அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் எனது மகிழ்ச்சி நிறைந்த ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் - பிரதமர்

தியாகம் மற்றும் ஒற்றுமைக்கு முன்னுரிமை அளித்து இன்றைய தினம் கொண்டாடப்படும் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளை கொண்டாடும் உலக வாழ் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.முஸ்லிம்களின் வாழ்வை நிர்மாணிக்கும் இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்று ஹஜ் கடமையாகும்.

பொருளாதார வசதியும் உடல் ஆரோக்கியமும் கொண்ட இஸ்லாமியர்கள் தமது வாழ்நாளில் ஒரு முறையேனும் 'ஹஜ்' என்னும் புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது அவர்களது நம்பிக்கையாகும்.

'ஹஜ்'புனிதப் பயணத்தின் ஊடாக உலகம் முழுவதும் பரந்து வாழும் இலட்சக் கணக்கான இஸ்லாமியர்கள் ஒரே குறிக்கோளுடன் மனிதர்களுக்கிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் அனைத்தையும் களைந்து இறைவனின் முன்னிலையில் அனைவரும் சமமாக ஒற்றுமையாக பிரார்த்திக்கின்றனர்.

அந்தவகையில் சமூக சகவாழ்வின் மகிமையை உலக சமூகத்திற்கு எடுத்துரைக்கும் ஒரு முக்கிய சமய விழாவாக ஹஜ் பெருநாள் அமைகின்றது.

கொவிட்- 19 நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு போன்றே இம்முறையும் வழமை போன்று மக்காவுக்கான யாத்திரை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், சமாதானம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை மதிக்கும் ஹஜ் பிரார்த்தனைகளுக்கு எவ்வித தடையும் ஏற்படாது என்பது எனது நம்பிக்கையாகும்.

பள்ளிவாசல்களில் ஒன்றுகூடி மத வழிபாடுகளில் ஈடுபட வேண்டாம் என்ற சுகாதார துறையினரின் ஆலோசனைகளுக்கு ஏற்ப கொவிட்-19 தொற்றுநோயை முற்றாக ஒழித்திட நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இஸ்லாமிய வழிகாட்டுதல்களை சரியாகப் பின்பற்றி உலக மக்கள் அனைவரும் கொவிட் தொற்றிலிருந்து குறுகிய காலத்திற்குள் விடுப்பட வேண்டும் என இன்றைய இந்த மகத்தான நாளில் நாங்கள் அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.

உங்களது அனைத்து நற்செயல்களையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வாராக.

அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் எனது மகிழ்ச்சி நிறைந்த ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மஹிந்த ராஜபக்ஷ

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின்

பிரதமர்


அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் எனது மகிழ்ச்சி நிறைந்த ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் - பிரதமர் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் எனது மகிழ்ச்சி நிறைந்த ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள் - பிரதமர் Reviewed by ADMIN on July 21, 2021 Rating: 5