சித்திரையில் சரித்திரத்தை மாற்றி எழுதுவோம்

 





இலங்கையின் வரலாற்றில் மிக அரிதான முறையில் இந்நாட்டில் வாழும் நான்கு மதங்களையும் சேர்ந்தவர்களின் கொண்டாட்டங்கள் ஒரே மாத காலத்தினுள் அமைந்துள்ளமையானது ஒரு வகையில் அரியதொரு வாய்ப்பாகவும் மறுபக்கத்தில் உணர்ச்சிகரமான சம்பவங்களை தூண்டி விடக் கூடியதாக அமையலாம் என்ற அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.


இலங்கையின் ஆட்சி மாற்றத்தின் அடிநாதமாக இருந்த இனவாத அலையின் பரம்பல் தற்போதைய நிலையில் நீருக்குள் அமிழ்த்தப்பட்ட பந்தாக வெளித் தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் முற்றாக மழுங்கடிக்கப்படவோ அழித்தொழிக்கப்படவோ இல்லை. தற்காலிக இடைவேளை மட்டுமே தற்போது நிலவுகின்றது. 


கடந்த 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் வரை இலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டில் தனிநாடு உருவாக்கும் நோக்குடன் பெரும்பான்மை இனத்தவரை கருத்தடை மற்றும் மகப்பேற்றைக் கட்டுப்படுத்தும் வகையிலான மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் உள்ளாடைகள், கொத்து ரொட்டி என்பவற்றை விநியோகித்துக் கொண்டிருப்பதாக உண்மைக்குப் புறம்பான வதந்திகள் மூலம் இலங்கை முஸ்லிம்களும் அவர்களின் வாழ்விடங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களும் இலக்கு வைக்கப்பட்டு தாக்குதல்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டிருந்தனர்.

 

ஆயினும் இந்திய உளவுத்துறையின் பலியாடு இஸ்ரேலிய உளவுத்துறையின் முகவர் என இஸ்லாத்துக்கு எதிரான சக்திகளுக்கு தெரிந்தோ தெரியாமலோ துணைபோன சஹ்ரான் மற்றும் சகாக்களைக் கொண்டு இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நேரடி மேற்பார்வையில் இந்தியாவின் உளவுத்துறைக்கு பொறுப்பான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் திரைக்கதை மற்றும் தயாரிப்பில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கொடூரத்தின் பின்னர் நாங்கள் இன்று பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு விட்டோம்.


உண்மையில் எங்கள் சமூகத்தின் உணர்ச்சிபூர்வமான முட்டாள்தனங்களே இன்று நாம் எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும் எதிர்கால இருப்பு என்பன தொடர்பான அச்சுறுத்தல்களின் அடிநாதமாக இருப்பதை இனியேனும் நாம் தெளிவான முறையில் விளங்கி அதனை நிவர்த்தி செய்து பாதுகாப்பான வாழ்வியல் சூழல் ஒன்றை கட்டியெழுப்ப நமது சமூகம் முன்வர வேண்டும்.


இலங்கையின் அரசியலில் முதன்முதலாக மத அடையாள அரசியலை அறிமுகப்படுத்தியவர்கள் நாங்கள்தான் என்ற கசப்பான உண்மையின் புள்ளியிலிருந்தே நாம் நம் தவறுகளை நிவர்த்தி செய்வதற்கான எதிர்கால திட்டங்களுக்கான உத்திகளை வகுக்க வேண்டியிருக்கின்றது. 


தனிநாட்டுக் கோரிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழரசுக் கட்சி என்பன தமிழ் பேசும் மக்களின் கட்சிகளாக அடையாளப்படுத்தப்பட்டதன் காரணமாக அவற்றுக்கு எதிரான இனவாத எதிர்ப்புகள் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான வெறுப்பாக மாற்றமடையவில்லை. அதன் காரணமாகவே ஸ்ரீமாவோவின் அரசாங்கத்தில் திருச்செல்வம் போன்றோரும், ஜே.ஆர். மற்றும் பிரேமதாசவின் அரசாங்கங்களில் ராஜமனோகரி புலேந்திரன், தேவராஜ், செல்லையா ராஜரத்தினம் போன்றோரும் முக்கிய அமைச்சுப்பதவிகளால் அலங்கரிக்கப்பட்ட போதும் இனவாத ரீதியில் அவர்கள் எதிர்க்கப்படவில்லை. ஆனால் முஸ்லிம் மக்களை தனித்துவ இனமாக காட்டிக் கொள்ளும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் (ஆரம்ப காலம் தொட்டு நானும் அதன் அபிமானியாகவும் ஆதரவாளனாகவும் இருந்துள்ளேன்.) ஆரம்பம் தொட்டு மத அரசியலை அறிமுகப்படுத்திய தூரதிருஷ்டியற்ற சமூகமாக நாம் மாறிப்போயிருந்தோம். கட்சி அரசியலுக்காக குர்ஆன் ஹதீஸ்களை முன்வைத்துக் கொண்டு அதற்கு முற்றிலும் மாறுபட்டதாக ஹாபிஸ்கள், கல்வித் தந்தைகள் போன்ற ஊழல் பெருச்சாளிகளை உள்வாங்கிக் கொண்டே கட்சி விடயங்களில் மார்க்க சாயம் பூசிக் கொண்டும் நாரே தக்பீர் முழங்கிக் கொண்டும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஒரு அச்ச நிலையை நம்மையறியாமலேயே நாம் தோற்றுவித்தோம். 


