சுயாதீனம் இராஜாங்கத்திற்குள் சுருண்டது. தீர்வே அமைச்சானதா..?

  




அமைச்சு பதவிகள் வேண்டாமென பா.உறுப்பினர்கள் தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்கையில், இரண்டு முஸ்லிம் பா.உறுப்பினர்கள் அமைச்சை பொறுப்பெடுத்துள்ளனர். இது எமது சமூகத்தை எள்ளி நகையாடும் வேலையை தேசிய அளவில் செய்துள்ளது. முஸ்லிம் சமூகத்தின் நேர்மையை தேசியளவில் வெளிப்படுத்தும் அரசியல் வாதிகளை முஸ்லிம் சமூகம் எப்போது தான் பிரசவிக்க போகிறதோ தெரியவில்லை. 


கொரோனா ஜனாஸாக்கள் அநியாயமாக எரிக்கப்பட்டன. இன்னும் எத்தனையோ முஸ்லிம்  சமூகத்தை பாதிக்கும் விடயங்கள் பகிரங்கமாக நடத்தப்பட்டன. இந் நிலையில்  பாராளுமன்றத்துக்கு வந்த 20க்கு ஓடிச் சென்று பா.உறுப்பினர் முஷர்ரப் வாக்களித்திருந்தார். அதன் பிறகு அரசின் ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் கடைக்கு செல்லும் வேலையை பகிரங்கமாக செய்திருந்தார். இனவாதியான உதய கம்மன்பிலவை கூட ஆதரிக்க தயங்கவில்லை. இவர், தனது ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் சில  நியாயங்களை சொல்வார். தனது தீர்மானம் மக்களுக்கானது என்பதே, அவரின் சுயநலத்துக்கு, அவர் பூசும் முலாமாக இருக்கும். இதனை நம்பும் ஓரிருவரும் இருக்கத் தான் செய்கிறார்கள். இக் குறித்த அமைச்சு விடயத்தில் அவரது சுயநலத்தின் உச்சத்தை தெளிவாக விளங்க முடியும். 


ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சை பொறுப்பெடுத்தாலாவது, அமைச்சரவைக்கு வரும் முஸ்லிம்களுக்கு எதிரான, சமூகத்திற்கு எதிரான விடயங்கள் பற்றி பேசி, விவாதிக்க முடியும். இவர் எடுத்திருப்பது இராஜாங்க அமைச்சு. அமைச்சரவை பக்கம் விளையாட்டுக்கும் செல்ல முடியாது. இந்த அமைச்சை வைத்துகொண்டு ஒரு அமைச்சருக்கான சுகபோகங்களை மாத்திரமே அனுபவிக்க முடியும். வேறு எதுவும் செய்ய முடியாது. தற்போது நாலு பேருக்கு தொழில் கூட வழங்க முடியாது. தொழில் வழங்க வேண்டாமென ஜனாதிபதி அமைச்சர்களுக்கு கண்டிப்பான உத்தரவிட்டுள்ளார். 


இவர் எடுத்திருக்கும் அமைச்சு, இவர் தீர்க்கப்போவதாக கூறும் எந்த விடயங்களோடும் சிறிதேனும் தொடர்புபட்ட ஒரு அமைச்சுமல்ல. எமது சமூகம் சார் பிரச்சினைகளோடு தொடர்புபட்ட அமைச்சை எடுத்திருந்தாலாவது ஏதாவது செய்திருக்கலாம். இவ் அமைச்சு பெயரளவில் வழங்கப்படும் அமைச்சு. கடந்த காலங்களில் இவ் அமைச்சை பெற்றவர்கள், இந்த அமைச்சை வைத்து என்ன செய்வது என கேள்வி எழுப்பியிருந்தமை இங்கு நோக்கவல்லது. இவ் விடயங்களை நன்கு ஆராயும் போது இவ் அமைச்சால் சமூகத்துக்கு எவ்வித நன்மையுமில்லை என்பதை ஐயமுற அறிய முடியும். அப்படியானால் நன்மை முழுமையாக அவருக்கு மாத்திரமானதே! அமைச்சுக்கான சுகபோகங்களை அனுபவிப்பார். தனது பெயருக்கு முன் அமைச்சர் என அடையாளமிட்டுக்கொள்ளவார்.  இவர் அரசியலால் சதமேனும் அனுபவிக்க மாட்டேன் என்ற அல்லாஹ்வின் மாளிகையில் பன்னப்பட்ட சத்தியத்தின் நிலை? 


தற்போதைய அரசுக்கு, தன்னை பல இடங்களில் தாழ்த்திக்கொண்டு  கடைக்கு சென்ற பா.உ முஷர்ரப், சில நாட்களுக்கு முன் சுயாதீனமாக இயங்கப் போவாதாக கூறினார். தற்போதைய பொருளாதார சிக்கலின் போது மக்கள் பக்கம் நிற்பதற்கே இம் முடிவை எடுத்துள்ளதாக பாராளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்திருந்தார் ( இவரது இந்த அறிவிப்பை யாருமே சீரியஸாக எடுக்கவில்லை. இவரது எச் செயற்பாட்டை நம்பும் நிலையில் மக்களில்லை. ). ஜனாஸா எரிக்கப்படும் போது முஸ்லிம்கள் பக்கம் நிற்காது, அரசை முரட்டு தனமாக ஆதரித்த இவர், தேசிய பிரச்சினை ஒன்றின் போதாவது, அரசை எதிர்த்து, மக்கள் பக்கம் நிற்கப் போகிறாரே என்ற ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர் பேசிய சத்தம் இன்னும்  காதை விட்டகலாத நிலையில் அமைச்சை பொறுப்பெடுத்துள்ளார். அவரது சுயாதீனம் இராஜாங்க அமைச்சுக்குள் சுருண்டுவிட்டது. அவரின் சுயாதீன அறிவிப்பை அமைச்சுக்கான கோரிக்கையாக அரசு கணக்கிட்டுள்ளது. அழுத பிள்ளையே பால் குடிக்கும் என்ற தியறியையே இங்கு பா.உறுப்பினர் முஷர்ரப் பயன்படுத்தியுள்ளார். இதை விட அசிங்கம் ஏதும் இருக்க முடியுமா? 


தீர்வே விடிவென்பது அவரது கோசம். இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சமூக பிரச்சினைகளை தீர்க்க முயற்சித்திருக்கலாம். அது சாதூரியமான சந்தர்ப்ப அரசியல். அப்படி எந்த சமூக பிரச்சினையும் இது தீர்ந்த பாடில்லை. தீர போவதற்கான சாத்தியமும் தெரியவில்லை. ஒரே ஒரு பிரச்சினை தீர்ந்துள்ளது. அவரின் கௌரவத்தை மெருகூட்ட அமைச்சு கிடைத்துள்ளது. இது தீர்வே விடிவல்ல. தீர்வே அமைச்சாகும். 


துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,

சம்மாந்துறை.