(கலாநிதி எம்.எம்.பாசில்)
முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் மிக முக்கிய மைக்கல்லாக அமையும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமானது 1996 மே 15இல் இலங்கையின் பத்தாவது பல்கலைக் கழகமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இலைமறைகாயாய் இருந்தவர்களுக்கு களம் அமைத்துக்கொடுத்த இப்பல்கலைக்கழகமானது தனது கல்விப் பயணத்தின் 25 ஆண்டுகால நிறைவின் பலனாக இன்று சனிக்கிழமை, 2021.05.15ஆம் திகதியன்று வெள்ளிவிழாக் காண்கின்றது. இக்கால் நூற்றாண்டுப் பூர்த்தி இப்பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகத் தலைவர் குறித்தும் அதன் குறிப்பிடத்தக்க தருணங்கள் குறித்தும் நினைவு கூர்வதற்கு பொருத்தமான சந்தர்ப்பமாக அமைகின்றது.
இதன்படி அஷ்ரஃபின் அரசியல் தலைமைத்துவத்துடன் 1995 ஒக்டோபர் 23இல் தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 33 இடம்பெயர்ந்த மாணவர்களுடன் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி கட்டடத்தில் தமது கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்த இக்கல்லூரி, கலை மற்றும் வர்த்தக முகாமைத்துவ பீடங்களை உள்ளடக்கியிருந்தது. பின்னர் தேசிய பல்கலைக்கழகமாகத் தரமுயர்த்தப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக அரசறிவியல் துறை பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் கடைமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
அட்டாளைச்சேனையில் இயங்கிவந்த இப்பல்கலைக்கழகமானது 1998இல் ஒலுவில் வளாகத்திற்கு இடமாற்றப்பட்டது. இதுவரை இப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர், பேராசிரியர் ஏ.ஜி. ஹ{ஸைன் இஸ்மாயில்;, கலாநிதி எஸ்.எம்.எம் இஸ்மாயில் மற்றும் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் ஆகியோர் உபவேந்தர்களாக கடமையாற்றியுள்ளனர்.
இலங்கையின் உயர்கல்வி வளர்ச்சியில் உன்னதமானதொரு இடத்தினைப் பெற்றிருக்கும் இப்பல்கலைக்கழகத்தில் கலை கலாசார பீடம், முகாமைத்துவ வர்த்தக பீடம், பிரயோக விஞ்ஞான பீடம், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடம், பொறியியல் பீடம் ஆகிய ஐந்து பீடங்கள் காணப்பட்ட நிலையில் அண்மையில் மற்றுமொரு பீடமும் தாபிக்கப்பட்டுள்ளது. அது கலாநிதிகள் பலரைக் உள்ளடக்கிய தொழில்நுட்பப் பீடமாகும். நாட்டின் அனைத்துப் பாகங்களில் இருந்து வருகைதரும் மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் தமது கல்வி நடவடிக்கையினைத் தொடர்ந்துவருவதுடன் அண்மைக்காலத்தில் சர்வதேச மாணவர்களும் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர். அதேவேளை பல்தன்மையினைப் பிரதிபலிக்கும் கல்விசார் ஊழியர் தொகுதி, நிர்வாக ஊழியர்கள், கல்விசாரா ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள் என இப்பல்கலைக்கழக சமூகம் விரிவாக்கம் பெற்றுள்ளது.
அஷ்ரஃபின் பல்கலைக்கழக உருவாக்கக் கனவு தனது சமூகத்தின் நலனுடன் பெருமளவு பின்னிப்பிணைந்திருந்த போதிலும் பல்கலைக்கழகமொன்றின் உருவாக்கம் இனத்துவ ரீதியிலானதாக இருந்து விடக்கூடாது என்பதில் அவர் மிகக் கவனமாகச் செயற்பட்டிருக்கின்றார். அதன் காரணமாகவே அஷ்ரஃப் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினை ஒரு தேசிய பல்கலைக்கழகமாக உருவாக்கினார். அவர் அரசியலில் உச்சத்தினை அடைந்திருந்த போது தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முஸ்லிம் மாணவர்களுடன் தமிழ் மாணவர்களையும் இணைத்து கல்வி நடவடிக்கையினை தொடர்ந்ததனையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். தற்சமயம் பெரும்பான்மையின சிங்கள மாணவர்களும் உள்ளீர்க்கப்பட்டுத் தேசிய பல்கலைக்கழகமொன்றின் அனைத்து குணாம்சங்களும் பொருந்தியதாக தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மாற்றமுற்றுள்ளது. அஷ்ரஃபின் கனவும் அதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
இப்பல்கலைக்கழகத்தில் மூவின மாணவர்களையும் உள்ளீர்ப்பதற்காக பொது மற்றும் விஷேட கற்கை நெறிகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கற்பிக்கப்படுகின்றன. தற்சமயம் 5561 உள்வாரி மாணவர்களையும் 12562 வெளிவாரி மாணவர்களையும் 211 விரிவுரையாளர்களையும் 427 போதனைசாரா உத்தியோகத்தர்களையும் 33 நிர்வாக உத்தியோகத்தர்களையும் கொண்டுள்ளது.
இன்று இருபத்து ஐந்து ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் இப்பல்கலைக்கழகமானது நவீன பல்கலைக்கழகத்திலுள்ள குணாம்சங்களைக் கொண்டுள்ளதுடன் வேகமாகவும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றது.
பல்கலைக்கழக நூலகத்தின் ஏற்பாட்டில் வெள்ளிவிழாக் கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செயபட்டிருந்தும், கோவிட் பரவல் சூழ்நிலை காரணமாக அவை பின்போடப் பட்டுளன என்பது குறிப்பிடதக்கதாகும்.
தொடரும்........

0 கருத்துகள்