“அந்நியச் செலாவணியை உள்ளீர்க்கும் பொறுப்புக்கள் எல்லோருக்கும் உடையது” - அசாத் சாலி!


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணும் என்ற நம்பிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், புலம்பெயர் இலங்கையர்களும் உதவ முன்வர வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், “அந்நியச் செலாவணி வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை சரி செய்வதற்கு, நாட்டிற்குள் அதிகளவு டொலர் வர வேண்டும். புலம்பெயர் இலங்கையர்கள், வௌிநாடுகளில் இதைச் சேகரித்து இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பும் முயற்சிகளில் இறங்குவது அவசியம். இவ்விடயத்தில், குறுகிய மனநிலையில் செயற்படக் கூடாது.


சகல கட்சிகளின் தலைவர்களும் ரணில் தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க முன்வந்திருப்பதால், பொருளாதார மேம்பாடுகளை அடைந்துகொள்ளும் வழிகள் விரைவில் திறக்கப்படலாம். எனவே, இளைஞர்கள் இவ்விடயம் பற்றி சிரத்தை கொள்வதுதான் இன்றைய அவசரத் தேவை.


உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிப்பதற்கு தேவையான அமைதியை நாட்டில் கொண்டுவரும் பொறுப்பையும், சுற்றுலாப் பயணிகளை அதிகளவு உள்ளீர்க்கும் சூழலையும் இளைஞர்களே ஏற்படுத்த வேண்டும்.


தனித்தனி அஜந்தாக்களின் நாட்டின் இன்றைய சூழலை பாவிப்பதற்கு முயல்வது, பொருளாதாரத்தை அடிமட்டத்தில் வீழ்த்திவிடும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.