நாடளாவிய ரீதியில் வெள்ளிக்கிழமை ஹர்த்தால் - அரசாங்கத்திற்கு மீண்டும் 4 நாட்கள் கால அவகாசம்



(எம்.மனோசித்ரா)


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (6) நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. சகல பகுதிகளிலும் கடைகளை மூடி ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்குமாறு அனைவரிடமும் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.


நாளைமறுதினம் ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கத்திற்கு 4 நாட்கள் கால அவகாசம் வழங்குவதாகவும், அதன் பின்னரும் பதவி விலகவில்லை எனில் 11 ஆம் திகதி முதல் தொடர் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.


கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட பல தரப்பினராலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.


அன்றைய தினம் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருந்ததோடு, புகையிரத சேவைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தன.


வங்கி உள்ளிட்ட சில அரச திணைக்களங்களை சேவையாற்றும் அரச ஊழியர்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.


இதன்போது ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் மே 6 ஆம் திகதி வரை போராட்ட வாரமாகவும் தொழிற்சங்கங்களினால் அறிவிக்கப்பட்டன.


அதற்கமைய போராட்ட வாரத்தின் நிறைவு நாளான நாளை இவ்வாறு ஹர்த்தலில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.


தற்போது அரச தாதிகள் சங்கம், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் தாம் ஹர்த்தாலுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன.


அத்தோடு மருத்துவ துறைசார் தொழிற்சங்கங்களும் ஹர்த்தாலுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ள போதிலும், மக்களின் நலன் கருதி பணியில் ஈடுபடுவதாக கையெழுத்திடாமல் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.


எனவே வைத்தியசாலை சேவைகளில் நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டியேற்படாது. எனினும் புகையிரதம், தபால், மின்சாரம் மற்றும் தனியார் போக்குவரத்து சேவை தொழிற்சங்கங்கள் இன்று வியாழக்கிழமை தமது முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளன.


அதற்கமைய இல்லங்கள், வியாபார நிலையங்கள், தொழிற்சாலைகளில் கருப்பு கொடிகளை ஏற்றுமாறும், கருப்பு நிற ஆடையணிந்து அருகிலுள்ள நகர்பகுதிகளில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளுமாறும், பெருந்தோட்டத் தொழிலாளர்களை தொழிலுக்குச் செல்லாமல் எதிர்ப்பினை வெளியிடுமாறும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது.


இதன்போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வன்முறைக்கு இடமளிக்காது போராட்டத்தைப் பாதுகாத்து அரசாங்கத்தை விரட்டியடிக்கும் போராட்டத்தைச் வெற்றியடைச் செய்வோம் என்றும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.