(இராஜதுரை ஹஷான்)
காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானிற்கு
பதிலாக பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஜீவன் தொண்டமான் போட்டியிடுவதற்கு வேட்பு மனு வழங்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவர் செந்தில் தொண்டமான் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்ட பிரதமர் வேட்பு மனு வழங்குவது தொடர்பான நடவடிக்கையினை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கும், பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் இணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிட தீர்மானித்தது
இதற்கமைய மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இவரது மறைவினை தொடர்ந்து அவரது மகன் ஜீவன் தொண்டமானை நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட செய்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.
ஆகவே ஜீவன் தொண்டமான் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கை தொடர்பில் ஆய்வதாக பிரதமர் இதன் போது தெரிவித்தார்.
இச்சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் குழுவினர் உட்பட பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர், தவிசாளர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
