Headlines
Loading...
  வடக்கு நடுகடலில் பதற்றம்: 21 மீனவர்கள் கைது

வடக்கு நடுகடலில் பதற்றம்: 21 மீனவர்கள் கைது






தமிழக மீன்பிடி விசைப்படகுகளை வடமராட்சி மீனவர்கள் நடுக்கடலில் வைத்து சுற்றிவளைத்ததால் பதற்றம் ஏற்பட்டிருந்தது.

இதன்போது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளுடன் 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.

மீனவர்கள் நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது யாழ்பாணம் மாவட்டம் கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த 21 மீனவர்களையும் கைது செய்து மயிலட்டி துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் - வடமராட்சியில் இருந்து பைபர் படகில் கடந்த 27ம் திகதி மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகின் மீது தமிழக மீனவர்களின் மீன்பிடி விசைப்படகு மோதியதில் படகு நடுக்கடலில் மூழ்கியது. அதிலிருந்த இலங்கை மீனவர் மாயமானதாக இலங்கை மீனவர்கள் தரப்பில் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் படகு மூழ்கி மாயமான இரண்டு மீனவர்களில் ஒருவர் நேற்று (31) மாலை சடலமாக கரை ஒதுங்கினார்.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் படகுகளை கைப்பற்றி, மீனவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தொடர்ந்து நேற்றுக் காலை முதல் சாலைகளில் படகுகளை நிறுத்தி மீனவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதனை தொடர்ந்து நேற்றிரவு யாழ்ப்பாண மீனவர்கள் தங்களது பைபர் படகுகளில் கடலுக்குள் சென்று எல்லை தாண்டி வந்துள்ள தமிழக மீனவர்கள் படகுகளை சுற்றி வளைத்து சிறை பிடிக்க முயன்றுள்ளனர்.

அப்போது வடமராட்சி கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்து கொண்டிருந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு படகையும் அதிலிருந்த21 மீனவர்களையும் இலங்கை மீனவர்கள் சுற்றி வளைத்து சிறைபிடித்து மீனவர்களை கரைக்கு கொண்டு வர முயற்சி செய்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் இலங்கை மீனவர்களால் பிடிக்கப்பட்ட இரண்டு படகையும் அதிலிருந்த 21 மீனவர்களையும் கைது செய்து மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

மேலும் நடுக்கடலில் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் வந்த தமிழக படகை சுற்றிவளைக்கும் போது படகில் இருந்த தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டு வீசி தாக்கியதாக இலங்கை மீனவர்கள் குற்றசாட்டியுள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட 21 மீனவர்களையும் இரண்டு படகையும் இன்று யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு பின் பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


0 Comments: