நாட்டில் பலவீனமான அரசாங்கம் இருப்பதை போன்று பலவீனமான எதிர்க்கட்சியும் உள்ளது - எல்லே குணவங்ச தேரர்

 

(இராஜதுரை ஹஷான்)


நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினை குறித்து எதிர்க்கட்சியினர் குரல் கொடுப்பதில்லை. தேவையற்ற விடயங்களை குறிப்பிட்டுக் கொண்டு மக்கள் மத்தியில் அரசியல் இலாபம் தேடிக்கொள்கிறார்கள். நாட்டில் பலவீனமான அரசாங்கம் இருப்பதை போன்று பலவீனமாக எதிர்கட்சியும் உள்ளது. எதிர்க்கட்சியினர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.


சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், அரசாங்கம் கொவிட் தாக்கத்திற்கு மத்தியில் தேசிய வளங்களை அந்நிய நாட்டவர்களுக்கு தாரைவார்க்க முயற்சிக்கிறது. இதற்கெதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.


அரசாங்கம் தவறை திருத்திக் கொண்டு சிறந்த முறையில் செயற்படும் என கருதி தொடர்ந்து ஆலோசனை வழங்கினோம். அரசாங்கத்தை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. மக்கள் மன்றத்தில் சரியான தீர்வு கிடைக்கப் பெறும் என்ற காரணத்தினால் அரசாங்கத்தை அதன் போக்கில் விட்டுவிட்டோம். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய மக்கள் தகுந்த பாடம் புகட்ட காத்திருக்கிறார்கள்.


மக்களின் அடிப்படை பிரச்சினை குறித்து எதிர்க்கட்சியினரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.தேவையற்ற விடயங்களை குறிப்பிட்டுக் கொண்டு மக்களின் பிரச்சினைகளை தங்களின் அரசியல் பிரசாரத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.


நாட்டில் பலவீனமான அரசாங்கம் இருப்பதை போன்று பலவீனமான எதிர்க்கட்சியும் உள்ளது. எதிர்க்கட்சியினர் எதிர்வரும் காலங்களில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் நோக்கத்தை விடுத்து மக்கள் மத்தியில் உண்மைத் தன்மையுடனும், பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.


கொவிட்-19 தாக்கத்தினால் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவேளை அரசாங்க தரப்பினர் குறிப்பிடும் கருத்துக்கள் வெறுக்கத்தக்கதாக உள்ளது. நாட்டு மக்கள் இருவேளை உணவை மாத்திரம் உண்ண வேண்டும் என்று குறிப்பிடும் உரிமை எவருக்கும் கிடையாது.


இனி வரும் காலங்களில் நாட்டு மக்கள் அரசியலில் சிறந்த தீர்மானத்தை நன்கு சிந்தித்து எடுக்க வேண்டும் என்றார்.


நாட்டில் பலவீனமான அரசாங்கம் இருப்பதை போன்று பலவீனமான எதிர்க்கட்சியும் உள்ளது - எல்லே குணவங்ச தேரர் நாட்டில் பலவீனமான அரசாங்கம் இருப்பதை போன்று பலவீனமான எதிர்க்கட்சியும் உள்ளது - எல்லே குணவங்ச தேரர் Reviewed by ADMIN on September 14, 2021 Rating: 5