Headlines
Loading...
வர்த்தமானி மக்கள் நலனை கொண்டதாக அமைந்திருந்தால் மதிப்பளிப்போம், போராட்டங்களை முடக்க முயற்சித்தால் கடுமையாக எதிர்ப்போம் - அசேல சம்பத்

வர்த்தமானி மக்கள் நலனை கொண்டதாக அமைந்திருந்தால் மதிப்பளிப்போம், போராட்டங்களை முடக்க முயற்சித்தால் கடுமையாக எதிர்ப்போம் - அசேல சம்பத்



(எம்.மனோசித்ரா)


மின்சாரம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் உள்ளிட்டவற்றை அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் உண்மையில் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்திருந்தால் அதற்கு மதிப்பளிக்கின்றோம். ஆனால் இந்த நடவடிக்கை அரச சேவையாளர்களின் போராட்டங்களை முடக்குவதற்கான முயற்சியாக இருந்தால் அதற்கு கடும் எதிர்ப்பினை வெளியிடுவதாக மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.


அத்தோடு மின்சார சேவை தற்போது அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளமையினால், நாட்டின் தற்போது காணப்படுகின்ற மின் விநியோக நெருக்கடிக்கு காரணமானவர்களையும் அவர்களுடன் செயற்பட்ட மின்சார மாபியாக்களையும் இனங்காண்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அசேல சம்பத் கேட்டுக் கொண்டார்.


கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில், மின்சாரம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


சுகாதார தொழிற்சங்கத்தினரின் போராட்டத்தினால் நோயாளர்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை கருத்திற் கொண்டு அவர்களின் நலன் கருதி ஜனாதிபதியால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்குமாயின் அதற்கு நாம் மதிப்பளிப்போம்.


அதனை விடுத்து தமது உரிமைக்காக போராடும் தொழிற்சங்கங்களின் போராட்டத்தினை முடக்குவதற்காக காணப்பட்ட முயற்சியாக இது அமைந்தால் அதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.


அது மாத்திரமின்றி மின்சார சேவையும் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாட்டில் தற்போது காணப்படுகின்ற மின் விநியோக நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பிலும், அவர்களுடன் செயற்பட்ட மின்சார மாபியாக்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு காணப்படுகிறது.


ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைத்து இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்து நாட்டுக்கு உண்மையை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோருகின்றோம்.


தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் மின் விநியோகத்தை வழங்குவதற்கான மாபியாக்களின் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த சதித்திட்டத்திற்கு அடிபணிந்து விடாமல் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதற்குள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி மின் துண்டிப்பிற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவிக்க வேண்டும்.


அதேபோன்று சுகாதார சேவையும் தற்போது அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளமையால் அண்மையில் அழிந்து பின்னர் கிடைக்கப் பெற்றதாகக் கூறப்படும் தேசிய மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் தரவுகள் குறித்த உண்மையையும் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.


வர்த்தமானி அறிவித்தலின் நோக்கம் மக்கள் நலனைக் கருத்திற் கொண்டது என்றால் அதற்கு நாம் மதிப்பளிக்கின்றோம். அதனை விடுத்து தொழிற்சங்கங்களின் போராட்டங்களை முடக்குவதற்கு இதனைப் பயன்படுத்தினால் அதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.


காரணம் அரச உத்தியோகத்தர்கள் தற்போது பெற்றுக் கொள்ளும் ஊதியம் அவர்களுக்கு போதுமானதாக இல்லை. வாழ்வாதார நெருக்கடிகளினாலேயே அவர்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். எனவே வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அவர்களின் போராட்டங்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றார்.

0 Comments: