Headlines
Loading...
  ஷண்முகா கல்லூரியின் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு

ஷண்முகா கல்லூரியின் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்புதிருகோணமலை ஷண்முகா கல்லூரியில் தற்போதைக்கு
ஆதிக்கம் கொண்டுள்ள புலி ஆதரவு இந்துத்வா சக்திகள் குறித்த பாடசாலை இந்தளவுக்கு வளர்ச்சி பெற கடந்த காலத்தில் முஸ்லிம்கள் அக்கல்லூரிக்கு அளித்த ஆதரவு குறித்து வசதியாக மறந்து போயிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.


1994ம் ஆண்டு அதிகாரத்துக்கு வந்த சந்திரிக்கா அரசாங்கத்தில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் ஜனாதிபதிக்கு அடுத்த அதிகாரம் கொண்ட அரசியல்வாதியாக கோலோச்சிக் கொண்டிருந்தார். பிரதமராக இருந்த ஶ்ரீமாவோ அம்மையார் நோய் வாய்ப்பட்டிருந்த காரணத்தினால் அவர் எதுவித அரசியல் செயற்பாடுகளிலும் தலையிடுவதில்லை. சந்திரிக்காவின் வலது கரமாக இருந்த மறைந்த மங்கள சமரவீர, எஸ்.பி.திசாநாயக்க போன்றோரும் கூட அமைச்சர் அஷ்ரபின் முயற்சிகளுக்கு ஆதரவாக இருந்தனரே தவிர அதற்கு எதிராக எந்தவொரு செயற்பாடுகளிலும் ஈடுபட்டதில்லை.


அவ்வாறான காலகட்டத்தில் தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அமரர் அருணாசலம் தங்கத்துரை, திருமலை மாவட்ட முஸ்லிம்களுடனும் முஸ்லிம் அரசியல்வாதிகளுடனும் நெருங்கிய நட்புறவும் பிணைப்பும் கொண்டிருந்தார். அக்காலத்தில் சமூக சேவைகள் பிரதியமைச்சராக இருந்த முஸ்லிம் காங்கிரசின் எஸ்.எஸ்.எம். அபூபக்கர் (வன்னி மாவட்டம்), திருகோணமலை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஜீப் ஏ மஜீத் ஆகியோருடன் உடன்பிறந்த சகோதரர் போன்ற நெருக்கமான உறவும், பிணைப்பும், சிநேகமும் தங்கத்துரை எம்.பி. கொண்டிருந்தார். நஜீப் ஏ.மஜீத் அவர்களின் தகப்பனாரும், விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டவருமான முன்னாள் தகவல், ஒலிபரப்புத்துறை அமை்சசர் ஏ.எல். அப்துல் மஜீத் எம்.பி.யும் தங்கத்துரை எம்.பி.யும் உடன்பிறந்த சகோதரர்கள் போன்று நட்பும், பாசமும் கொண்டிருந்தவர்கள் என்று கூறினால் அதில் தவறேதுமில்லை.


இந்நிலையில் அவருக்கு திருகோணமலை ஷண்முகா கல்லூரியை தேசியக் கல்லூரியாக தரமுயர்த்தும் ஆர்வம் இருந்தது. அதற்காக அவர் தனது நண்பர்களான நஜீப் ஏ. மஜீத் மற்றும் பிரதியமைச்சர் எஸ்.எஸ்.எம். அபூபக்கர் ஆகியோருடன் நட்பு ரீதியாக கலந்துரையாடியிருந்தார். விடயம் அமைச்சர் அஷ்ரப் இன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அக்காலப் பகுதியில் 1996ம் வருடத்துக்கான தேசிய மீலாத் விழா கொண்டாட்ட ஏற்பாடுகளில் அமைச்சர் அஷ்ரப் மிகவும் வேலைப்பளு கொண்டவராக இருந்தார். அதன் காரணமாக அவரது சொந்த மாவட்டமான அம்பாறையின் கல்முனை ஸாஹிரா மற்றும் சம்மாந்துறை அல்மர்ஜான் பாடசாலைகளின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல்களுக்கு கூட அவர் நேரம் ஒதுக்க மறுப்புத் தெரிவித்திருந்தார். அவ்வாறான பின்புலத்தில் பிரதியமைச்சர் அபூபக்கர் ஒரு அதிகாலை நேரத்தில் பிரதியமைச்சர் அபூபக்கர் ஸ்டென்மோ கிரசண்ட் சதுக்கத்தில் அமைந்திருந்த அமைச்சர் அஷ்ரப் இன் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வன்னி மாவட்டம் தொடர்பான விடயமொன்றுக்காக அழைக்கப்பட்டிருந்தார். கலந்துரையாடலின் பின்னர் அவர் தங்கத்துரை எம்.பி.யின் வேண்டுகோள் குறித்து அமைச்சர் அஷ்ரப் அவர்களுக்கு தெரியப்படுத்தினார். அடுத்த கணம் அமைச்சர் அஷ்ரப் பெரும் கோபம் கொண்டு இரைந்தார். உரத்த குரலில் பிரதியமைச்சர் அபூபக்கர் அவர்களைப் பார்த்து உங்களுக்கு எல்லாம் கொஞ்சமும் அறிவில்லையா? என்று இரைந்தார். அடடா...தவறான சந்தர்ப்பத்தில் இந்த விடயத்தைப் பற்றி பேசிவிட்டோமோ பிரதியமைச்சர் அபூபக்கர் திகைத்துப் போய் நிற்க, சுற்றியிருந்தவர்கள் எல்லாம் சப்தமாக மூச்சுவிடக் கூட அச்சம் கொண்டவர்களாக அடுத்து என்ன நடக்கப் போகின்றதோ என்று நடுக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.


"தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து செயற்பட்டால் தான் சிறந்த அரசியல் தீர்வு பெற்றுக் கொள்ள முடியும் என்பது முஸ்லிம் காங்கிரசின் கொள்கை. செல்வநாயகம் என் அரசியல் வழிகாட்டி. தமிழ் மக்கள் என் மனதில் நிற்கும் உறவுகள். இந்த அரசாங்கத்தில் நான் தமிழ் பேசும் மக்களுக்கான அமைச்சராக இருக்கின்றேனே தவிர வெறுமனே முஸ்லிம்களுக்கான அமைச்சர் அல்ல. இந்த விடயத்தை எப்போதோ என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். ஏன் இவ்வளவு நாட்களாக தங்கத்துரை எம்.பி.யின் வேண்டுகோளை என்னிடம் தெரிவிக்கவில்லை? " என்று அமைச்சர் அஷ்ரப் இரைந்தபோதுதான் பிரதியமைச்சர் அபூபக்கருக்கு போன உயிர் திரும்பி வந்தது. அடுத்த நிமிடம் பரபரவென்று உத்தரவுகள் பறந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் நஜீப் ஏ. மஜீத் கலைந்த ஆடைகளுடன் தூக்கக் கலக்கம் விலகாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் அசித பெரேராவினால் தூக்கி வரப்பட்ட நிலையில் அழைத்து வரப்பட்டிருந்தார். அமைச்சர் அஷ்ரபின் உத்தியோகபூர்வ வாகனத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் தங்கத்துரையும் மாதிவளை நாடாளுமன்ற விடுதியில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தார். மேலதிக தகவல்களைப்பெற்றுக் கொள்ளும் நோக்கில் அமைச்சர் அஷ்ரப் அவர்களின் உதவியாளர்களில் ஒருவர் ஷண்முகா பாடசாலையின் அதிபர் ராஜேஷ்வரி தனபாலசிங்கத்துடன் தொலைபேசித் தொடர்பை ஏற்படுத்த முனைந்து கொண்டிருந்தார்.


தங்கத்துரை எம்.பி. வந்து சேர்ந்தவுடன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நஜீப் ஏ. மஜீத் அமைச்சர் அஷ்ரப் அவர்களின் கடுமையான ஏச்சுக்கு ஆளானார். தன் சொந்த மாவட்டத்தின் தேவைகள் குறித்து சேவையாற்றும் போது அனைத்து விடயங்களிலும் தீவிர கரிசனம் காட்டுமாறும், தமிழ் மக்களை அரவணைத்துச் செல்லுமாறும் அவருக்கு கடுமையான தொனியில் பணிப்புரை விடுக்கப்பட்டது. அதனையடுத்து ஷண்முகா கல்லூரியை தேசிய பாடசாலையாக்கும் விடயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்துரை விபரங்களை முன்வைக்கின்றார். அதே நேரத்தில் ராஜாங்க கல்வி அமைச்சர் ரிச்சர்ட் பத்திரணவை தொலைபேசி அழைப்புக் கொண்டு வந்திருந்த அசித பெரேரா எம்.பி. , கார்ட்லஸ் போனுடன் அமைச்சர் அஷ்ரப் இருந்த இடத்துக்கு வருகின்றார்.


