வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிக்க எண்ணியுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூக பிரச்சினைகளுக்கான தீர்வை அரசுக்கு கோரிக்கையாக முன்வையுங்கள் : தேசிய முஸ்லிம் கவுன்ஸில்

ADMIN
0


நூருல் ஹுதா உமர்


முஸ்லிங்களின் நீண்டநாள் பிரச்சினைகளை தீர்க்க பல வாய்ப்புக்கள் கிடைத்தும் அதனை கடந்த காலங்களில் பதவி வகித்த பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் தவறவிட்ட வரலாறுகள் ஏராளமாக உள்ளது. முஸ்லிம்களின் நீண்டநாள் பிரச்சினைகளை தீர்க்க அதே போன்ற ஒரு வாய்ப்பு இப்போது மீண்டும் முஸ்லிம் தலைமைகளுக்கு கிடைக்கப் பெற்றுள்ளது என தேசிய முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் எம்.ஐ.எம். வலீத் தெரிவித்துள்ளார்.


ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, 151 உறுப்பினர்களை ஆளும்தரப்பில் கொண்ட இந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டு எதிர்வரும் சில நாட்களின் பின்னர் இடம்பெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு அரசுக்கு சார்பாக ஆதரவளிக்க எண்ணியுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடு தழுவிய முஸ்லிம்களின் பிரச்சினையை ஆழமாக அரச தரப்பினருடன் பேசி இந்த வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமே தவிர வெறுமனே ஆதரவளித்து சமூகத்தை சங்கடப்படுத்த கூடாது.


மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்ட இந்த அரசாங்கம் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெற்றியடையும் வாய்ப்பே அதிகமாக உள்ளது. அதற்கு கிழக்கை சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக அறிகிறோம்.


எதிர்த்து வாக்களித்து அரசாங்கத்தின் எதிர்ப்பை சம்பாதிக்க கூடாது என்று எண்ணும் இந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள், கிழக்கு முஸ்லிம்களின் எல்லை நிர்ணயங்கள், கல்முனை, தோப்பூர் பிரதேச செயலக விவகாரங்கள், முகுது மஹா விகாரை சிக்கல், கரையோர மாவட்ட கோரிக்கை, மக்கள் இலகுவாக சேவையை பெறக்கூடிய ஆட்பதிவு திணைக்கள பிராந்திய காரியாலயம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிராந்திய காரியாலயம் போன்ற முக்கிய அரச காரியாலயங்களை அம்பாறை கரையோரத்தில் அமைத்தல், மக்களுக்கு பகிர்ந்தளிக்காத வீட்டுத்திட்டங்கள் பகிர்ந்தளித்தல், முஸ்லிம்களின் மதம் சார்ந்த உரிமைகளுக்கான உத்தரவாதம், வடகிழக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற முரண்பாடுகள் போன்ற விடயங்களை அரசின் முக்கிய தலைவர்களான ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் போன்றவர்களிடம் கலந்துரையாடி உறுதியான வாக்குறுதியை பெறுவது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.


இவற்றை அடிப்படையாக கொண்டு உறுதியான வாக்குறுதியை பெற்ற பின்னரே இந்த அரசாங்கம், 2022 ஆம் ஆண்டுக்காக கொண்டு வந்துள்ள வரவு செலவுத் திட்டத்தை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும்.


113 வாக்குகள் மட்டுமே தேவையாக உள்ள நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் உள்ள அரசை எதிர்ப்பது சமூகத்திற்கு செய்யும் தீங்காக எதிர்காலத்தில் மாறிவிட வாய்ப்புள்ளது என்று அச்சம் வெளியிடும் அவர்கள் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும்.


முஸ்லிம்கள் எதிர்நோக்கும் விடயங்களில் தெளிவாக சிந்தித்து தூரநோக்குடன் செயலாற்ற இந்த காலகட்டத்தில் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Visit webs

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default