மறுபுறத்தில் விடுதலைப் புலிகளின் அராஜகங்களில் இருந்து முஸ்லிம் கிராமங்களை பாதுகாக்க அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஆயுதங்களை ராணுவத்தினரின் நேரடிக் கண்காணிப்பில் கையில் வைத்துக் கொண்டு வெறும் ஜம்பத்துக்காக தங்களுக்குத் தாங்களே ஜிகாத் என்று பெயர் சூட்டிக் கொண்ட மடையர்கள் காரணமாக சகோதர தமிழ் இனத்தின் மத்தியிலும் எங்களைப் பற்றிய சந்தேகப் பார்வைகளை உருவாக்கிக் கொண்டோம். பிட்டும் தேங்காய்ப் பூவும் போன்ற அந்நியோன்ய உறவில் விரிசல் ஏற்பட புலிகள் உள்ளிட்ட தமிழ் ஆயுதக் குழுக்களின் அட்டகாசம் 80 வீதமாக இருந்தால் நம் சமூகத்தின் பங்களிப்பு 20 வீதம் அளவிலாவது இருந்தது. அந்த முட்டாள் தனம் அன்று மேற்கொள்ளப்பட்டிருக்காது போனால் ராஜன் ஹுல்கள், ஜெயபாலன்கள் மட்டுமன்றி இன்றும் பல்லாயிரம் தமிழ் உறவுகள் இன்றைய சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்று... எங்களுக்காக அன்றே குரல் கொடுக்கத் தலைப்பட்டிருப்பார்கள்.. 


இவ்வாறான நிலையில் எங்களுக்குள் பயங்கரவாதிகளும் இருப்பதாக வெறும் வாயை மென்று கொண்டிருந்த பேரினவாதிகளுக்கு கிடைத்த அவலாக சஹ்ரான் குழுவின் தாக்குதல் அமைந்துவிட வரலாற்றின் முதல் தடவையாக பெரும்பான்மை சமூகத்தின் அகோர எழுச்சியுடன் இந்நாட்டின் அரசியல் களத்தில் இருந்து முஸ்லிம்கள் ஒதுக்கி வைக்கப்படும், இந்நாட்டின் முக்கிய விடயங்களில் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படும் சூழல் தலையெடுத்துள்ளது. 


அதனை மாற்றுவதற்கான முயற்சிகள் இதுவரை நம்தரப்பில் இருந்து மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயம் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். அரசியல்வாதிகளையும் ஆலிம்களையும் மட்டும் நம்பிக் கொண்டிருந்தால் இந்த நிலையில் ஒரு போதும் மாற்றங்களை உருவாக்கவோ, நம் எதிர்கால இருப்புக்கான அச்சுறுத்தல்களை தணிக்கவோ ஒருபோதும் முடியாது என்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.


அவ்வாறான தருணத்தில் தான் நமக்கு இந்த ஆண்டு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. 


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலமாக எந்த ஏப்ரல் மாதத்தில் கிறித்த மக்களுக்கு நம் சமூகத்தின் பெயர் தாங்கிகள் சிலர கொடூரம் இழைத்தார்களோ, அவர்களின் உயிர்த்த ஞாயிறு கொண்டாட்ட மாதத்தில் நம் ரமழான் நோன்பும் வந்துள்ளது.  எனவே கிறித்தவ உறவுகள் வாழும் முஸ்லிம் பிரதேசங்களில் வாழும் நம் சமூகத்தினர் நோன்பு திறப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து அதில் கிறித்தவ உறவுகளுக்கும் அழைப்பு விடுத்து அவர்களின் மனக்காயங்களை ஆற்ற முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். 