"ரிச்சர்ட் எமதிதுமா..திருகுணாமலே ஸ்கூல் சப்ஜெக்ட் எகக்.. மகே இல்லீமக்.. மம தென் எவன்னம்.. கரல தென்ன.." அமைச்சர் அஷ்ரப் தனக்குத் தெரிந்த சிங்களத்தில் அமைச்சர் ரிச்சர்ட் பத்திரணவுக்கு சற்றேறக்குறைய உத்தரவிடும் தொனியில் வேண்டுகோள் விடுக்கின்றார். அதுவரை காலமும் சண்முகா பாடசாலையின் தரமுயர்த்தல் விடயத்தில் தட்டிக் கழித்துக் கொண்டிருந்த பக்கா இனவாதி ரிச்சர்ட் பத்திரணவுக்கு எந்தப் பதிலும் சொல்ல முடியாத நிலை. அமைச்சர் அஷ்ரப் அவர்களை பகைத்துக் கொண்டால் என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியாதா என்ன?


ஏழு மணிக்கு முன்னதாக அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டு, அசித பெரேரா எம்.பி தலைமையில் ரிச்சர்ட் பத்திரண அமைச்சரின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். கூடவே சண்முகா பாடசாலை தேசியப் பாடசாலையாக தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற வலுவான கோரிக்கையுடன் அமைச்சர் அஷ்ரப் அவர்களின் சிபார்சுக் கடிதம். வேறு வழியேயில்லை. அமைச்சர் ரிச்சர்ட் பத்திரண ஒத்துக் கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றார்.


அதன் பின்னர் தங்கத்துரை எம்.பி காலையில் மீண்டும் அமைச்சர் அஷ்ரப் அவர்களை சந்தித்து விட்டுச் செல்வதற்காக துறைமுக வாயிலில் அமைந்திருந்த அமைச்சின் அலுவலகத்துக்கு வருகை தருகின்றார். அவரை வரவேற்று அமரச் செய்த அமைச்சர் அஷ்ரப் தனது அந்தரங்கச் செயலாளர் ஹசனலி, ஒருங்கிணைப்புச் செயலாளர் அன்வர் இஸ்மாயில் ஆகியோரையும் தன் அறைக்கு வரவழைக்கின்றார்.


"ஹசனலி, இந்த வருசம் நாம தேசிய மீலாது விழாவை கம்பளையில் நடத்தப் போகின்றோம்.அதற்காக கண்டி மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் மூன்றில் ஒரு பங்கை கல்வி அமைச்சுக்கு திருப்பிக் கொடுங்கள். அதனைக்


கொண்டு நம் சகோதரர் தங்கத்துரை எம்.பி திருகோணமலையின் ஷண்முகா பாடசாலையை அபிவிருத்தி செய்து கொள்ளட்டும்" அமைச்சர் அஷ்ரப் உத்தரவிடுகன்றார். அவர் உத்தரவிட்ட கணப் பொழுதுக்குள் அவரின் அலுவலக கடிதத் தலைப்பில் ஆங்கிலக் கையெழுத்தில் அன்வர் இஸ்மாயில் கடிதத்தை தயார் செய்து நீட்ட, கையெழுத்திட்ட அமைச்சர் அஷ்ரப் உடனடியாக அதனை கல்வி அமைச்சுக்கு பெக்ஸ் செய்யச் சொல்லிவிட்டு ஒரிஜினலை தங்கத்துரை எம்.பி.யிடம் கையளிக்கின்றார். அவர் மகிழ்ச்சிப் பெருக்கில் அமைச்சர் அஷ்ரப் அவர்களைக் கட்டி அணைத்துக் கொள்கின்றார்.


இப்படியான பின்புல முயற்சிகளின் பலனாகவே 06.05.1996ம் திகதியன்று குறித்த பாடசாலை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்படுகின்றது. கல்வி அமைச்சின் ஆவணப் பிரிவில் இன்றைக்கும் இது தொடர்பான ஆவணங்களைப் பரிசோதித்து இதில் கூறப்பட்டுள்ள விடயங்களின் உண்மைத் தன்மை குறித்து அறிந்து கொள்ளலாம்.


அது மாத்திரமன்றி அன்றைய காலத்தில் துறைமுக அமைச்சின் கட்டுப்பாட்டில் இருந்த மஹாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக ஏராளம் தமிழ் மாணவர்களுக்கும் நிதியுதவி வழங்குவதற்கு அமைச்சர் அஷ்ரப் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக திருகோணமலை மாவட்ட தமிழ் மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்பட்டது. தங்கத்துரை எம்.பி. ஊடாகவே அவை வழங்கப்பட்டிருந்தன.


