிப்பது மாஷித்தாவுக்கு ஒரு பெரிய விடயமாக இருக்கவில்லை, ஆனால் அப்போது அவருடைய கையிலே ஒரு கைக்குழந்தையும் இருக்கிறது. அது எதுவுமே அறியாத குழந்தையாயிற்றே. நான் நெருப்பில் குத்தித்தால் இந்தப் பிஞ்சுக் குழந்தையுமல்லவா கருகிவிடும் என்ற கவலை (அது கவலைக்கும் மேலே பல்லாயிரம் கோடி மடங்கு கொடியது. எனக்கு வேறு சொல் தெரியவில்லை. ஆகவே அதனைக் கவலை என்று சொல்கின்றேன்). அந்தக் கவலையால் ஒரு கணம் மாசித்தாவின் மனம் சற்றுப் பின்வாங்குகிறது. என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கும் நேரத்தில்...


குழந்தை பேசியது. "தாயே இந்த நெருப்பிற்குப் பயந்து பிர் அவுனை இறைவன் என்று ஏற்றுக்கொண்டு விடாதீர்கள். இதனை விட 70 மடங்கு கொடியது நரகின் நெருப்பு. இந்த நெருப்பையே தாங்கமுடியாது என்று அஞ்சினால் மறுமையின் நெருப்பை என்ன சொல்வது? எதற்கும் அஞ்சாதீர்கள். இந்தக் கிடங்கில் குதியுங்கள். எமக்கு அல்லாஹ்விடத்தில் அதற்கான கூலி நிச்சயம் உண்டு" என்று சொல்கின்றது. மாஷித்தா குழந்தையோடு நெருப்பில் குதித்து இறந்து போகிறார். இதுதான் மாசித்தாவின் கதை. இந்த பிகப்பெரிய தியாகத்திற்கு கிடைத்த சன்மங்களில் ஒன்றே நபிகளார் நுகர்ந்த அந்த விசேடமான நறுமணம்.


குற்றங்கள் ஏதும் செய்ததற்காக மாஷித்தாவின் குடும்பம் எரிக்கப்படவில்லை. திருட்டுக் குற்றமும் இல்லை, கொலைக் குற்றமும் இல்லை, பணமோசடிக் குற்றமும் இல்லை, நம்பிக்கைத் துரோகக் குற்றமும் இல்லை, தேசத் துரோககக் குற்றமுமில்லை. பிறகு எதற்காக இந்தக் கொடிய தண்டனை? அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணம்தான். அதற்காகத்தான் எரிக்கப்பட்டார்கள். அவர்கள் அல்லாஹவை இறைவனாக ஏற்றுக் கொண்டார்கள் என்ற ஒரே காரணம்தான். பிரவுனும் ஹாமானும் அவர்களது கூட்டத்தினரும் கொண்டிருந்த இறை நம்பிக்கைக்கு எதிராக இவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டார்கள். அதற்காகவே எரிக்கப்பட்டார்கள். வேறு காரணங்கள் எதுவும் இல்லை.


நமது நாட்டில் இன்றைக்கு நடப்பதும் இதுதான் நண்பர்களே. எரிக்கப்பட்ட எமது முஸ்லிம்கள் என்ன தேசத்துரோகிகளா? அல்லது கொலைகாரர்களா? போதைவஸ்துக் கடத்தினார்களா? கொள்ளையடித்தார்களா? இல்லையே. தொற்று நோய்வந்து இறந்து போனார்கள். முழு உலகுமே தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களை புதைக்கின்றது. இலங்கையில் மட்டும் அது முடியாது. ஏனெனில் அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி, பிர்அவுனுக்கும் ஹாமானுக்கும் முஸ்லிம்களை எரிப்பதில் எப்போதுமே ஆனந்தம்.


இன்ஷா அல்லாஹ் இந்த புனித மாதத்தில் உறுதியான ஈமானுடன் இறைவன் பக்கம் எமது திசையை திரும்புவோம்.எதிர் வரும் பெருநாளை மிகவும் கருசனையோடு எதிர் கொள்வோம் . இல்லையேல் நாமும் நமது உறவினர்களின் ஜனாசாக்கள் இறுதியாக நெருப்புக்கு இரையாகும் என்பதை ஒரு கனம் சிந்திப்போம்.


- NJ.Zeron Anas -

எரித்தாலும், புதைத்தாலும் ஈமானுடன் இறையடி சேர்வோம்...  எரித்தாலும், புதைத்தாலும் ஈமானுடன் இறையடி சேர்வோம்... Reviewed by ADMIN on May 12, 2020 Rating: 5