28ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அதிபர், ஆசிரியர்கள் போராட்டம்

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் இன்று (25) நாடளாவிய ரீதியில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.


இன்றைய தினம் முன்னெடுத்த சுகயீன விடுமுறை போராட்டம் வெற்றிகரமாக அமைந்ததாக ஆசிரியர் தொழிற்சங்கள் தெரிவித்துள்ளன.

 

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அதிபர், ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.


முச்சக்கரவண்டிகளில் சென்றாலும் பாரிய செலவு ஏற்படுகிறது. எனவே இந்த நெருக்கடிகளுக்கு சுமூகமான தீர்வை வழங்குமாறு கல்வி அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

எனவே நாட்டு மக்களுடன் இணைந்து அதிபர், ஆசிரியர்கள் விடுக்கும் கோரிக்கையை ஏற்று அரசாங்கம் பதவி விலக வேண்டும்.


அவ்வாறில்லை எனில் எதிர்வரும் 28ஆம் திகதி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து அதிபர், ஆசிரியர்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.