ஆகஸ்ட் 03 ஆம் திகதி இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மறக்க முடியாத கரி நாளாகும்.
பயங்கரவாதத்தின் கோரத்தாண்டவம் காத்தான்குடிப் பள்ளிவாசல்களுக்குள் தொழுது கொண்டிருந்த அப்பாவிகள் 103 பேரைப் பதம் பார்த்த நாளே இது. இந்தக் கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் சரியாக 28 வருடங்களாகின்றன.
இலங்கையில் இனப் பிரச்சினை தோற்றம் பெற்றதன் விளைவாக மூன்று தசாப்த கால போர் நீடித்தது. இதன் பக்க விளைவுகளாக முஸ்லிம்களுக்கு எதிரான கொடூரங்கள் அரங்கேற்றப்பட்டன. இதனால் சுமார் 7000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்பட்டன. இவற்றில் விடுதலைப் புலிகளினாலேயே ஏராளமான முஸ்லிம்கள் வடக்கு கிழக்கு பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டார்கள். அதேபோன்று ஆயிரக் கணக்கானோர் காயங்களுக்குள்ளானார்கள்.அவர்கள் இன்றும் பயங்கரவாதம் விட்டுச் சென்ற ஆறாத வடுக்களின் நடமாடும் சாட்சிகளாகவே நம் கண் முன் நடமாடித் திரிகிறார்கள்.
அதேபோன்றுதான் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் புலிகளால் அபகரிக்கப்பட்டன. இவற்றில் ஏராளமானவை போர் முடிந்து 7 வருடங்களாகின்ற போதிலும் உரிய மக்களிடம் மீள ஒப்படைக்கப்படவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக 1990 ஒக்டோபரில் வடக்கின் 5 மாவட்டங்களிலிருந்து முஸ்லிம்கள் இரவோடிரவாக துரத்தியடிக்கப்பட்டார்கள். இன்றும் அவ்வாறு விரட்டப்பட்ட மக்களில் 10 வீதமானோர் கூட தமது பூர்வீக இடங்களில் மீளக்குடியேற முடியாத நிலையே நீடிக்கிறது.
மேற்படி இழப்புகள் அனைத்தும் நடந்து முடிந்த நிதர்சனங்கள் என்கின்ற போதிலும் இன்னமும் இனப்பிரச்சினையினால் முஸ்லிம்கள் எதுவித இழப்புகளையும் சந்திக்கவில்லை என்பது போன்ற மாயையே வெளியில் காட்டப்படுவது கவலைக்குரியதாகும்.
குறிப்பாக இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் புலிகளுக்கு எதிராக பேசுகின்ற போது மாத்திரம் 'பள்ளிவாசல்களில் படுகொலை செய்தார்கள்' என்று தமது தேவைக்காகவும் முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதற்காகவும் உதட்டளவில் பேசிவிட்டுச் செல்கிறார்களே தவிர இந்த இழப்புகளுக்காக முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய பரிகாரம் பற்றிச் சிந்திப்பதாகவோ செயற்படுவதாகவோ தெரியவில்லை.
பிற இன அரசியல்வாதிகள்தான் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் எனில், முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் கூட இவை பற்றி உரிய இடங்களில் பேசுவதாகத் தெரியவில்லை. முஸ்லிம் சமூகத்தின் கடந்த கால இழப்புகளை ஆவணப்படுத்தவோ இனப் பிரச்சினைக்கான தீர்வு மேசைகளில் இவற்றை சமர்ப்பித்து முஸ்லிம்கள் தரப்பில் நியாயம் கேட்கவோ முஸ்லிம் தலைமைகள் தயாரில்லை.
எனவேதான் வெறுமனே இனப் பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களுக்கும் பங்கு வேண்டும் என வாய்கிழிய பேசுவதை விடுத்து 1980 களின் பின்னர் முஸ்லிம் சமூகம் இழந்தவைகள் தொடர்பான முறையான ஆவணப்படுத்தல்கள் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் உடனடியாகத் தொடங்கப்படல் வேண்டும். அவ்வாறான முயற்சிகளில் ஏலவே சுயாதீனமாக ஈடுபட்டுள்ளவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட வேண்டும். அவை உரிய இடங்களில் தக்க தருணங்களில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அதைவிடுத்து தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்ற சமயங்களில் மாத்திரம் 'முஸ்லிம்களும் இழந்திருக்கிறார்கள்' என வாயளவில் பேசுவதால் எந்தவித பலனும் ஏற்படப் போவதில்லை.
இலங்கை முஸ்லிம்களுக்கு பயங்கராவதிகளால் இழைக்கப்பட்ட அநியாயங்களின் உச்சபட்சமாக கருதப்படும் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையின் 28 ஆவது வருட நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகின்ற இன்றை தருணத்தில் நாம் முன்வைக்க விரும்பும் செய்தி இதுவேயாகும்.
