இறக்காமம், மாயக்கல்லி சிலை வைப்பு விவகாரம் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் காரணம் தீகவாபி பற்றிய அச்சுறுத்தலாகும்.
பேரினவாதம் இலங்கை முழுவதையும் சிங்கள மயமாக்குவதில் எவ்வளவு தூரத்திற்கு சிந்திக்கிறது என்பதற்கு, 2014 ஒக்டோபர் 10 ஆம் திகதி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தில் அறிவிப்புச் செய்துள்ள வர்த்தமானி அறிவித்தல் தகுந்த சான்று.
2014 ஒக்டோபர் 10 வர்த்தமானி அறிவித்தல்
குறித்த வர்த்தமானி, கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமான 246 இடங்கள் பற்றி அறிவிக்கிறது. தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பாலசூரிய கையொப்பமிட்டு, மஹிந்த அரசாங்கம் அறிவிப்புச் செய்துள்ள இந்த வர்த்தமானியில், திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் 36 இடங்களும், இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் 13 இடங்களும், ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் 9 இடங்களும், பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் 5 இடங்களும், அக்கரைப்பற்று பிரதேசத்தில் 6 இடங்களும், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 11 இடங்களும், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 4 இடங்களும், கல்முனை பிரதேசத்தில் 2 இடங்களுமாக முஸ்லிம், தமிழர்களுக்குரிய 86 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள் ளன.
குறித்த வர்த்தமானியில் சிங்களப் பிரதேசங்களான பதியத்தலாவை, லகுகல, தமண, அம்பாறை, உகன, மகாஓயா, தெஹியத்த கண்டி முதலான இடங்களும் உள்வாங்கப்பட்டிருந்தாலு ம் இப்பிரதேசங்களுக்கு குறிப்பிடும்படியான எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. பிரச்சினைக்குரிய இடங்களாக குறிவைக்கப்படுவது முஸ்லிம், தமிழர்களுக்குரிய பூர்வீக நிலங்கள்தான் என்பதை இன்று வடகிழக்கில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெறும் சம்பவங்களைக் கொண்டு உறுதியாகக் கூற முடியும்.
இறக்காமம் சிலைப் பதிப்புக்கு சூத்திரதாரியாக செயற்பட்டதாகக் கூறப்படும் அமைச்சர் தயாகமகே விடுத்துள்ள அறிக்கையொன்றில், கல்முனை தொடக்கம் பொத்துவில் வரைக்கும் தீகவாபிக்கு சொந்தமாக 12,000 ஏக்கர் காணிகள் உள்ளன என்று குறிப்பிட்டிருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
