தனது குழந்தையை தன்னிடம் இருந்து பிரிக்க வேண்டாம் என 14 வயதான இளம் தாய் கம்பஹா மேலதிக
நீதவான் ஆர்.எஸ்.எம். மகேந்திரராஜாவிடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தாயின் சட்டவிரோத கணவனால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட இளம் தாய் மற்றும் அவர் பெற்றெடுத்த குழந்தையை பொருத்தமான பாதுகாவலர்களிடம் ஒப்படைக்குமாறு கோரி, வெலிவேரிய பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் அதிகாரிகள் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே அந்த இளந்தாய் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இரண்டு பேரையும் நல்ல இடத்தில் தங்க வைக்கும் வரை கம்பஹா வைத்தியசாலையில் அவர்களை அனுமதிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதவான், இருவரையும் வைத்தியசாலையில் தங்க வைக்குமாறு வைத்தியசாலை பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
14 வயதான தாயையும் அவரது 12 மாதமான குழந்தையையும் தங்க வைக்கக் கூடிய இடத்தை கண்டறியுமாறு கம்பஹா சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதவான், இது சம்பந்தமாக நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யுமாறும் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்
