
சீனாவில் டெல்டா வகை கொரோனாத் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
சீனாவின் வூஹான் நகரத்தில் முதன் முதலில் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டு, அது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனால் உலக நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்தாலும், தொற்று பாதிப்பை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதாக சீனா தெரிவித்தது.
இந்நிலையில் அந்நாட்டின் 18 மாகாணங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவது கண்டறியப்பட்டிருக்கிறது.
கடந்த 10 நாட்களில் பெய்ஜிங், ஜியாங்சு, சிச்சுவான் உள்ளிட்ட 27 நகரங்களை சேர்ந்த 355 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நடுத்தர மற்றும் அதிக ஆபத்து நிறைந்த பிராந்தியங்கள் 95 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் டெல்டா வகை தொற்றானது நான்ஜிங்கில் உள்ள லுகோவ் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களிடத்தில் முதலில் கண்டறியப்பட்டது.
அதன் பிறகு உள்ளூர் மக்களுக்கும், ஹூனான் மாகாணத்தில் உள்ள சுற்றுலா தலமான சாங்ஜியாஜி மற்றும் பிற மாகாணங்களுக்கும் பரவ தொடங்கியது. இதைத்தொடர்ந்து சாங்ஜியாஜி உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.
தலைநகர் பெய்ஜிங்கில் மூவருக்கு கடந்த ஞாயிறன்று டெல்டா வகை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனாத் தொற்று பாதிப்புள்ள பிராந்தியங்களிலிருந்து வாகனங்கள், விமானங்கள், ரயில்கள் பீஜிங்கிற்கு நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.