Headlines
Loading...
நஸ்டஈடுகளை வழங்குவதற்கான விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ்

நஸ்டஈடுகளை வழங்குவதற்கான விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ்



அத்துமீறி எல்லை தாண்டி வந்து சட்ட விரோத தொழில் முறைகளைப் பயன்படுத்துகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்களுக்கும் உயிரிழந்த இரண்டு கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் நஸ்டஈடுகளை வழங்குவதற்கான விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.


இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்கள் மருதங்கேணி பிரதேச செயலகத்தை வழி மறித்து இன்று (1) போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், குறித்த இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, "உங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு - இந்தியக் கடற்றொழிலாளர்களினால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைகள் தீர்கப்பட வேண்டும் என்ற விருப்பதுடன் உங்கள் முன்னால் வந்திருக்கின்றேன். என்னுடைய கருத்துக்களில் இருக்கின்ற உண்மையைப் புரிந்து கொண்டு அணி திரள்வீர்களாயின் உங்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைுவற்றித் தருவேன்" என்று தெரிவித்தார்.


அதேவேளை, பருத்தித்துறை முனை கடற்கரை பகுதியில் நேற்று அத்துமீறி நுழைந்து சட்ட விரோத தொழில் முறையைப் பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய இழுவைவலைப் படகுகளை பிடிப்பதற்கு பிரதேசக் கடற்றொழிலாளர் முயற்சித்தமையினால் ஏற்பட்ட பதற்றம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டினால் கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டது.


பருத்தித்துறை முனை கடல் பிரதேசத்தில் சுமார் ஒரு கடல் மைல் தொலைவில் நேற்று இரவு இந்திய இழுவைவலைப் படகுகள் அவதனித்ததும் பொறுமை இழந்த பிரதேச கடற்றொழிலாளர்கள், அவற்றை துரத்திச் சென்று கைப்பற்ற முயற்சித்தமையினால் இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.


குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், உரிய இடத்திற்கு சென்ற கடற்றொழில் அமைச்சர், சம்பவ இடத்திற்கு கடற் படையினரை அனுப்பி வைத்ததுடன், கடற்றொழிலாளர்களையும் ஆறுதல்படுத்தி கரைக்கு திருப்பி அழைத்தார்.


இந்நிலையில் கடற்படையினரால் இரண்டு இந்தியப் மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டதுடன் அதிலிருந்த 21 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.


ஏற்கனவே, கடந்த 27ஆம் திகதி வத்திராயனில் இருந்து தொழிலுக்கு சென்ற இரண்டு கடற்றொழிலாளர்களின் சடலங்கள் நேற்று கரையொதுங்கிய நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் சுமூகமாக தீர்க்கப்படாது விட்டால் இரண்டு நாட்டு கடற்றொழிலார்களும் நடுக் கடலில் மோதும் நிலை ஏற்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியாக தெரிவித்து வந்ததுடன் பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


யாழ். நிருபர் பிரதீபன்

0 Comments: