திகாமடுல்ல : மு.காவில் மூவர் களமிறங்கிய போது முடியாதது, அறுவர் இறங்கியுள்ள போது முடியுமா..?மு.கா வழமையாக ஐ.தே.கவில் மூவரை களமிறங்கும். தனது அம்பாறை மாவட்ட முழு வாக்கையும் இம் மூவருக்கும் வழங்குமாறு கோரும். தற்போது இந்த வியூகத்தை மாற்றியுள்ளது. இம் முறை மு.கா அறுவரை டெலிபோன் சின்னத்தில் களமிறங்கியுள்ளது. இதன் மூலம் முஸ்லிம்கள் டெலிபோனுக்கு வாக்களித்தாலும், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை டெலிபோனினூடாக பெற முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த அச்சத்தில் நியாயம் இல்லாமலுமில்லை.
கடந்த 2015ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மு.காவானது ஐ.தே.கவில் மூன்று வேட்பாளர்களை களமிறக்கியிருந்தது. அம்பாறை மாவட்டத்திலுள்ள தங்களது முழு வாக்குகளையும் இம் மூவருக்கும் வழங்குமாறு கட்டளையிட்டுமிருந்தது. இத் தேர்தலில் ஐ.தே.கவில் நான்கு சிங்கள வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர். தேர்தல் முடிவில் தயா கமகே 70 201 விருப்பு வாக்கை பெற்றிருந்தார். இதுவே ஐ.தே.கவில் போட்டியிட்டவர்கள் பெற்றதில் அதி கூடிய விருப்பு வாக்கு. இரண்டாவது இடத்தையே மு.காவைச் சேர்ந்த ஒருவரால் பெற முடிந்தது.
இத் தேர்தலில் இரண்டாவது விருப்பு வாக்கை பெற்றிருந்த பைஸால் காசிம் 61 401 வாக்கை பெற்றிருந்தார். இவர்கள் இருவருக்குமிடையிலான வாக்கு வேறுபாடு 8800 ஆகும். இது சாதாரண எண்ணிக்கையான வாக்கு வேறுபாடல்ல. இந்த வாக்கு எண்ணிக்கையை நெருங்குவதே கடினம் என்பதை அனைவரும் ஏற்க முடியும். மு.கா மூவரை களமிறக்கி, தனது வாக்கை ஒரு புள்ளியில் குவித்த போதே, வாக்கெண்ணிக்கையில் அம்பாறை சிங்கள வேட்பாளரை முந்த முடியவில்லை என்பது கடந்த கால வரலாறு. இன்னும் சொல்லப் போனால், முன்னிலையிலிருந்த சிங்கள வேட்பாளரின் விருப்பு வாக்கை நெருங்க கூட இயலாத நிலையில் மு.கா இருந்தது. இப்போது முடியுமா..? சிந்திப்போம்..
அத் தேர்தலில் ஐ.தே.கவில் நால்வர் பா.உறுப்பினராக தெரிவாகியிருந்ததால், மு.காவை சேர்ந்த மூவர் தெரிவாகியிருந்தனர். அன்று ஒருவர் மாத்திரம் ஐ.தே.கவில் தெரிவாகியிருந்தால், அது தயா கமகேயாகவே இருந்திருப்பார். இருவர் தெரிவாகியிருந்தால், அதில் ஒருவரே மு.காவை சேர்ந்தவராக இருந்திருப்பார். அத் தேர்தலில் சிங்களவர்கள் நால்வர் ( நால்வர் களமிறக்கினால் விருப்பு வாக்கு சிதறும் ) களமிறங்கியிருந்த போதும், மூவரை ( மூவரை களமிறக்கும் போது அனைத்து வாக்குகளையும் ஓரிடத்தில் குவிக்க முடியும். ) களமிறக்கியிருந்த மு.காவினரை விட கூடுதலான விருப்புவாக்கை அன்றே சிங்கள வேட்பாளர் ஒருவரால் பெற முடிந்திருந்தது.
அத் தேர்தலில் ஐ.தே.கவில் நால்வர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்ததால் எந்த பிரச்சினையுமில்லை. இம் முறை 1 அல்லது 2 ஆசனங்களே டெலிபோன் சின்னத்துக்கு கிடைக்கக் கூடிய சாத்தியமுள்ளது. மு.கா சார்பாக அறுவர் டெலிபோன் சின்னத்தில் களமிறங்கியுள்ளனர். என்ன நடக்கும்...? சிந்திப்போம்...
இம் முறை மூன்று சிங்களவர்களே டெலிபோன் சின்னத்தில் களமிறங்கியுள்ளனர். கடந்த காலத்தில் மு.கா பயன்படுத்திய அதே வியூகத்தை இம் முறை சிங்களவர்கள் கையில் எடுத்துள்ளனர். இதன் காரணமாக சிங்களவர்களிடம் மிகக் குறைந்தளவு விருப்புவாக்கு சிதறல் இருக்கும். அவர்களது முழு வாக்குகளும் மூவருக்குமே செல்லும். இம் முறை மு.காவில் ஆறு பேர் களமிறங்கியுள்ளனர். விருப்புவாக்கு சிதறல் மிக அதிகமாக இருக்கும் என்பதோடு விருப்புவாக்குகள் அறுவருக்குள் பிரியும். இது மிக சிக்கலான சூத்திரம் என்பது, மேலுள்ளவற்றை வைத்து சிந்திக்கும் ஒருவரால் புரிந்துகொள்ள முடியும் என நினைக்கின்றேன்.
மு.கா சார்பாக மூவர் களமிறங்கியிருந்த 2015ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலேயே மு.காவை சிங்கள வேட்பாளர் ஒருவரால் முந்த முடியுமாக இருந்தால், தற்போது மு.கா சார்பாக அறுவர் களமிறங்கியுள்ள நிலையில், அவர்களால் முந்த முடியாதா? கடந்த முறை வெற்றிபெற்ற தயா இம் முறை யானையுடன் உள்ளார் என கூற வரலாம். இது தயா எடுத்தார் எனும் கோணத்தில் நோக்கும் பதிவல்ல. அன்றே சிங்கள வேட்பாளரால் முடிந்துள்ளது என்பதை விளக்கும் பதிவேயாகும். இம் முறை சிங்கள வேட்பாளர்கள் தெரிவாவதற்கான வாய்ப்பு மிக ஆதிகம்.
ஏன் இம் முறை இந்த சிக்கலான வியூகத்தை ஹக்கீம் வகுத்துள்ளார் என தெரியவில்லை. இம் முறை முஸ்லிம்கள் டெலிபோனுக்கு வாக்களித்தாலும், அதில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் தெரிவாகுவாரா என்பதை உறுதி செய்ய முடியாது.
எமது வாக்கால் நாமே எமது கண்களை குத்துவதா..? சிந்திப்போம்.. செயற்படுவோம்.. முஸ்லிம் உறுப்பினர்களை பெறச் சாத்தியமான கட்சிக்கு வாக்களிப்போம்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,

சம்மாந்துறை.
திகாமடுல்ல : மு.காவில் மூவர் களமிறங்கிய போது முடியாதது, அறுவர் இறங்கியுள்ள போது முடியுமா..? திகாமடுல்ல : மு.காவில் மூவர் களமிறங்கிய போது முடியாதது, அறுவர் இறங்கியுள்ள போது முடியுமா..? Reviewed by ADMIN on July 08, 2020 Rating: 5