சஹ்ரானின் தம்பி றில்வான் உள்ளிட்டவர்கள் சாய்ந்தமருதில் மறைந்திருந்த போது அதனைக் காட்டிக்கொடுத்ததும் முஸ்லிம்களே என்பதுடன் அவர்களை முற்றுகையிட்டு முறியடிப்பதற்கான ராணுவ நடவடிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னுதாரண முஸ்லிம் ராணுவ வீரன் லெப்டிணண்ட் கேணல் அனஸ் தாவூத் தின் பங்களிப்பையும் கிறித்தவ மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.. நாடளாவிய சஹ்ரான் கும்பலை ஊர் ஊராக காட்டிக் கொடுத்ததும் அந்தந்த ஊர் முஸ்லிம்கள் தான் என்பதையும் அவர்களின் ஆழ்மனங்களில் பதிய வையுங்கள்.


ரமழான் என்பது சதகாவின் மாதம். சதகா என்பது எந்த மதத்தைச் சேர்ந்தவருக்கும் வழங்கப்படக் கூடியதே. அந்த வகையில் உங்கள் சதகா மூலம் அந்தந்தப் பகுதியில் வாழும் கிறித்தவ ஏழைக் குடும்பங்களுக்கும் உங்கள் உதவிக் கரங்களை நீட்டுங்கள்..சிறு துளி பெரு வெள்ளமாவதைப் போன்று அடித்தட்டு கிறித்த உறவுகளுடன் நேசப் பாலமொன்றை நாம் கட்டியெழுப்பிக் கொண்டால் பணத்துக்காகவும் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை காரணம் காட்டி நம் சமூகத்தை குற்றம் சுமத்திக் கொண்டிருக்கும் ஆயர்களின் வாய்கள் அடைக்கப்படும். அல்லது அதற்கான அழுத்தங்கள் அந்த சமூகத்தின் மத்தியில் இருந்தே உருவாகும்.


மறுபுறத்தில் தமிழ்-சிங்கள மக்கள் தங்கள் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மேற்கொண்டுள்ளார்கள். அவர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது, தேவையான உதவிகளை செய்து கொடுப்பது, புத்தாண்டு நல்லிணக்க விஜயமாக அவர்களின் வீடுகள் மற்றும் மகாசங்கத்தினரின் வாசஸ்தலங்களுக்குச் சென்று அவர்களைச் சந்திப்பது போன்ற நிகழ்வுகளின் மூலமாக சிங்கள மக்கள் உடனாக உறவுப் பாலம் ஒன்றுக்கு அடிக்கல் நடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். அவ்வாறான முயற்சிகள் மூலமாக தமிழ் உறவுகளுடனும் மீண்டும் ஒரு உள்ளார்ந்த நேச உறவொன்றை கட்டியெழுப்ப முயற்சிக்கலாம். 


ஆனால் அதற்குப் பதிலாக நமது செயற்பாடுகள் ஏனைய சமூகத்தினர் மத்தியில் இருந்து நம்மை நாமே கண்மூடித்தனமாக தனிமைப்படுத்திக் கொள்ளும் வகையில் அமைந்திருப்பதையே இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் காணக்கிடைக்கின்றது. 


இனவாத நிகழ்ச்சி நிரல் காரணமாக கடந்த காலங்களில் ஒருசில பெரும்பான்மை உறவுகள் நம்மவரின் வர்த்தக நிலையங்களை புறக்கணித்தார்கள். ஆனால் இம்முறை அப்படி நடக்கவில்லை. அதனை வரவேற்பதை விட்டு...அவ்வாறான சூழல் தொடர்வதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொள்வதை விட்டு...நோலிமிட் போகின்றவர்களுக்கு இந்தத் தடவை கூழ் முட்டை அடிக்கவில்லையா? பெஷன் பக்கில் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் உள்ளாடைகள் இப்போது இல்லையா என்று அவர்களை கிண்டல் செய்யும் அறிவுஜீவிகள் அண்மைக்காலமாக சமூக வலைத்தள வீரர்களாக உருவெடுத்திருக்கின்றார்கள். அவ்வாறான முட்டாள்தன அணுகுமுறைகள் எங்களுடன் நேசக் கரம் நீட்ட நினைக்கும் நடுநிலை சார் பெரும்பான்மை மக்களைக் கூட நம்மை விட்டும் அந்நியமாக்கி விடும்.


