சாணக்கியனுக்கு எதிராக பெறப்பட்டுள்ள நீதிமன்றம் தடை!


அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் காவல்துறையினரால் நீதிமன்ற உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள குறித்த நீதிமன்ற உத்தரவு களுவாஞ்சிக்குடி காவல்துறையினரால் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில் தனக்கு எதிரான நீதிமன்ற தடை உத்தரவு குறித்து இரா.சாணக்கியன் தெரிவிக்கையில், 14 நாட்களுக்கு வீதியை மறித்தோ பொதுசொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையிலோ எந்தவொரு விடயமும் செய்யக் கூடாது என நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது.


இதுதான் இன்று நாட்டில் அராஜகமான நிலை, ஏன் என்றால் இன்று இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலுமே மக்கள் வீதியிலேயே போராடும் போது, இன்று களவாஞ்சிக்குடி காவல் நிலைய பொறுப்பதிகாரி மாத்திரம் ஒரு நீதிமன்ற தடை உத்தரவினை பெற்றிருக்கிறார்.


இந்த நாட்டில் ஒரு நாடு ஒரு சட்டம் இல்லாவிட்டால் இந்த நாட்டில் தமிழர்களுக்கு இன்னுமொரு சட்டமா? என்பதுதான் நீண்டகாலமாக எங்களுக்கு இருக்கின்ற கேள்வி.


களவாஞ்சிக்குடி காவல் நிலைய பொறுப்பதிகாரி அதனை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கின்றார்.


இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெறாத இடங்கள் இல்லை. அவ்வாறிருக்கையில், களவாஞ்சிக்குடியில் மாத்திரம் இவ்வாறு தடை உத்தரவினை பெற்றுக் கொண்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.


இவ்வாறான விடயங்கள் ஊடாக மக்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முனையும் போது, மக்கள் இதனையும் விட உத்வேகமாக போராட முனைவார்கள்.


நான் இன்று வரை போராட்டங்களை செய்ய வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால் இந்த தடை உத்தரவு கிடைத்ததற்கு பின்னர் போராட்டம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தினை தருகின்றது என்றார்.
Tags