Top News

வீடு புகுந்து தாக்குதல் நடாத்தியவர் விளக்கமறியலில்!




வீட்டின் மீது தாக்குதல் நடாத்தியதுடன், வீட்டில் இருந்தவர் மீதும் தாக்குதல் நடாத்தி அவருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 03 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை, குறித்த சம்பவம் பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர்களால் சமாதானமாக முடிக்க முற்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைக்கபெற்றதன் அடிப்படையில் பொறுப்பதிகாரி நேரடியாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, சந்தேக நபரை கைது செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உரும்பிராய் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கோண்டாவிலில் உள்ள வீடொன்றினுள் புகுந்து வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டு, வீட்டில் இருந்தவர் மீதும் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளார்.

குறித்த தாக்குதலில் தலையில் காயமடைந்த நபர் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது காயத்துக்கு 16 இழைகள் போடப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வைத்திய சாலை பொலிஸார், சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.


அதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸார் தாக்குதலாளியையும், தாக்குதலுக்கு இலக்கானவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு, முறைப்பாட்டினை பதிவு செய்யாது நாட்களை கடத்தி வந்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைக்கப்பெற்றதனை நேரடியாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்து நீதவான் முன்னிலையில் முற்படுத்தினார்.

அதனை அடுத்து சந்தேக நபரை எதிர்வரும் 03 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


அதேவேளை குறித்த சந்தேகநபர், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சில பொலிஸ் உத்தியோகஸ்தர்களுடன் நல்லுறவை பேணி வருபவர் எனவும், கடந்த ஆண்டு தன்னுடன் முரண்பட்டுக்கொண்ட இளைஞன் ஒருவரை சில பொலிஸ் உத்தியோகஸ்தர்களை மது போதையில் வாகனத்தில் அழைத்து சென்று, இளைஞனை வாகனத்தில் கடத்தி தாக்கியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


அந் நபர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சில பொலிஸ் உத்தியோகஸ்தர்களுடன் நல்லுறவை பேணி சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வருபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.


அதேவேளை, முன்னர் இருந்த பொலிஸ் பொறுப்பதிகாரி பதவி நிலையிலிருந்து தரமிறக்கப்பட்டு, களனி பொலிஸ் பிராந்தியத்துக்கு சூப்பர் நியூமரரி நிலை (Supernumerary position) என்ற வகையில் இடமாற்றப்பட்டுள்ளார்.


முறைப்பாடுகளை தட்டிக்கழித்தல், கோப்பாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் அச்சுறுத்தல், கையூட்டுப் பெறல், உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பட்டே இடமாற்றம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post