அதற்குப் பதிலாக புத்தாண்டின் பின்னர் எங்காவது சிங்களக் கிராமம் ஒன்றில் ஏதேனும் அபிவிருத்தி விடயம் ஒன்றை முஸ்லிம் வர்த்தகர்கள் பலர் இணைந்து மேற்கொள்ளலாம். புத்தாண்டு வர்த்தகத்தில் வந்த லாபத்தில் உங்களுக்கு எங்கள் கைமாறு என்று அவர்களுக்குச் சொல்லிப் பாருங்கள்.. நேசம் பொங்க நம்மை அரவணைக்க அவர்கள் காத்திருக்கின்றார்கள். 


பள்ளிகளில் மட்டுமன்றி வீடுகளில் நோன்புக் கஞ்சி தயாரிப்பவர்களும் நம் அயலில் வாழும் மாற்று மத உறவுகளுக்கும் அதில் ஒரு பங்கை வழங்க மறவாதீர்கள். ஈச்சம்பழத்தையும் சிற்றுண்டிகளையும் கூட முடிந்த மட்டிலும் பகிர்ந்துண்ணப் பழகுங்கள்..


அதே போன்று அரசியலுக்காக இனவாத நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படும் இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் பேசும் மக்கள் நாங்கள் அனைவரும் ஓரணி நின்று அதனை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. அதற்காக நாரே தக்பீர்களை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு தமிழ் சமூகத்துடன் பரஸ்பர புரிந்துணர்வு கலந்துரையாடல்கள் மற்றும் உறவுப்பாலங்களை உருவாக்குங்கள். நமக்கிடையிலான முன்னைய நல்லுறவை மீளத் துளிர்விடச் செய்யுங்கள்.  அடுத்தவரின் துன்பத்தையும் துயரையும் துடைத்து ஏழைகளின் பட்டினியை உணரச் செய்யும் மாதமாக மட்டும் ரமழானை வரையறை செய்து விடாதீர்கள்.  ஆதமுடைய மக்கள் அனைவரும் இன, மத பேதங்களுக்கு அப்பால் ஒரே குடும்பம் என்ற இஸ்லாத்தின் உயரிய தத்துவம் ரமழான் நோன்பு விதிக்கப்பட்டுள்ளதன் பின்னால் மறைந்திருப்பதை செயற்பாட்டு ரீதியாக மெய்ப்பித்துக் காட்டுங்கள்.


அதே போன்று நோன்பு காலங்களில் எமது நடவடிக்கைகள் ஏனைய மக்களுக்கு இடைஞ்சலாக, தொந்தரவாக அமையாத வகையில் மேற்கொள்ளப்படுவது மிக முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள்.


மறுபுறத்தில் ரமழான் மாத இரவு வழிபாடுகள் மற்றும் நோன்பு திறக்கும் நிகழ்வு, கஞ்சி விநியோகம் போன்ற விடயங்கள் தொடர்பில் சுகாதாரத்துறை வழிகாட்டல்கள் சிலவற்றை விடுத்துள்ளது. அவற்றை முறையாக பேணி நடந்து இந்நாட்டின் சட்டதிட்டங்களை ஏற்று நடப்பதில் நமக்குள்ள கடப்பாட்டை உணர்ந்து கொள்வதுடன், அதனை மற்றையவர்களும் உணரும் வகையில் முன்மாதிரியாக நடந்து கொள்வதும் நம் முன் உள்ள மாபெரும் பொறுப்பாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


உங்கள் பிரார்த்தனைகளில் கொரோனா நோயாளிகளுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். அந்த நோயிலிருந்து நம்நாட்டவரை மட்டுமன்றி உலகளாவிய மக்கள் அனைவரும் பாதுகாக்க எல்லாம் வல்ல இறைவனிடம் மன்றாடுங்கள்..


நம் செயற்பாடுகள் ஊடாக சகோதரத்துவம், அன்பு, கருணை, சமூக நல்லிணக்கம் போன்ற இஸ்லாத்தின் உயரிய விழுமியங்களை நம்மத்தியிலும் உருவாக்கிக் கொள்வதுடன் அதனை ஏனைய மதங்களைச் சேர்ந்த நம் சகோதர உறவுகள் மத்தியிலும் பரப்புவதற்கான முன்னுதாரணமாக நாங்கள் ரமழான் கால பயிற்சிகளின் மூலம் எதிர்கால செயற்பாடுகளுக்கு எங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்