சஜித்துக்கு சர்வதேச அங்கீகாரம் – ஐக்கிய மக்கள் சக்தி பெருமிதம்!



இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் இலங்கையில் மாற்று அரசாக ஐக்கிய மக்கள் சக்தியையும், மாற்று அரச தலைவராக சஜித் பிரேமதாசவையும் ஏற்றுக்கொண்டுள்ளன. அதனால்தான் சீனா சஜித்துக்கு உதவுகிறது. இந்தியாவும் அவருடன் பேச்சு நடத்துகின்றது – என்று பிரதான எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.


எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் அசோக அபேசிங்க எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,


“இந்த அரசுமீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் கடன்வழங்குவதற்கு நாடுகள் முன்வர மறுக்கின்றன. நிதி தொடர்பான தரவுப் பட்டியல்களில் எமது நாடு தொடர்ச்சியாக பின்நிலைப்படுத்தப்படுகின்றது. இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும்.


எனினும், உலக நாடுகள் ஐக்கிய மக்கள் சக்திமீது நம்பிக்கை வைத்து அதனை மாற்று அரசாகவும், அதன் தலைவர் சஜித் பிரேமதாசவை மாற்று அரச தலைவராகவும் ஏற்றுவருகின்றன. அதனால்தான் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கோரிக்கையை ஏற்று 20 மில்லியன் ரூபா நன்கொடையை சீனா வழங்கியது.


நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இந்தியா சென்று கடன் கேட்டார். அதனை வழங்கலாமா அல்லது இல்லையா என்பது தொடர்பில் அந்நாட்டு உயர்மட்ட அதிகாரிகள் சஜித்தை தொடர்புகொண்டு கேட்கின்றனர். அதாவது உலக நாடுகள் மாற்று தலைவராக சஜித்தை ஏற்றுள்ளன என்பதையே இது வெளிப்படுத்துகின்றது. இது தெளிவாக புரிகின்றது.


சஜித் பிரேமதாச மனிதநேயமிக்க தலைவர். அதனால்தான் எதிரணியில் இரும்கும்போதும் மக்களுக்கு உதவுகின்றார். நாட்டை மீட்பதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுவருகின்றது. சகல துறைகளையும் உள்ளடக்கிய தீர்வு திட்டம் விரைவில் முன்வைக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.” – என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்