அதன் பின்னர் 2002-2005 வரையான காலப் பகுதியில் ஷண்முகா வித்தியாலய நிர்வாகம் அரசாங்க நிதியில் செயற்பட்டுக் கொண்டே விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை வரவழைத்து தனது வளாகத்திற்குள் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இலங்கையின் தேசியக் கொடி கீழிறக்கப்பட்டு புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் தலைவர் எழிலன் மூலம் தமிழீழக் கொடி ஏற்றப்பட்டிருந்தது. தமிழீழ மகளிர் எழுச்சி மாநாடு, இராணுவம் அடக்குமுறைகளில் ஈடுபடுவதாக கூறி மாணவர்களைக் கொண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், கல்லூரிக்கு அண்மையில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ சோதனைச் சாவடிகளை அகற்றக் கோரிய கல்லூரி மாணவர்களின் ஆர்ப்பாட்டம், புலிகளின் நிகழ்வுகளில் அதிபர் உள்ளிட்ட மாணவர்களும் கலந்து கொண்டிருந்தமை போன்ற சம்பவங்கள் காரணமாக பாடசாலைக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய கல்லூரி அந்தஸ்தை ரத்துச் செய்யும் பிரேரணையொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் முதலாம் பதவிக்காலத்தில் 2006ம் ஆண்டின் கடைசிக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இனவாத சிந்தனை கொண்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரும் அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஷண்முகா பாடசாலைக்கு எதிராக அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை ஒன்று திரட்டுவதில் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் விஜேசேகர முக்கிய நகர்வுகளை முன்னெடுத்திருந்தார். திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த மேஜர் ஜெனரல் டி.டி.ஆர்.சில்வா இந்த விடயத்தில் கடுமையான நிலைப்பாட்டுடன் சண்முகா கல்லூரிக்கு எதிரான நகர்வுகளை தூண்டி விட்டுக் கொண்டிருந்தார்.


இது தொடர்பான தகவல்கள் குறித்து அறிந்து கொண்ட அமைச்சர் நஜீப் ஏ. மஜீத் , அவ்வாறான ஒரு விடயம் நடைபெற்றால் தனக்கு ஆதரவான தமிழ் வாக்குகளை இழக்க நேரிடும் என்று தனது கட்சித் தலைவரான அமைச்சர் ரிசாத் பதியூதீனிடம் விடயத்தை முறையிட்டார். அவர் உயர் கல்விப் பிரதியமைச்சராக இருந்தவரும் தமிழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவருமான மயோன் முஸ்தபா அவர்களையும் அழைத்துக் கொண்டு பசில் ராஜபக்‌ஷவிடம் விடயத்தை முறையிட்டார். அவர்கள் இருவரின் பலத்த போராட்டத்தின் காரணமாக சண்முகா பாடசாலையைத் தரமிறக்கும் முயற்சி தோற்கடிக்கப்பட்டது. 2006களின் கடைசியில் மஹிந்த அரசாங்கத்தில் இணைந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், அவரது ஒருங்கிணைப்புச் செயலாளராக இருந்த எம்.எஸ். தௌபீக் ஆகியோரும் கூட இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்தனர். இல்லை என்றால் தேசத்துரோகக் குற்ற்ச்சாட்டின் பேரில் அன்றைய அதிபர் சிறைச்சாலைக்குச் செல்ல நேர்ந்து பாடசாலையும் சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ள நேர்ந்திருக்கும். அவ்வாறு நடக்காது பாடசாலையை காப்பாற்றி , அங்கு கல்வி கற்ற மாணவிகளின் எதிர்காலம் ஆபத்தில் சிக்காமல் பாதுகாத்ததில் ஐந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒட்டு மொத்த அரசாங்கத்தின் மனோநிலைக்கும் எதிராக நடந்து கொண்டு தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயற்பட்டு, பாடசாலையின் கௌரவத்தைப் பாதுகாத்திருந்தனர்.


இந்த வரலாறுகள் எதுவும் தெரியாமல் தான் இன்று புலி ஆதரவு தீவிர சிந்தனை கொண்ட அடாவடிக் கும்பல் ஒன்று அதிபரின் தலைமையில் முஸ்லிம்களுக்கு எதிராக துவேசம் பேசிக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் ஆசிரியைகளுக்கு எதிராக போலிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றது. இனவாதம் பேசி இரு சமூகங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.


அஸ்ரப் அலி பரீட்

0 Comments: